வெள்ளி, 16 டிசம்பர், 2011

கேரளத்தவரின் அனைத்து கடைகளையும் மூடவும்” மதுரையில் கோரிக்கை!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தில் பதட்டம் ஓயாத நிலையில், கேரளத்தைச் சேர்ந்தவர்களின் வர்த்தக நிலையங்களின் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. மதுரை, ஈரோடு, ஆகிய இடங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள கேரளத்தவரின் நிறுவனங்கள் முழுவதையும் பாதுகாப்பு கருதி மூட உத்தரவிட வேண்டும் என மாவட்ட கலெக்டர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை பெற்ற கலெக்டர், “இந்த மனுவை அரசுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கும் தமிழ் உணர்வு உண்டு” என்றார்.
“கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுகின்றார்கள். பாதுகாப்பு காரணமாக அவர்கள் இடம்பெயர்ந்து

ஈரோடு டவுனில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தாக்குதல்
தமிழகம் நோக்கி வருகின்றார்கள்” என்ற செய்தி மதுரையில் ஏற்படுத்திய தாக்கமே கேரளத்தவரின் நிறுவனங்கள் மீதான தாக்குதலை தொடக்கியது. கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்துவந்த மக்களில் சிலர் தேவாரம் பகுதிக்கு வந்தனர். அவர்களுக்கு அங்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்தச் செய்தி, எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றிவிட்டது.
கேரளத்தவருக்குச் சொந்தமாக மதுரையிலுள்ள பெரிய ஷோரூம்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பாதுகாப்பு தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் அளவில் இல்லை என்பது உண்மை. கற்கள் தடிகளுடன் தாக்குதலுக்காக பத்து பேருக்கு மேல் வந்தால், காவலுக்கு நிற்கும் போலீஸ் அங்கிருந்து அகன்றுவிட சான்ஸ் அதிகம்.
மதுரையில் உள்ள பெரிய நிறுவனங்கள் தாக்கப்படுவதைவிட, சிறிய கடைகள் தாக்கப்படக் கூடிய அபாயம் உள்ளதே காவல்துறையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், இப்படியான சிறிய கடைகள் மதுரை மாநகர் முழுவதிலும் பரவலாக உள்ளன. அத்தனை இடங்களிலும் பாதுகாப்பு கொடுப்பது முடியாத காரியம்.
இதற்கிடையே மதுரையில் உள்ள கேரளத்தவருக்கு சொந்தமான கடைகள‌ை 24 மணி நேரத்தில் அடைக்க வேண்டும் என பார்வர்டு பிளாக் தினகரன் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தால் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம், வன்முறையில் முடிந்தது. கேரளத்தவரால் நடாத்தப்படும் கடைகளை நோக்கி கற்கள் பறந்தன. மெயின் பஜாரில் உள்ள ஜவுளிக் கடைகள் மீது கல்வீச்சு நடைபெற்றபோது, அவற்றின் ஷோகேஸ் கண்ணாடிகள் நொருங்கின. நகைக் கடைகளையும் சிலர் தாக்க முயன்றாலும், அவை முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டு இருந்தன.
இந்தத் தாக்குதல்களையடுத்து, ஈரோடில் உள்ள பெரும்பாலான கேரளத்தவரின் கடைகள் இன்று நாள் முழுவதும் மூடப்பட்டன

கருத்துகள் இல்லை: