வெள்ளி, 6 ஏப்ரல், 2012

ராமஜெயம் கொலை அதிமுக பெண் கவுன்சிலரிடம் தீவிர விசாரணை!

Shanti
திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக பெண் கவுன்சிலர் சாந்தி என்பவர் தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அவரை திருச்சிக்கு அழைத்து வந்து போலீஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியான ராமஜெயம் திருச்சியில் வாக்கிங் சென்றபோது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தக் கொலை தொடர்பாக தொடர்ந்து குழப்பமான தகவல்களே வந்தவண்ணம் உள்ளன. பெண் விவகாரத்தில் கொல்லப்பட்டதாக ஒரு தகவலும், ரியல் எஸ்டேட் மோதலில் கொல்லப்பட்டதாக இன்னொரு தகவலும் என பல்வேறு விதமான தகவல்கள் கசிந்தபடி இருந்தன.

கொலையாளிகள் யார் என்பதிலும் கூட ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் புதியதொரு திருப்பமாக அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவரை போலீஸார் பிடித்துள்ளனர். அவரை திருச்சிக்குக் கொண்டு வந்து விசாரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அவரது பெயர் சாந்தி. தூத்துக்குடி மாநகராட்சியின் 9வது வார்டு உறுப்பினராக இருக்கிறார் சாந்தி. இவரை திருச்சி தனிப்படை போலீஸார் திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அதிமுக பெண் கவுன்சிலர் போலீஸ் பிடியில் சிக்கியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாந்தியுடன் அவரது கணவர் மணிவண்ணனையும் போலீஸார் திருச்சி கொண்டு சென்றுள்ளனர். கொலை நடந்த அன்று முக்கியப் புள்ளி ஒருவரிடம் சாந்தியும், மணிவண்ணனும் நீண்ட நேரம் பேசியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கொலை தொடர்பாகவே இவர்கள் பேசியதாகவும் பரபரப்பா கூறப்படுகிறது. இதையடுத்தே இருவரையும் போலீஸார் பிடித்துச் சென்றுள்ளதாக கூறுகின்றனர். விரைவில் போலீஸ் தரப்பில் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: