ஞாயிறு, 11 டிசம்பர், 2011

இனிமேல் பாருங்கள் எனது அரசியலை! கனிமொழி வைராக்கிய பேட்டி

டிசம்பர் மூன்றாம் தேதி
சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்தவர்கள், 'வழி தவறி அண்ணா அறிவாலயத்துக்குள் நுழைந்துவிட்டோமோ...’ என்று ஒரு கணம் குழம்பியிருப்பார்கள். 193 நாட்கள் திகார் சிறைவாசத்துக்குப் பிறகு, கனிமொழி சென்னை திரும்பிய தினம் அது!
'கனியக்கா எத்தனை மணிக்கு வர்றாங்க? ஃப்ளைட் வந்துடுச்சா?’ என்று எதிர்ப்பட்டோரிடம் எல்லாம் விசாரித்தபடி அலைந்துகொண்டு இருந்தார்கள் பாசக்கார உடன்பிறப்புக்கள். சென்னை சங்கமம் புகழ் இசைக் கலைஞர்களின் 'டங்குணக்க டங்குணக்க’ மேள தாளங்கள் அதிரத் துவங்க, தொண்டர் களோடு மகளிர் அணியினரும் சேர்ந்து ஆடியது அக்மார்க் குத்தாட்டம்!
சரியாக மதியம் 12.20-க்கு தயாளு அம்மாளுடன் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் வந்தார். பெங்களூரில் இருந்து வந்திருந்த செல்வி தனது கணவர் செல்வத்துடன் வர, மு.க.தமிழரசு தன் மனைவி மோகனாவுடன் நுழைந்தார். சற்று நேரத்தில் கருணாநிதியுடன் ராஜாத்தி அம்மாள் வந்தார். அவர்களை ஜே.கே.ரித்தீஷ் கும்பிடு போட்டு வரவேற்றார். இதற்குள் தொண்டர் களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் திமிற ஆரம்பித்தது விமான நிலைய வளாகம்!

குடும்ப உறுப்பினர்கள் மட்டும் விமான நிலைய வரவேற்பறையில் காத்திருந்தார்கள். ''கனி வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?'' என்று கருணாநிதி கேட்க... ''ஒன்றரை மணிக்கு வரும் ஃப்ளைட்'' என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போது குடும்ப உறுப்பினர்களைப் பார்த்து கருணாநிதி, ''கனி ஜெயில்ல ரொம்பவே கஷ்டப்பட்ருச்சு. தொண்டர்களும் ரொம்ப எதிர்பார்ப்பு வெச்சிருக்காங்க. கனிக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கணும்'' என்று ஆரம்பிக்க... ''அதைப்பத்தி உடனே ஏன் பேசணும்?'' என்று விவகாரத்தைச் சற்றுத் தள்ளிவைத்தாராம் ஸ்டாலின்.

ஜெட் ஏர்வேஸ் விமானம் தரை இறங்கியதும் வரவேற்பு அறையில் இருந்து வெளியே வந்தார் கருணாநிதி. மகன் ஆதித்யா, கணவர் அரவிந்தன் சகிதம் சிரித்த முகத்தோடு வந்த கனியைப் பார்த்ததும், கருணாநிதியின் கண்களில் இருந்து கரகரவென வழிந்தது நீர். கனிமொழியை அருகில் வரச் சொல்லி அணைத்து, நெற்றியில் முத்தம் கொடுக்க... தயாளு அம்மாளும் கனியைக் கட்டி அணைத்துக்கொண்டார். ஓரிரு நிமிடங் கள் அங்கு நிலவியது கனத்த அமைதி. அதைக் கலைத்தது ஆதித்யாதான். ''அதான்... அம்மா வந்துட்டாங்கள்ல... அப்புறம் ஏன் அழறீங்க தாத்தா?'' என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்க... நெகிழ்ந்துவிட்டார் கருணாநிதி. கட்சியினர் அளித்த பூங்கொத்துக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு கருணாநிதியுடன் வெளியே வந்தார் கனிமொழி.

''கனியக்கா... கனியக்கா...'' என்று உணர்ச்சி மிகுதியில் முண்டியடித்து முன்னேறிய கூட்டத்தைப் பார்த்ததும் கனிமொழி முகத்தில் உற்சாக சந்தோஷம். விமான நிலையத்தில் இருந்து சி.ஐ.டி. காலனி செல்லும் வழியெங்கும் கனிமொழியை வாழ்த்தி ஏகப்பட்ட விளம்பரத் தட்டிகள். 'இனி நீ பூங்கொடி அல்ல; போர்க் கொடி’, 'ஏழைகளின் தோழி நீ... எழுச்சி சூரியனாய் வாழி நீ’, 'பூட்டிய இரும்புக் கூண்டின் கதவு திறந்தது... அதிகாரக் கூட்டத்தின் கனவு கலைந்தது’ என்றெல்லாம் ஏகத்துக் கும் வாழ்த்து மழை!

கூண்டுக்குள் இருந்து கிளி வெளியே வருவதுபோல வரையப்பட்ட படத்துடன் 'சிறைபட்டது நீ... வதைபட்டது நாங்கள்!’ என்று எழுதப்பட்ட பேனர், கனிமொழியின் வீட்டுக்கு எதிரே பிரமாண்டமாகப் படபடத்தது. வீட்டு வாசலின் முன் போடப்பட்டு இருந்த பிரமாண்ட கோலத்தின் நடுவே 'வெல்கம்’ என்ற வரவேற்பு வாசகம்!

ஆரத்திகள், கற்பூர தீபம், திருஷ்டிப் பூசணிக்காய் சுற்றல் வைபவங்கள் முடிந்து, கார் வீட்டுக்குள் நுழைந்து நின்றபோது, கார் கதவைத் திறக்க முடியாத அளவுக்குக் கூட்டம். பேராசிரியர் அன்பழகன், ஆற்காட்டார், கோ.சி.மணி போன்றவர்கள் கனிமொழிக்கு சால்வை போர்த்த, வீட்டில் இருந்த உறவுகள் ஆரத்தி எடுத்து, கனி மொழியின் நெற்றியில் பொட்டுவைத்தனர். மற்றவர்கள் தன்னை 'எப்படி இருக்கீங்க?’ என்று கேட்பதற்கு முன்னரே, ''எப்படி இருக்கீங்க?'' என்று முந்திக்கொண்டு அவர் களை விசாரித்தார் கனிமொழி. வீட்டு வளாகத்துக்குள் கூடியிருந்த தொண்டர் களுக்கு சரவண பவன் விருந்து. வீட்டுக் குள் மீன் குழம்பு மணம் கமகமத்தது. சமையல் தயாராகி கனியைச் சாப்பிட வருமாறு ராஜாத்தி அம்மாள் அழைக்க...
''வாய்க்கு ருசியா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகி இருக்கும். என் கையால சாப்பிடும்மா!'' என்று கருணாநிதி சோறு எடுத்து கனிமொழிக்கு ஊட்ட... ''நீங்களும் என் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு!'' என்று கனியும் அப்பாவுக்குச் சோறு ஊட்டினார்.

சி.ஐ.டி. காலனி இல்லம் இதற்கு முன் இப்படி ஒரு கொண்டாட்டத்தை எதிர்கொண்டது இல்லை. சிறைபட்ட நாட்களின் வருத்தங்களை அந்த ஒரே நாளிலேயே மறக்கும் அளவுக்கு இருந்தது சந்தோஷப் பரவசம். ஆனாலும், கனிமொழி முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. கிடைத்த சிறு சிறு இடைவேளைகளில் அவரிடம் பேசியதில் இருந்து...

''எப்படி இருக்கீங்க?''

''பழைய பலம் திரும்பிய மாதிரி இருக்கு. எப்பவும் உணராத உற்சாகமும் புத்து ணர்ச்சியும் என்னைத் திக்குமுக்காடவைக்குது. விமான நிலையத்துக்கே தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்று மகிழ்ந்ததைப் பார்த்தபோது நெகிழ்ந்து விட்டேன். பேராசிரியரும் ஆற்காட்டாரும் வீட்டுக்கே வந்து என்னை வாழ்த்தியது... நானே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி. என் வலியைவிடப்பெரிய ஆறுதல் இதெல்லாம்!''

'' 'சிறைக்குச் செல்லும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டதே...’ என்று அரசியல் மீது வெறுப்பு வரவில்லையா?''

''என்னை அரசியலுக்குக் கைப்பிடித்து அழைத்து வந்தவர் தலைவர்தான். அரசியலில் தலைவர் சந்திக்காத சோதனைகளே இல்லை. அந்தச் சோதனைகளை எல்லாம் போர்க் குணத்தோடு எதிர்த்துப் போராடி வெற்றிபெற்றார். தலைவரிடம் இருக்கும் தைரியம், போர்க் குணம் எனக்கும் உண்டு. நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. தவறான பழி என் மீது விழுந்துவிட்டது. அதில் இருந்து மீண்டு நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். அரசியல் மீது எனக்கு வெறுப்பு கிடையாது. இனிமேல் பாருங்கள் எனது அரசியலை. தலைவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் தொடர்ந்து தீவிர அரசியலில்தான் இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தொண்டர்களின் நம்பிக்கைக்கு ஏற்பச் செயல்படுவேன்!'' என்று உறுதிமிக்க குரலில் பேசி முடித்துக் கைகளைக் கூப்புகிறார்
thanks vikatan+nibulan namakkal
எம். பரக்கத் அலி, ஆர்.லோகநாதன்

படங்கள் : சு.குமரேசன், கே.கார்த்திகேயன்

கருத்துகள் இல்லை: