வெள்ளி, 16 டிசம்பர், 2011

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்?

தமிழகத்தில், 2011ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கடந்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய அளவில், குழந்தைகள் பாலின விகிதாசாரப் படி, 31 லட்சம் பெண் கருக்கொலைகள் நடந்திருக்கலாம் என, கணிக்கப் படுகிறது.

"பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம்' என்ற தன்னார்வ நிறுவனம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், பெண் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

14 மாவட்டங்கள்: அதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம், 1,547 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 434 நிலையங்களில், பெண் பிறப்பு விகிதம், 900க்கும் குறைவாக உள்ளது. இயற்கை பெண் பிறப்பு விகிதமான, 952யை விட, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய, 14 மாவட்டங்களில், குறைவாக உள்ளது. இந்த விவரங்கள், கருவிலேயே பெண்கள் கொல்லப் படுவதையே காட்டுகிறது.


காற்றில் பறக்கும் விதிகள்: கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு உள்ளதா எனக் கண்டுபிடிக்க, கருத்தரித்த நான்காவது மாதத்தில், ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால், சிலர், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிந்து கருவை அழித்து விடுவதாக, புகார்கள் குவிந்தன. பாலின தேர்வை தடை செய்ய 1994ல் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, தமிழகத்தில், 4,060 "ஸ்கேன்' மையங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஸ்கேன் செய்யும் கர்ப்பிணிகளின் விவரங்களைச் சேகரித்து, அதை ஒவ்வொரு மாதமும், மருத்துவ சேவை இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். 50 சதவீத மையங்கள் கூட, சட்டத்தில் உள்ள இத்தகைய விதிகளை முழுமையாக பின்பற்றுவது இல்லை.

நடவடிக்கை இல்லை: சென்னையில் உள்ள பிரபலமான ஸ்கேன் மையம் கூட, இந்த விவரங்களை சேகரிக்கவில்லை. விவரங்களை அனுப்பாதது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகளும் கேட்பதில்லை. சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு, மருத்துவ சேவைகள் இயக்குனரிடம் (டி.எம்.எஸ்.,) கொடுக்கப் பட்டுள்ளது. இப்போது, மாவட்ட கலெக்டர்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால், இதுவரை எந்த கணிசமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. விதியை மீறியதாக தமிழகம் முழுவதும், 73 ஸ்கேன் மையங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உதாரணத்துக்கு, "நீங்கள், கர்ப்பிணி பெண்களுக்கான படிவங்களை சரியாக பராமரிக்க வில்லை என தெரியவந்துள்ளது. உங்கள் குறையை, 30 நாள்களுக்குள் சரி செய்ய வேண்டும்,' என வெறும் கடிதம் மட்டும் வருகிறது; அதோடு சரி. மதுரையில் ஒரு மையம், 6 மாதத்துக்கு மூடப்பட்டு, தற்போது வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

விதி மீறும் மையங்கள்: கருக் கொலைக்கு எதிரான பிரசார அமைப்பின், மையக் குழு இயக்குனர் ஜீவா கூறியதாவது: பெண் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதன் காரணம் குறித்து அரசும், இதுவரை எந்த ஆய்வும் நடத்தவில்லை. இந்த சட்டத்தை முனைப்பாக அமல்படுத்தும் ஆலோசனை குழு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் இந்தக் குழுவின் கூட்டம், பல மாதங்கள் நடப்பதே இல்லை. இவ்வாறு ஜீவா கூறினார்.

கடும் நடவடிக்கை: சுகாதார துறை அமைச்சர் விஜய்யிடம் இதுகுறித்து கேட்டபோது, ""கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை ரகசியமாக வெளியிடுவதை தடுக்க, ஸ்கேன் மையங்கள் மற்றும் குழந்தை பேறு மருத்துவமனைகள் மீது கண்காணிப்பு அதிகரிக்கப்படும். தவறு செய்யும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப் படும்,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: