செவ்வாய், 13 டிசம்பர், 2011

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றாதீர்கள்-தமிழக, கேரள அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக, கேரள அரசுகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் மாநில அரசுகளை அறிவுறுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து செய்தித் தாள்களிலும் ஒரு பக்க விளம்பரம் கொடுத்திருந்தார்.
முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றியுள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். அதனால் அவர்கள் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க நினைக்கிறார்கள். ஒரு சிலரின் சுயநலத்திற்காக கேரள மக்கள் பலியாகிவிடக்கூடாது என்பது போன்ற கருத்துகள் அந்த விளம்பரத்தில் இருந்தது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கையில் ஜெயலலிதா இவ்வாறு விளம்பரம் கொடுத்ததற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை அரசியலாக்கக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார். அதேபோல கேரள அரசுக்கும் இநத்ப் பிரச்சினையை அரசியல் ரீதியாக பயன்படுத்தி பெரிதாக்கக் கூடாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருக்கையில் இரு மாநில அரசுகளும் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் அணை குறித்து கேரள அரசு தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி மக்களை பீதியடையச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: