வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

5லட்சம் ஜிப்சிகளை பலி கொண்ட Hitler. ஜிப்சிகள் பேசும் மொழி சம்ஸ்கிருதத்திர்க்கு நெருக்கம்


நாடோடிகளின் இனிய இசை(1) : T .சௌந்தர் மனித வாழ்வில் புலம் பெயர்தல் என்பது நீண்ட காலமாக நடைபெற்றுவரும் ஒன்றாகும்.இப்புலம்பெயர்வு ஏதோ ஒரு விதத்தில் சிலருக்கு வழமான எதிர்காலத்தை உருவாக்கவும் சிலருக்கு நிர்ப்பந்தங்கள் நிறைந்த வாழ்க்கைக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது.புலம் பெயர்கின்ற மக்கள் தாம் செல்லும் நாடுகளில் தமது சுய அடையாளத்துடன் குறிப்பிட்ட நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அங்கீகரித்து வாழும் முறைமையையும் ( Intergration ) , முற்று முழுதாக சுய அடையாளத்தையும் ,பண்பாட்டையும் இழந்து குறிப்பிட்ட நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் ,பண்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு முழுமையாக அவர்களுடன் கலந்து விடும் ( Assimilation ) வாழ்க்கை முறைமையையுமான இரண்டு போக்குகளையுடையவர்கலாக இருக்கின்றார்கள்.

மற்றொரு சமுதாய பண்பாட்டாலும் பழக்க வழக்கங்களாலும் முற்றாக உள்வாங்கப்பட்ட சமுதாயத்திலிருந்து தனது சந்ததியின் வேரைத் தேடி அலைந்து தனது மூலவேரின் சால்பைக் கண்டறிந்த மனிதன் அதுவே தனது வரலாறு எனக் கண்டான்.இதற்க்குச் சான்றாக ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆபிரிக்க நாடுகளிலிருந்து அடிமைகளாகக் கொண்டு சென்ற ஆபிரிக்க மாக்களின் வரலாற்று ஆவணமாக ” The Roots ” ( வேர்கள் ) என்ற நூல் அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின எழுத்தாளரான அலெக்ஸ் ஹெலி ( Alex Haley ) என்பவரால் எழுதப்பட்டது.இரு நூறு ஆண்டுகள் மறைந்தும் தனது வேரைத் தேடிச் சாதனை படைத்த மனிதன் அளித்த வரலாற்று ஆவணம் அது.
புலம் பெயர்வுகள் மனிதர்களை பல வழிகளில் மேம்படுத்தவும் அவர்களிடையே கலப்புகளை ஏற்ப்படுத்தவும் வழி செய்ததோடு பலவிதமான படிப்பினைகளையும் கொடுத்துள்ளன.இது ஒரு புறமிருக்க புலம்பெயர்ந்து புதிய கண்டு பிடிப்புகளைச் செய்த சாதனையும் புதிய நாடுகளை வென்றடக்கி ஆக்கிரமிப்புச் செய்த சம்பவங்களும் மனித வரலாற்றுள அடங்குவனவே.
புலம்பெயர்ந்து நாடோடிகளாக தமது வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்கள் இந்த நூற்றாண்டிலும வாழ்ந்து வருகிறார்கள்.இப்படி ஊர் விட்டு ஊரும் ,நாடு விட்டு நாடும் செல்லும் மக்களை நாடோடிகள் என அழைக்கின்றனர்.” ஒவ்வொரு மனிதனும் தனது வீட்டை விட்டு வெளியேறி சிறிது காலமாவது ஊர் சுற்ற வேண்டும் “என மேதை ராகுல சங்கிருத்தியாயன் கூறினார்.” இப்படிப்பட்ட மக்களே புது அனுபவங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்ப்படுத்த வழி செய்தனர் ” என்பது அவரது ஆணித்தரமான கருத்து.இதற்காகவே அவர் தனது “ஊர் சுற்றிப் புராணம் “என்ற புகழ் பெற்ற நூலை எழுதினார்.
ராகுல சங்கிருத்தியாயனின் குறிப்பிட்ட அறிவார்ந்த கருத்துக்கள் வெளிவர பல நூற்றாண்டுகலுக்கு முன்பே மேற்கு நோக்கி புலம் பெயர்ந்த மக்களான ஜிப்சிகள் பற்றியும் அவர்களது இசைபற்றியும் கூறுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
உலகெங்கும் பரந்து பட்டு வாழும் இந்நாடோடி மக்கள் ஐரோப்பாவிலும் ,குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ருமேனியா ,ஹங்கேரி ,செக்கோஸ்லாவாக்கிய போன்ற நாட்களிலும் கணிசமான அளவில் வாழ்ந்து வருகிறார்கள்.ஐரோப்பாவில் வாழும் இனங்களில் மிகப் பெருந்த்தொகையான சிறுபான்மையினமாக இவர்கள் கருதப்படுகின்றனர்.உலகில் பெரும்பாலான நாடுகளில் சிறுபான்மையான உள்ள மக்கள் பலவகையான துன்பங்களுக்கு உள்ளாவது போலவே இவர்களும் அரச ஒடுக்குமுறைக்கும் ,புறக்கணிப்புக்கும் ,இனவெறியர்களின் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வந்திருக்கிறார்கள்.சமீப காலமாக முன்னாள் சோஷலிச நாடுகளாகிய கிழக்கு இர்போப்பிய நாடுகளில் ஏற்ப்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பின் இவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ருமேனியாவில் சீஜெச்கோ என்னும் போலி கம்யுனிச தலைவரின் ஆட்சியில் ” நாம் பல துன்பங்களை அனுபவித்த போதிலும் சில உரிமைகளை அங்கு தான் பெற்றோம்.இன்று ஜனநாயகம் என்ற பெயரில் மாற்றங்கள் ஏற்ப்பட்ட பின்னர் தான் எம்மின மக்கள் மீது பலவித வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.” என்று 1991 நடைபெற்ற உலக ஜிப்சிகள் மாநாட்டு அறிக்கை உண்மையை வெளிப்படுத்தியது.
நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழாமல் தங்கள் கூடார வண்டிகளையே வதிவிடமாகப் பயன் படுத்தி நாடோடிகளாக வாழ்க்கை நடாத்துவது இவர்களின் கடந்த ஆயிரம் வருடகால மரபாக இருக்கிறது.ஆயினும் இன்றைய சமூக மாற்றங்களை அனுசரித்து நாட்டின் ஏனைய மக்களைப் போலவே நிரந்தரமான வதிவிடங்களில் சிறு தொகையினரான ஜிப்சிகள் இன்று வாழ்ந்து வருகிறார்கள்.பலர் மரபுரீதியான தமது நாடோடி வாழ்க்கையை கைவிடாது நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் நகர்த்தக் கூடிய சிறு வீடு போன்ற மூடு வண்டிகளில் ( caravans ) தமது வாழ்க்கையைத் தொடருகின்றனர்.
ஆடல்,பாடல் போன்ற நுண்கலைகளில் மிகவும் அக்கரையுள்ளவராகத் திகழும் இவர்கள் தமக்கே உரிய இசைக்கலையிலும் சிறந்து விளங்குகின்றனர்.சொத்துக்களைச் சேர்ப்பதிலும் ,ச்மபாதித்து வைப்பபதிலும் அக்கறை காட்டாத இவர்கள் கலைகளைத் தங்கள் உயிராகக் கருதுகின்றனர்.வாழ்க்கைத் தேவைகளுக்காக வேலை செய்யும் இவர்கள் குறி சொல்லுதல் ,சாத்திரம் பார்த்தல் ,மாஜிக் வித்தை செய்தல்,பாத்திரம் ஒட்டுதல் போன்ற வேலைகளிலும் ,இக்காலத்தில் சிறு சிறு வியாபாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.ஆயினும் இவர்களில் பலர் இசையையே தமது ஜீவனோபாய தொழிலாகக் கொண்டு வாழின்றனர்.ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவரேனும் பாடவோ,ஆடவோ,வாத்தியக் கருவிகளில் ஏதேனும் ஒன்றை இசைக்கவோ தெரிந்தவராகவே இருப்பர்.பல வர்ண உடைகள் அணிந்து ஆடுகின்ற போது அவர்களது அங்க அசைவுகளில் நளினங்கள் காட்டியும் ,பாடும் போது இசைக்கு மெருகு சேர்க்கும் கமகங்களை வெளிப்படுத்தியும் தங்களை ஐரோப்பிய மக்களிடமிருந்து மிகத் துல்லியமாக வேறுபடுத்திக் காட்டுவதில் வல்லவர்கள்.இசையில் மிகுந்த ஈடுபாடுடைய இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் தமக்கென சில மரபுகளை பேணி வந்ததன் மூலம் ” இது ஜிப்சிகள் இசை ” என்று இசை ஆராய்ச்சியாளர்கள் விசேடித்துக் கூறுமளவுக்கு தங்கள் இசையை வளர்த்துக் காத்துள்ளார்கள்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வாழும் இவர்களை அந்தந்த நாட்டு மக்கள் வெவ்வேறு விதமாகப் பெயரிட்டு அழைக்கின்றனர்.உதாரணமாக நோர்வே ,ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில் சிக்கொயின ( sigojerne ) என்றும்,ஜெர்மனியில் சிக்கூன (zigorne ) என்றும் ,பிரித்தானியாவில் ஜிப்சீஸ் ( gypsies ) என்றும், இத்தாலியில் ரோம் ( rom ) ,துருக்கியில் சிக்கேனா ( Tzigane ) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இப்படி பலவிதமாக அழைக்கப்படும் இம்மக்களின் பூர்வீகம் பல் காலமாக புரியாத புதிராகவே இருந்தது.ஆயினும் வரலாற்று ஆய்வாளர்கள் இவர்களது பூர்வீகம் இந்தியா தான் என தெரிவிக்கின்றனர்.கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன்பு இவர்கள் வட மேற்கு இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கிப் புலம் பெயர்ந்ததாகவும் கூறுகின்றார்கள்.இந்தியாவில் ஏற்ப்பட்ட கடும் பஞ்சமோ ,போரோ இதற்க்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.இப்புலம் பெயர்வு ஈரான் ஊடாக இடம் பெற்று ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி எகிப்த்திற்க்கும், வேறொரு பகுதியினர் துருக்கி ,ரஷ்யாமற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும்இட்டுச் சென்றதாகக் கருதப்படுகிறது.
இவர்களின் புலம் பெயர்வு பல நாடுகளுக்கு ஊடாக நடைபெற்றிருந்தும் இது குறித்த வரலாற்றுப் பதிவுகள் தெளிவாகக் கிடைக்கவில்லை. .அதிர்ஷ்ட வசமாக ஈரானிலிருந்து கிடைத்துள்ள குறிப்பொன்று இவர்களது பூர்வீகம் பற்றி பிரஸ்தாபிக்கிறது. ஈரானில் வாழ்ந்த மகாகவி பாரோடோவ்ஸ்க்கி
( Ferodowski ) என்பவர் கி.பி.1011 ம் ஆண்டு எழுதிய நூலில் கி.மு. 420 ம் ஆண்டளவில் 10 ,000 லூரி இசைக்கலைஞர்கள் ஈரானுக்குக் கொண்டு வரப்படார்கள் ” எனக் குறிப்பிடுள்ளார்.இக் கலைஞர்களின் சந்ததியினராக இவர்கள் இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறாக்கள்.எயனும் ஐரோப்பாவில் தலை காட்டும் வரை இவர்கள் பற்றிய குறிப்புகள் தெளிவாக இல்லை என்பதும் வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.
கி.பி.1322 ம் ஆண்டு கிரேக்க நாட்டைச் சேர்ந்த பாதிரியாரான சைமியோன் சைமிஜோனிஸ்( Simeon Simeonis ) எழுதிய குறிப்புகளே ஐரோப்பாவில் கிடைக்கின்ற தொன்மையான ஆதாரமாகக் கணிக்கப்படுகின்றன.புகழ் பெற்ற ஓவியரும் ,விஞ்ஞானியுமான லியோனார்டோ டாவின்சி ( Leonardo davinci ) வரைந்த கோட்டோவியங்களும் ஜிப்சிகளின் உருவ அமைப்பைச் சித்தரிக்கின்ற வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகின்றன.எனினும் ஈரானிய பாரோடோவ்ஸ்க்கி எழுதிய குறிப்புகளே மிகத் தொன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வரை தங்களது மொழியைப் பேசித் தமது தனித்துவத்தைப் பேணி வரும் ஜிப்சிகள் தமது மொழியை ரோம் ( Rom ) எனப் பொதுவாகக் கூறுகின்றனர்.இந்த மொழிக்கு எழுத்து வடிவம் இல்லாத காரணத்தால் இவர்களது பூர்வீகம் அல்லது தாயகம் தொடர்பான குறிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்ல.பேச்சு மொழியாக இது இன்றும் விளங்குவதால் அதனை வைத்து இவர்களது பூர்வீகம் எது என்பதை மொழியியல் வல்லுனர்கர் கணித்திருக்கிறார்கள்.1780 ம் ஆண்டு ஜெர்மன் தத்துவ வாதியான ஹைன்றிச் மோர்றிச் ( Heinrich Moritz ) நடாத்திய ஆய்வுகளிலிருந்து ஜிப்சிகள் பேசும் ரோம் மொழிக்கும் இந்தியாவில் இன்று வழக்கொழிந்து போன சம்ஸ்கிருதத்திர்க்கும் நெருக்கம் உண்டு என்ற முடிவுக்கு வந்தார். அவரது ஆய்வுகளை பிற்கால வரலாற்று அறிஞர்களும் ஒப்புக் கொண்டனர்.
தமது மொழியை ரோம் ( Rom ) எனக் குறிப்படும் இவர்கள் தங்களை ரோமனிஷாள் ( Romanizal )என அழைக்கின்றனர்.ரோமனிஷாள் என்பதின் அர்த்தம் மனிதர்கள் என ஜிப்சிகள் கூறுவர்.மனுஷாள் என்ற சொல் வட மொழியில் மனுஷ் என்பதற்கு இணையானது எனவும் அதன் அர்த்தம் மனிதர் என ஜிப்சிகள் கூறுவர்.இந்தியப் பெயர்களுடன் இவர்களது பெயருக்குமுள்ள நெருக்கமும் ஆதாரமாகக் காட்டக்கூடியவைகளாக உள்ளன.உதாரணமாக சில : மாலா ( Mala ), பிபிஷ் ( pipish ),நனோஷ் (nanosh ), சுர்க்கா ( Zurka ),பூலிகா ( Pulika ),ரஞ்சிக் (Ranjik ).
கி.பி.13 ம் நூற்றாண்டளவில் கிரேக்கத்தில் இவர்கள் குடியேறிய பின் கி.பி.14 ம் நூற்றாண்டளவிலேயே ஏனைய வட ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி ,டென்மார்க், நோர்வே ,ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் தென்பட்டனர்.ஆரம்ப நாட்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற இவர்கள் நாளடைவில் வெறுத்து ஒதுக்கப் பட்டனர்.நம்பத் தகுந்த நடவேடிக்கைகளைக் கொண்டவர்களல்ல என்றும் நாட்டை விட்டே துரத்தப்பட வேண்டியவர்கள் எனவும் அன்றைய கிறிஸ்தவ மத பீடம் பிரச்சாரம் செய்தது. அதற்க்குக் அவர்களது கல்வியின்மையும் ,அறியாமையும், பழக்க வழக்கங்களைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமையும் காரணமாக அமைந்தது.
கி.பி.1400 களின் இறுதியில் இவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கொடூரமானவையாக நடந்தேறின.ஜிப்சி இன ஆண்கள் படுகொலை செய்யப்படனர்.பெண்கள்,குழந்தைகள் நாட்டைவிட்டே துரத்தியடிக்கப்பட்டனர்.
பலர் பண்ணைமார்களின் பண்ணைகளில் பலவந்தமாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். குறி ,சோதிடம் ,வைத்தியம் பார்த்த பெண்கள் மோகினிபேய் ( Witch ) எனப் பழி சுமத்தப்பட்டு எரியும் நெருப்பில் உயிருடன் வீசப்பட்டனர். மத்திய காலத்திலிருந்து 18 ம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் மோகினிப்பேய் என அழைக்கப்பட்டு அறிவுக்கூர்மை உடைய பெண்கள் உயிருடன் கட்டப்பட்ட நிலையில் நெருப்பில் கொழுத்தப்பட்டனர். இந்தக் கொடுமைகளை முன் நின்று நடாத்தியவர்கள் அன்றைய கிறிஸ்தவ மதபீடத்தினரே என்பது ஐரோப்பாவின் இருண்ட வரலாறு.இப்படிபட்ட சூழ்நிலையில் ஐரோப்பிய பெண்களே கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்றால் ஜிப்சிகள் பற்றி கூறத்தேவையில்லை.
ஜிப்சிகள் மீதான வன்முறையின் உச்சமாக அடோல்ப் ஹிட்லரின் ( Adolf Hitler ) வருகை அமைந்தது.ஹிட்லரின் நாஜிக்கட்சியின் உத்தியோகபூர்வமான இனவாதக் கொள்கைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன.ஹிட்லரின் தூய ஜெர்மன் ஆரிய இனக் கொள்,அந்த இனத்தை ஏனைய தூய்மையற்ற இனங்களிலிருந்து காக்க மற்ற இனங்களை அழித்தொழிக்கும் நடவெடிக்கைகளும் செயற்ப்படுதப்பட்டன.இந்த அடிப்படையில் யூதர்கள்,ஜிப்சிகள் பலவிதமான சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பபட்டனர்.பெண்கள் ,குழந்தைகள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டு அடைக்கப்பட்டனர்.வேலை செய்யும் வலிமை வாய்ந்த ஆண்கள் ,பெண்கள் தவிர்ந்த ஏனையோர்கள் விஷ வாயு பொருத்தப்பட்ட அறைகளில் அடைத்து படுகொலை செய்யப்பட்டனர்.இவ்விதம் படுகொலை செய்யும் தனது திட்டத்தை ஹிட்லர் சிறுபான்மை இனம் மீதான ” இறுதித் தீர்வு ” ( Final Solution) என கௌரவமாக அழைத்தான்.
நாசி ஆதரவாளர்கள் அதனை தலையில் வைத்துக் கொண்டாடினர்.ஹிட்லரின் இந்த “இறுதித்தீர்வு ” 5 மில்லியன் யூதர்களையும் , 5லட்சம் ஜிப்சிகளையும் பலி கொண்டது.

inioru.com/?

கருத்துகள் இல்லை: