செவ்வாய், 27 ஜனவரி, 2015

ஒரே உடையில் ஒபாமா: அரை மணிக்கு ஒரு ஆடை அணிந்த மோடி! இளங்கோவன் கிண்டல்!

நூறுநாள் தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தை பாரதீய ஜனதா அரசு ரத்து செய்ய முயற்சிப்பதை கண்டித்து, சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக காங்கிரஸ் கட்சி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் செவ்வாக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:–ஏழை–எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதை மோடி அரசு செய்து வருகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்யும் முயற்சியில் இந்த அரசு ஈடுபடுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் ஏழை–எளிய பெண்கள், ஆதரவற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதிக பயன் அடைந்து வந்தனர்.ஐ.நா.சபையே இந்த திட்டத்தை புகழ்ந்து உள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் இதுபோன்ற திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை ஒழிக்க மோடி அரசு எல்லா வழியிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.


தமிழகத்தில் 350 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டம் தற்போது 64 வட்டாரமாக குறைக்கப்பட்டு உள்ளது. சாதாரண ஏழை–எளிய மக்கள் பற்றி மோடிக்கு அக்கறை அல்லை. அவர் மன்னர் பரம்பரை போன்று செயல்படுகிறார். 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 கோடி மக்களின் நிலையை உணராமல் உள்ளார்.

அதனால்தான் குடியரசு தின விழாவில் கூட ஆடம்பரத்தை பின்பற்றி உள்ளார். உலக பணக்கார நாட்டின் அதிபரான ஒபாமா காலையில் இருந்து மாலை வரை ஒரே உடை அணிந்து இருந்தார். ஆனால் மோடி அரை மணி நேரத்துக்கு ஒரு ஆடை அணிந்தார்.

நான் அவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் சொல்லவில்லை. ஏழை மக்களின் நிலையை அறியாதவர் என்ற அடிப்படையில் கூறுகிறேன். எனவே அவர் மக்கள் குறைகளை போக்குவதில் கவனம் செலுத்தவில்லை. மோடி அரசை விரைவில் தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

படங்கள்: ஸ்டாலின்  nakkheeran.in

கருத்துகள் இல்லை: