செவ்வாய், 27 ஜனவரி, 2015

சிதம்பரம் தனிக்கட்சி? காங்கிரசில் ஓரங்கட்டியதால் விரக்தி?

ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை சென்னை: காங்கிரசில் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டுள்ள சிதம்பரம், தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக காங்கிரசில் ஜி.கே.வாசன், இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சிதம்பரம் என பல கோஷ்டிகள் இருந்தன. மேலிடத்தில் அதிக செல்வாக்காக இருந்த சிதம்பரத்தின் பேச்சை கேட்டு, வாசனையும் அவரது ஆதரவாளர்களையும் புறக்கணித்ததால் அவர் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார். அவருடன் 60 சதவீதத்துக்கும் அதிகமான தொண்டர்களும், இரண்டாம் கட்டத் தலைவர்களும் சென்று விட்டனர்.ஜெயந்தி நடராஜனை போல பாஜகவுக்கு துண்டு வீசினாலும் வீசுவாரு ?
வாசன் இடத்தை நிரப்ப யாரை தலைவராக நியமிக்கலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, சிதம்பரத்துக்கு மாநில தலைவர் பதவியை கொடுத்தால், இருக்கிற தலைவர்களும் வாசன் பின்னால் சென்று விடுவார்கள். அதனால் கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டுமென்றால் இளங்கோவனை தலைவராக்கினால்தான் நல்லது என்று  முடிவு செய்து இளங்கோவன் தலைவராக்கப்பட்டார். இது சிதம்பரத்துக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

சிதம்பரம், அதிர்ச்சியை வெளிக்காட்டி கொள்ளாமல் இரண்டு முறை கட்சி அலுவலகம் வந்தார். ஆனால் அவருக்கு பழைய செல்வாக்கு இல்லாததாலும் அவருடன் இருந்த பலரும் வேறு அணிக்கும், வாசனுடனும் சென்று விட்டதால் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். அதே நேரத்தில், சிபிஐ அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி வழக்குத் தொடர்ந்தார். இதனாலும் கட்சி நடவடிக்கைகளில் பெரிதாக கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார்.இந்நிலையில், கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காமராஜர் திட்டங்களை மட்டும் பேசி பயனில்லை. புதிய திட்டத்துடன் மக்களை சந்திக்க வேண்டும் என்றார்.

இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காமராஜர், மூப்பனார் படங்களை உறுப்பினர் அட்டையில் போடக் கூடாது என்று மேலிடம் தடை விதித்ததாக சொல்லித் தான் வாசன் காங்கிரசை விட்டு வெளியேறினார். காங்கிரஸ் என்றாலே காமராஜர் பெயரை சொல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில், அவரது திட்டத்தை கார்த்தி சிதம்பரம் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மேடையில் இருந்த இளங்கோவன், அதை கண்டித்தார்.இதற்கிடையில், காங்கிரசில் இருந்த 23 மாவட்ட தலைவர்கள் வாசன் கட்சிக்கு சென்று விட்டனர். அந்த இடங்களை நிரப்பும்போது தனது ஆதரவாளர்களுக்கு பாதி இடங்களை கொடுக்க வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இளங்கோவன் மறுத்து விட்டார்.

தங்கபாலு உள்ளிட்ட தலைவர்களும் சிதம்பரத்துக்கு அதிக இடங்களை கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலிடத்தில் இளங்கோவன் பற்றி சிதம்பரம் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் புகாரை மேலிடம் கண்டுகொள்ளவில்லை. மாறாக சிதம்பரத்தை புறக்கணிக்க ஆரம்பித்தது. இதனால், சிதம்பரத்துக்கும், இளங்கோவனுக்கும் மோதல் அதிகரித்தது. இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கடந்த வாரம் கார்த்தி சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, தங்களை ஓரங்கட்ட நினைக்கும் காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமானால் புதிய கட்சி அல்லது பழைய அமைப்பான ஜனநாயக பேரவையை மீண்டும் ஆரம்பிப்பது நல்லது என்று பேசப்பட்டுள்ளது.

இது குறித்து சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தெரிந்ததும் கார்த்தி சிதம்பரத்துக்கு இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பினார். இது குறித்து மேலிடத்திலும் புகார் செய்தார். இதனால் சிதம்பரம் எப்போது வேண்டுமானாலும் காங்கிரசில் இருந்து வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் பின்னால் பெரிய அளவில் தொண்டர்கள் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். - See more tamilmurasu.org

கருத்துகள் இல்லை: