வெள்ளி, 6 ஏப்ரல், 2012

குமுதம் பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்ஸி மரணம்!

Viruvirupu
தமிழ் பத்திரிகையாளர்கள் மத்தியில், குழுதம் ஆசிரியர் குழுவில் இருந்து நன்கு அறியப்பட்ட கிருஷ்ணா டாவின்ஸி நேற்று மரணமடைந்தார். உடல்நலம் குன்றி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா, நேற்று மாலை 5 மணியளவில் மரணமடைந்ததாகத் தெரிய வருகிறது.
அவரது உடல் போரூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
குமுதம் சஞ்சிகையில் கிருஷ்ணாவின் பெயர் போட்டு வெளியான ஆக்கங்களைவிட, அவரது பெயர் இல்லாமலேயே பிரசுரமான விஷயங்கள் அதிகம். ஒரு காலத்தில் குமுதத்தின் மூன்று தூண்களால் எழுதப்பட்டதாக அறியப்பட்ட அரசு பதில்கள் பகுதி, பின்னாட்களில் கிருஷ்ணாவால் எழுதப்பட்டது.
தமிழ் பத்திரிகையுலகில், நிஜமான World Affairs தெரிந்த மிகச் சிலரில் அவரும் ஒருவர் என்பதை, அவருடன் உலக விவகாரங்கள் பற்றி பேசியவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்.
முழுமையாக World Affairs விஷயங்களுடன் தமிழில் ஜனரஞ்சகமாக மேகஸின் ஒன்று கொண்டுவரும் முயற்சியில், குழுதம் குழுமத்துடன் நாம் சிறிது காலம் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு முழுவதும் நிர்வாகத்துடன்தான் இருந்தது.
அதன்பின், தனிப்பட்ட முறையில் அதுபற்றி கிருஷ்ணாவுடன் டிஸ்கஸ் செய்தபோது, “தமிழ் மார்க்கெட்டில் இப்படி ஒரு மேகஸின் கிடையாது. போட்டி கிடையாது.  ரிஸ்க் எடுத்து ஆரம்பித்தால் இன்ஸ்டன்ட்-ஹிட் ஆகும். ஆனால், இங்கே யாரும் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்” என்றார்.

இறுதியில் கமலஹாசன் திரைப்பட டயலாக் ஒன்றை சொன்னார், “இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறேன்”
ஆரம்பத்திலும் சரி, குமுதத்தில் இருந்த நாட்களிலும்சரி, சினிமாவில் அவரது கவனம் சற்று தூக்கலாக இருந்தது. “ஏதோ ஒருநாள் சினிமாவுக்குள் சென்றுவிடுவேன்” என்று கூறிக்கொண்டிருப்பார். அங்கும் செல்லவில்லை, இங்கிருந்தும் சென்றுவிட்டார் என்பதுதான் சோகம்.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் விறுவிறுப்பு.காமின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

கருத்துகள் இல்லை: