திங்கள், 2 ஏப்ரல், 2012

சயனைட் கொடுத்து கழுத்தை நெரித்து ராமஜெயம் படுகொலை- போலீஸ்

திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் கொல்லப்பட்டிருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ம் தேதி காலை வீட்டிலிருந்து வாக்கிங் போனபோது ராமஜெயம் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். சில மணி நேரங்களில் ராமஜெயத்தின் உடலை போலீஸார் மீட்டனர்.
அவரது உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதுதொடர்பான அறிக்கையை தற்போது போலீஸார் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.
அதில் கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு சயனைட் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. அவரது தலையில் அடிபட்ட காயமும் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
75 பேரிடம் விசாரணை

இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு குறித்து திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ் யாதவ் கூறுகையில், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுவரை 75 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். சில துப்பு கிடைத்துள்ளது.
விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் விசாரணை விவரங்களை இப்போது வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் குற்றவாளிகள் தப்ப வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: