சனி, 7 ஏப்ரல், 2012

சி.பி.ஐ., அமைப்பை மூட இதுவே சரியான நேரம்: ராஜஸ்தான் ஐகோர்ட் பாய்ச்சல்

ஜெய்ப்பூர்: தாராசிங் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், சிலருக்கு சாதகமாகவும், மற்ற சிலருக்கு பாதகமாகவும், சி.பி.ஐ., நடந்து கொண்டது, அந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை பாழ்படுத்திவிட்டது. சி.பி.ஐ., அமைப்பை மூட, இதுவே சரியான நேரம் என, ராஜஸ்தான் ஐகோர்ட் காட்டமாகக் கூறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், சாராய கடத்தல்காரர் தாராசிங் என்பவர், கடந்த 2006 அக்டோபரில், போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநில அப்போதைய டி.ஜி.பி., ஜெயின், பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜேந்திர ரத்தோர் ஆகியோரும், இதில் அடங்குவர்.


பாரபட்சம்: இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கைதானவர்களில் ஒருவரான, தலைமைக் காவலர் ஜாக்ராம் என்பவர், ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தாராசிங் போலி என்கவுன்டர் வழக்கை, சி.பி.ஐ., வேண்டுமென்றே இழுத்தடிக்கிறது. சி.பி.ஐ.,யால், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட சக்சேனா என்பவர், டில்லியில் வசிக்கிறார். அவர் எந்த நாளில், இங்குள்ள சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக விருப்பம் தெரிவிக்கிறாரோ, அதற்கேற்ற வகையில், வழக்கு விசாரணை மாற்றப்படுகிறது. இது சரியல்ல. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விவகாரத்தில், பாரபட்சமான அணுகுமுறையை சி.பி.ஐ., பின்பற்றுகிறது. சிலருக்கு சாதகமாக நடக்கிறது' என, தெரிவித்திருந்தார்.

சரியான நேரம் இது: இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி மகேஷ் சந்திர சர்மா கூறியதாவது: தாராசிங் போலி என்கவுன்டர் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலரை, சி.பி.ஐ., பாரபட்சமாக நடத்துவதாக தோன்றுகிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு, டீ, காபி போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதோடு, அவர்களுக்கு கூடுதல் மரியாதையும் கொடுக்கிறது. கோர்ட் காவலை அவர்களின் வசதிக்கேற்ற வகையில் மாற்றி அமைக்க உதவுகிறது. அதேநேரத்தில், மற்ற சிலர் விஷயத்தில், அப்படி நடந்து கொள்வதில்லை. அவர்களை அதிக நாட்கள் கோர்ட் காவலில் வைக்கும்படி கேட்கிறது. இந்த விவகாரங்களை எல்லாம் பார்க்கும் போது, என்ன நோக்கத்திற்காக சி.பி.ஐ., ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் பாழ்பட்டுள்ளது தெரிகிறது. லட்சியங்கள் மற்றும் நோக்கங்களுக்கு முரணாக, சி.பி.ஐ., செயல்படுவதால், அந்த அமைப்பை மூட, இதுவே சரியான தருணம். இவ்வாறு நீதிபதி கூறினார்.

கருத்துகள் இல்லை: