திங்கள், 2 ஏப்ரல், 2012

ஒரே நேரத்தில் நேரு சகோதரர்களை தீர்த்துக்கட்ட சதி?

திருச்சி: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட அன்று, சென்னையிலிருந்து திருச்சி வந்த நேருவின் காரில் டயர் கழன்ற சம்பவம், தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒரே சமயத்தில் சகோதரர்களை தீர்த்துக்கட்ட நடந்த சதியா என்று தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 29ம் தேதி, "வாக்கிங்' சென்றபோது, மர்மக் கும்பலால் கடத்தி, கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம், நேருவுக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் மூலம் நேரு, ராமஜெயம் இருவரையும் கொலை செய்ய, மர்மக் கும்பல் திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ராமஜெயம் கொலை செய்யப்பட்ட அன்று காலை, "ராமஜெயத்தை காணவில்லை' என்று சென்னையிலிருந்த நேருவுக்கும் தெரிவிக்கப்பட்டது. நேரு, அவரது மகன் அருண் இருவரும், தங்களது பஜிரோ காரில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்தனர். வரும் வழியில் காரின் டயர் பகுதியிலிருந்து, "கடகட' வென பலத்த சத்தம் கேட்டது. இதையறிந்த நேரு, காரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். காரை நிறுத்தும் போது, ஒரு டயர் கழன்று ஓடியதைக் கண்டு நேருவும், அவரது மகனும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தை நேரு நேற்று உறுதிப்படுத்தினார்.

ராமஜெயத்துக்கு அஞ்சலி செலுத்தவும், நேருவுக்கு ஆறுதல் கூறவும், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், நேற்று காலை, 11 மணிக்கு, தில்லை நகரில் உள்ள நேரு வீட்டுக்கு வந்தார். நேருவுக்கு ஆறுதல் கூறிய அன்பழகன், ""ராமஜெயம் இறந்தது உங்களுக்கு பெரும் இழப்பு தான். இனிமேல் தான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்,'' என்று கூறினார். தொடர்ந்து, ""ராமஜெயம் இறந்த அன்று, நீ வந்த கார் டயர் கழன்றதாக கேள்விப்பட்டேன்,'' என்றார். கண் கலங்கியபடி இருந்த நேரு, ""ஆமாம். நானும், என் மகனும் காரில் வரும் போது, திடீரென டயர் பகுதியிலிருந்து பலத்த சத்தம் கேட்டது. டிரைவரிடம் காரை நிறுத்தும்படி கூறினேன். கார் நிற்கும் போது, டயர் கழன்று ஓடியது. கவனிக்காமல் இருந்திருந்தால், அன்றே நாங்களும்...'' என்று கூறி, அதற்கு மேல் பேச முடியாமல் நா தழுதழுத்தார். ராமஜெயத்தை கொலை செய்த கும்பல் திட்டமிட்டு, ஒரே நேரத்தில் சகோதரர்கள் நேரு, ராமஜெயம் ஆகிய இருவரையும் தீர்த்துக்கட்ட செய்த சதியா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்த விஷயத்தையும் போலீசார் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

"கோதானம்' செய்தார் ராமஜெயம்: கடந்த ஆண்டு இறுதியில், கல்லூரி கட்டுமானப் பணியை பார்வையிடச் சென்ற ராமஜெயம் மணலைத் தாண்டியபோது, அவரது கால் பிசகியது. ஆபரேஷன் செய்து காலில், "பிளேட்' வைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்குச் சென்ற ராமஜெயம், "கோதானம்' என்ற சடங்கான, "பசு தான'த்தை செய்தார். பரிகாரம் முடித்துக் கொண்டு ராமஜெயம் வீட்டுக்கு புறப்பட்டார். திருவானைக்காவல் அருகே வரும்போது, ராமஜெயம் காரின் பின்புறம் தொடர்ந்து வந்த கேரளா பதிவெண் கொண்ட லாரி மோதியது. இதில், யாருக்கும் காயமில்லையென்றாலும், பரிகாரத்துக்கு சென்று திரும்பிய வேளையில் அபசகுனமாக நடந்த இந்த விபத்து, அவரது குடும்பத்தினர் மத்தியில் மன சஞ்சலத்தை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை: