dinamalar.com : நமது நிருபர் : சிங்கப்பூர்: விமானங்கள் மீது பறவைகள் மோதுவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 2016 முதல் 2021 வரையிலான ஐந்தாண்டில் மட்டும் 2 லட்சத்து 70 ஆயிரம் முறை, விமானங்கள் மீது பறவைகள் மோதியுள்ளதாக, சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
விமானங்கள் மீது பறவைகள் மோதுவதால் பெரும் விபத்துகள் ஏற்படுகின்றன. சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது, விமான பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் தென் கொரியாவில் நடந்த இத்தகைய சம்பவத்தில், பயணிகள் உட்பட 179 பேர் பலியாகினர்.
அமெரிக்க விமானப் போக்குவரத்து அமைப்பு தகவலின்படி, விமானம் மீது பறவைகள் மோதும் நிகழ்வுகளில் 61 சதவீதம், விமானம் தரை இறங்கும்போது நடக்கின்றன. 36 சதவீதம், விமானம் புறப்படும்போது நடக்கின்றன.
அமெரிக்காவை பொறுத்தவரை, 54 சதவீதம் பறவை மோதும் சம்பவங்கள், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் நடக்கின்றன. அப்போது தான், இளம் பறவைகள் கூட்டில் இருந்து வெளியேறும் காலம் என்பது அதற்கு காரணம்.
2016 முதல் 2021 வரையிலான ஐந்தாண்டில் மட்டும் 2 லட்சத்து 70 ஆயிரம் முறை, பறவைகள் விமானங்கள் மீது மோதியுள்ளதாக, சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (சி.ஏ.ஏ.எஸ்.,) துணை இயக்குநர் ஜெனரல் ஆலன் பூ கூறியதாவது:
சிங்கப்பூர் விமான நிலையத்தில் பறவைகள் மோதியதால் பெரிய அளவிலான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
இதையும் படிங்க
வானமே எல்லை; சோகம் இனி இல்லை! வெளிநாட்டு பறவைகளை பராமரிப்பது எப்படி
வானமே எல்லை; சோகம் இனி இல்லை! வெளிநாட்டு பறவைகளை பராமரிப்பது எப்படி
எனினும், சிங்கப்பூர் விமான நிலைய சுற்று வட்டாரத்தில் பறக்கும் உருவத்தில் பெரிய பறவைகள், சிங்கப்பூர் துப்பாக்கி சங்கத்தினர் உதவியுடன் வேட்டையாடப்பட்டன. இதற்கு உயிரியல் நிபுணர்கள், விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் 2015 முதல் அத்தகைய வேட்டை நடத்துவது கிடையாது.
நவம்பர் 2023 முதல், ஓடுபாதைகளில் பறவைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து கண்காணிக்க வீடியோ பகுப்பாய்வு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
அதிக ஒலி எழுப்பி பறவைகளை விரட்டக்கூடிய கருவிகளை பயன்படுத்தி, அவற்றை ஓடுபாதைக்கு வராமல் தடுக்கும் கருவிகள் உபயோகத்தில் உள்ளன. இந்த கருவிகளின் ஒலி, 3 கிலோமீட்டர் வரை கேட்கும்.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில், ஏரோ லேசர் எனப்படும் லேசர் ஒளி கருவியை பயன்படுத்தியும் பறவைகள் விரட்டப்படுகின்றன.ஆஸ்திரேலியாவின் டார்வின் விமான நிலையத்தில், ஓடுபாதை அருகே இருக்கும் புற்களின் மீது களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி அடித்து, புழு, பூச்சிகள் இல்லாமல் செய்து விடுகின்றனர். இதன் மூலம் அவற்றை தேடி பறவைகள் வருவது தடுக்கப்படுகிறது.
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில், மழை பெய்தால், சற்று நேரத்திலேயே மொத்த தண்ணீரும் வடிந்து விடும் வகையில் சிறப்பு வடிகால் வசதி இருக்கிறது. அதன் மூலம் தண்ணீருக்காக பறவைகள் வராமல் தடுக்கப்படுகின்றன.
''என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், ஏர்லைன்ஸ், பைலட்டுகள், விமான நிலைய ஆபரேட்டர்கள்கள், ஏர் டிராபிக் கன்ட்ரோலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பறவைகளால் விமானங்களுக்கு ஏற்படும் ஆபத்தை முற்றிலும் தடுக்க முடியும்,'' என்கிறார், விமான பாதுகாப்பு புலனாய்வாளர் மைக்கேல் டேனியல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக