ஞாயிறு, 11 டிசம்பர், 2011

கனிமொழிக்கு பதவி வழங்கிட ...... எதிர்ப்பு.

கனிமொழிக்கு, தி.மு.க.,வில் முக்கியப்பதவி வழங்குவதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கனிமொழிக்கு எதிராக, மற்றொரு பெண் வாரிசு கொம்பு சீவிய முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும், கனிமொழிக்கு ஆதரவு தெரிவிப்பது யார்? எதிர்ப்பு தெரிவிப்பது யார்? என்பதை கண்டறியும் வகையில், உடனடியாக பதவி வழங்காமல், "நூல் விட்டு' பார்க்கிறார் கருணாநிதி என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டில்லி திகார் சிறைவாசத்திற்கு பின், சென்னை வந்த கனிமொழிக்கு, தி.மு.க.,வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் செல்வி உட்பட அனைவரும், சென்னை விமான நிலையம் வரை சென்று வரவேற்றனர். கனிமொழியின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என, அவரின் தாயார் ராஜாத்தி பிடிவாதமாக இருந்து வருகிறார்.
கனிமொழிக்கு பதவி கொடுப்பதால், ஆண் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், அவருக்கு பதவி வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என, கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பெண் வாரிசு, மூத்த சகோதரரின் வீடு தேடி சென்று, கொம்பு சீவிவிட்டார்.

அதற்கு, அந்த மூத்த சகோதரரும், மற்றொரு சகோதரரும், "தந்தையின் கோபத்திற்கு நாங்கள் ஆளாக விரும்பவில்லை' எனக்கூறி நழுவினர். அதன் பின், அந்த பெண் வாரிசு, கனிமொழிக்கு பதவி வழங்கக் கூடாது என, நேரடியாக போர்க்கொடி தூக்கினார். அதேசமயம், ஆறு மாதம் சிறைவாசம் அனுபவித்த கனிமொழி மீது, கருணாநிதிக்கு அனுதாபம் ஏற்பட்டிருப்பதால், அவருக்கு பதவி வழங்கி, தி.மு.க.,வின் பெண் தலைவராக உருவாக்கவும், கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கனிமொழிக்கு பதவி வழங்குவதற்கு முன், கட்சியிலும், குடும்பத்தினரிடமும், எந்த மாதிரி எதிர்ப்புகள் வருகின்றன, எதிர்ப்பவர்கள் யார்? யார்? ஆதரிப்பவர்கள் யார்? யார்? என்பதையும் தெரிந்து கொள்ளும் வகையில், அவருக்கு பதவியை உடனே வழங்காமல், கருணாநிதி நூல் விட்டுப் பார்த்து, மவுனம் காத்து வருகிறார்.

இது குறித்து, நம்பத்தகுந்த தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழலால் தான், தி.மு.க., தோல்வி அடைந்தது என, தி.மு.க., மத்திய அமைச்சர் கூறிய கருத்து, கனிமொழி தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு, பொருந்தாத கூட்டணி உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. மதுரையை சுற்றியுள்ள பத்து தொகுதிகளில், தி.மு.க., ஏன் தோல்வி அடைய வேண்டும். தென் மாவட்டங்களில், கனிமொழி தலைமையில் வேலை வாய்ப்பு முகாம் நடந்ததால், அங்கே சில தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற முடிந்தது என்ற வாதம் கனிமொழி தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.கலைஞர் "டிவி'யில், கனிமொழி 20 சதவீதம் பங்கு பெற்றதால், அவர் சிறைவாசம் அனுபவித்தார். ஆனால், 60 சதவீதம் பங்கு பெற்ற குடும்பத்தினருக்கு, கனிமொழியால் எந்த பிரச்னையும் வரவில்லை. அந்த ஒரு காரணத்தை முன் வைத்துத் தான், பதவி வழங்க கருணாநிதி விரும்புகிறார். ஆனால், பெண் வாரிசு தான், தனது சகோதரர்களிடம் கொம்பு சீவிவிட்டார். அது பலிக்கவில்லை.

கனிமொழியை பொறுத்தவரையில், பதவி தாருங்கள் என, தந்தையிடம் வாய் திறந்து கேட்கவில்லை. தந்தைக்கு தன்னால் எந்த இடையூறும் வரக் கூடாது என்பதில், அவர் கவனமாக இருக்கிறார். ஆனால், ராஜாத்தி தான் கனிமொழியின் எதிர்கால அரசியலை கருத்தில் வைத்து, பதவி கேட்கிறார். கனிமொழிக்கு பதவி வழங்கும் பிரச்னையால், சில நாட்கள் ஸ்டாலின், அறிவாலயத்திற்கு செல்லாமல், அன்பகத்தில் இருந்து கட்சிப் பணிகளை கவனித்துள்ளார். அதேபோல், ஸ்டாலின் மனைவி துர்காவும், கனிமொழியை சந்திக்காமல் புறக்கணித்துள்ளார். இந்த பிரச்னைகளை எல்லாம், விரைவில் கருணாநிதி தீர்த்து வைப்பார்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: