செவ்வாய், 3 ஏப்ரல், 2012

விஜய் மல்லையாவுக்கு கிங்ஃபிஷர் ஊழியர்களின் ‘ராயல் சேலஞ்ச்’

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், தமக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியத்தை வழங்குவதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி வரை அவகாசம் கொடுத்துள்ளனர். அதற்குமுன் செட்டில்மென்ட் செய்யப்படாவிட்டால், வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன சேர்மன் விஜய் மல்லையா, ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத் தொகை வரும் 10-ம் தேதியன்று வழங்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்துள்ளார். ஆனால் அவரது உறுதிமொழியை விமான நிறுவனத்தின் பொறியியல் பிரிவு ஊழியர்களும், விமானிகளும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று இன்று தெரிவித்துவிட்டனர்.
அதற்கு முன்னரும் விஜய் மல்லையா ஊதிய விஷயத்தில் உறுதிமொழி கொடுத்திருந்தார். ஏப்ரல் 4-ம் தேதி கிரவுன்ட் ஸ்டாஃப் ஊழியர்களுக்கும், 9-ம், 10-ம் தேதிகளில் பொறியியல் ஊழியர்கள் மற்றும் விமானிகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் உறுதிமொழி கொடுத்திருந்தது போல, 4-ம் தேதி ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பும் நிர்வாகத்தில் இருந்து வெளியாகியிருந்தது.
இதையடுத்து, கிங்ஃபிஷர் ஊழியர்கள் அதிரடியாக ஒரு காரியம் செய்தனர். ராயல் சேலஞ்ச் பெங்களூரூ அணிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தது. தமக்கு ஊதியம் வழங்கப்படும்வரை, ஐ.பி.எல். (Indian Premier League) மேட்ச்களில் விளையாடாமல் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டது. ராயல் சேலஞ்ச் பெங்களூரூ அணி, விஜய் மல்லையாவால் நிர்வகிக்கப்படும் டீம்.
ராயல் சேலஞ்ச் அணியிடம் கோரிக்கை விடப்பட்ட நடவடிக்கை, விஜய் மல்லையாவுக்கு தன்மானப் பிரச்னையாகிவிட்டது. அதையடுத்தே அவர் சகல ஊழியர்களுக்கும் வரும் 10-ம் தேதியன்று ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஊழியர்கள், நாளை இரவு 8 மணிவரை அவகாசம் கொடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: