வெள்ளி, 16 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உய‌ர்‌த்த வே‌ண்டு‌ம்- தமிழக சட்டசபை சிறப்பு தீர்மானம்


சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 வரை உயர்த்தும் வகையில் எதிர்காலத்தில் அணையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமையை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்றும் அந்த தீர்மானத்தில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீரை 120 அடியாக குறைக்க கேரள சட்டப்பேரவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.இந்த அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இன்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. பகல் 11 மணிக்கு சபை கூடியதும் மறைந்த அமைச்சர் கருப்பசாமி, எம்.எல்.ஏக்களுக்கு அஞ்சலி செலுத்தி 15 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடியவுடன் முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளின் வாதங்களையும், வல்லுனர்களின் அறிக்கைகளையும் ஆராய்ந்து, அதன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்பதால், அதன் நீர்மட்டத்தை, 136 அடியிலிருந்து, 142 அடியாகவும், எஞ்சிய பலப்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கப்பட்டபின், 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று தீர்ப்பளித்த பிறகு,

அந்த ஆணையை, இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை, முற்றிலும் அவமதிக்கும் வகையில், கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006 என்ற சட்டத்தை இயற்றி, அந்த சட்டத்திற்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று பொய்ப் பிரச்சாரம் மூலம் கேரள மக்களிடையே பீதியை கிளப்பி விட்டு, புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கேரள அரசு வலியுறுத்தும் அதே நேரத்தில்,

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக, குறைக்க வேண்டும் என்று 9.12.2011 அன்று கேரள சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்றியுள்ள கேரள அரசு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

எனினும், அரசமைப்புச் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட கேரள சட்டமன்றத்தை கண்டிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்பதால், அந்த தீர்மானத்தின் மீது தமிழக மக்களின் வருத்தத்தினை தெரிவிப்பது என்றும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, கேரள அரசு பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருப்பதையொட்டி, தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பொருட்டு, மத்திய தொழிற் பாதுகாப்புப் படையை, அதாவது சி.ஐ.எஸ்.எப் படையை அந்தப்பகுதிக்கு உடனடியாக மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்றும்,

உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக, 2006ம் ஆண்டு கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு (திருத்தம்) சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும்,

அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த, எஞ்சியுள்ள நீண்டகால அணைப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள, கேரள அரசு தமிழகத்திற்கு தடை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும், தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானிக்கிறது.

இவ்வாறு சிறப்புத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

அனைவரும் இந்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயவலலிதா கூறினார்.

இதையடுத்து சபாநாயகர் ஜெயக்குமார் பேசும்போது, ஒட்டு மொத்த தமிழகமும் ஓரணியில் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் முதல்வர் தனது கருத்துக்களை எடுத்து வைத்து இருக்கிறார். அதற்கு பலம் சேர்க்கும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து தீர்மானத்தின் மீது திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், தேமுதிக சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட்), கம்யூனிஸ்ட் சார்பில் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் குணசேகரன், காங்கிரஸ் சார்பில் என்.ஆர்.ரங்கராஜ், பாமக சார்பில் ஜெ.குரு, மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவஹருல்லா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பார்வர்ட் பிளாக் சார்பில் கதிரவன், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனிஅரசு ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பேசினார். அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், மத்திய அரசு தொடர்ந்து மெளனம் காத்து வருவதாலே‌யே, கேரளாவின் நடவடிக்கைகள் அத்துமீறி வருகின்றன.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. புதிய அண‌ை கட்டி, நீரை தருவதாக கேரளா கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய அனைத்து கட்சியினருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

இதற்கு முன் காவிரிப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் 1995ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: