![]() |
![]() |
Dhinakaran Chelliah ; உடன்கட்டை - சதி- 1820 - ம் வருஷம் பத்திரிக்கையில் வந்த ‘உடன்கட்டை ஏறுதல்’செய்தியை ஆநந்தகுண போதினி -1927 மார்ச் மாத இதழ் வெளியிட்டுள்ளது. வேளாளப் பெண் ஒருத்தி உடன்கட்டை ஏறுவதை ஒருவர் நேரில் பார்த்த அனுபவம்தான் 1820 ல் பத்திரிக்கையில் வந்த செய்தி.
இத்தனைக்கும் அவள் ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண் என கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.
சனாதனத்தின் பெண் அடிமைத்தனம் எல்லா சாதி மற்றும் வர்க்கங்களுக்கிடையில் பரவியிருந்ததை செய்தித் தாளில் வந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.
‘சதி எனும் உடன்கட்டை ஏறும்’ வழக்கத்தை ஒழிப்பதற்கு நம் முன்னோர்கள் நடத்திய முயற்சிகளை நான் நன்றியுடன் நினைத்துப்பார்க்க வேண்டும்.நம்மை ஆட்சி செய்தவர்கள் என்றாலும் சதி ஒழிப்புச் சட்டம் போன்ற சமூக சீர்திருதத்திற்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர்கள்.
1829-டிசம்பர் 4 ஆம் தேதி உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் தடைசெய்யும் சட்டத்தை, வங்காள ஆளுநராக இருந்த பென்ட்டிங் பிரபு கொண்டுவந்தார்.
![]() |
இனி ‘ஆநந்தகுண போதினி’ இதழில் வெளிவந்த கட்டுரை,
!!உடன்கட்டை யேறுதல்!!
1820-ம் வருஷத்திய பத்திரிகை யொன்றிலிருந்து பின் வரும் விஷயம் எடுக்கப்பட்டது.
"1820-ம் வருஷம் நவம்பர் மாதம் 26-ம் தேதி மாலை ஒரு மனுஷி புருஷனின் பிரேதத்தோடு உடன்கட்டை ஏறி எரிந்த பயங்கரத்தைக் கண்ணாரக் கண்டேன். இந்த மனுஷி வேளாளப் பெண். இக்கிரியை முடிக்க மாஜிஸ்திரேட்டால் உத்தரவு வரப்பெற்றவுடன், பந்து ஜனங்கள் பிரேதத்தைப் பாடையில் வளர்த்தி விதவையை உட்காரவைத்து மசானத்திற்குச் (சுடுகாடு)சுமந்துகொண்டு போனார்கள். கும்பு திரண்டு கூடிப்போயிற்று. போகப்போக விதவை நெற்பொறி தூவினாள். தரையில் நாலடி ஆழத்திற்கு ஒரு குழி தோண்டி அதன் வாயை ஐந்தடி குறுக்களவிருக்கும்படி விசாலமாக்கி, விறகு கட்டைகளும் எளிதில் எரியத்தக்க சருகு கட்டைகளும் அடுக்கியிருந்தது. அடுத்திருந்த ஒரு குளத்தில் விதவை நீராடிய பின், பிரேதம் கட்டையில் வைக்கப்பட்டது. இந்த சமயத்தில் விதவை ஸ்மரணை தப்பி அடி எடுத்துவைக்க வசமற்றிருந்தாள். பந்துக்களில் ஒருவன் அவளை எடுத்துக்கொண்டு போய் மீளவும் நிறுத்தினான். நிறுத்திய பொழுது, தன் வஸ்திரத்தில் ஒரு துண்டு கிழித்து எட்டுப் பருவமுடைய தன் ஜேஷ்டப் புத்திரனுடைய இடுப்பிற் சுத்தினாள். அதன் பின் ஆடவர்கள் ஸ்திரீகள் அநேகர் பாதத்தண்டை விழுந்து அவளை முத்திசெய்தார்கள். அவள் அங்குள்ள ஸ்திரீகளைப் பார்த்து, என்னைப்போல நீங்களும் விதவையாகும்பொழுது தீரம்குன்றிப் பின்னிடைந்து நிற்காமல், நான் செய்தபடி உடன்கட்டை ஏறுங்கள் என்று எச்சரித்தாள். அதன் பின், சிறுவன் ஒரு பந்தம் கொளுத்திக் கட்டையில் வைத்தான். அது பற்றி எரிந்தது. விதவை மூன்றாந்தரம் வலசாரி வந்து, தீ நன்றாய் சுவாலிக்கக் குங்கிலியம் போட்டு, ஆநந்த வேகத்துடன் அதில் பாய்ந்து பிரேதத்தின் அருகில் உட்கார்ந்தாள். ஒரு நிமிஷத்தில் அவளை சுவாலை பற்றிக் கொண்டது. அவள் உட்காரவும், ஜனங்கள் தீ வளர்க்கும் தன்மையுள்ள பல வஸ்துக்களை அதில் போட்டார்கள். அவயவங்கள் வெந்து விழுமனவும் விதவை கைதட்டி ஆர்ப்பரித்தாள். தீவிரமாய்ப் பிராணன் போய் விட்டது. தேகமோ உட்கார்ந்த வண்ணம் வெந்து உரு அழியாதிருந்தது. நெருப்பிற் கருகியதினால், அது கருங்காலியிற் செய்த பிரதிமைபோலிருந்தது. இத்தனை சித்த நிர்ணய பலமுள்ள சக்தியை எப்போதும் கண்டதில்லை யென்று கூடிய பந்து ஜனங்கள் எக்களித்தார்கள். அச் சமயத்தில் இச்சடங்குக்கு ஆஜராகி நின்றுச் செய்வித்த போலீசு அதிகாரி, இதற்கு முன் இவ்வாறு உள்ளத் தெளிவும் அடக்கமும் தீரமும் உள்ளவர்களாக மனைவியர் உடன்கட்டை ஏறியதைத் தான் பார்த்ததில்லை என்றார், திகில் அளவற வருத்திய இந்தக் காணாக் காட்சியை நான் எள்ளளவும் மறவேன். அதைப் பார்க்கப் பார்க்க என் கண்கள் இரண்டும் பதைத்து, நெஞ்சு துடித்தது. முதலில் நான் அவளைக் கண்டபொழுது அவள் முகம் பித்தேறியிருந்தது. பின்பு அவள் பதைப்பற்றுச் சாந்த சித்த முள்ளவளானாள். அப்பால் வசம் தப்பி இளைத்துப் பதறினாள். ஆனால், விறகுக்கட்டை யடுக்கிப் பிரேதம் வைத்துத் தீமூட்டிய பின், அவள் அதைச் சுற்றி வரும்பொழுது பதைப்பின்றி அடங்கிச் சாந்தமயமாயிருந்தாள். அவளுக்குப் பருவம் 50. பிள்ளைகள் மூன்று பெயர். ஆண் இரண்டு, பெண் ஒன்று. இறந்த விதவையை இவ்வாறு இறக்க எவரும் பலாத்காரம் செய்யவில்லை. பின்பு போலீசு அதிகாரிகள் கும்பலைக் கலைந்து போகும்படி சொன்னார்கள். நெருப்பு பற்றி எரிந்த பொழுது, விதவை வேதனை பொறுக்க ஆற்றாமல் வெளிப்படுவாளானால் அவளை ஒருவரும் தடுப்பதில்லை. பந்துக்கள் கணவனுடன் இறந்துபோக வேண்டுமன்று ஆசைப்படவில்லை. இறந்த விதவை ஏழை. அவளுடைய மைந்தர்களை அவளுக்கு நெருங்கிய சுற்றத்தார் காப்பாற்ற உடன்பட்டனர். யாவரும் மதவேசராயிருந்ததினால் இவ்வித குரூர கிருத்தியங்கள் விதிப்படி நடப்பது ஆச்சரியமல்ல."
எந்தக் கொடுமையான அகிருத்தியமும் வழக்கமாய்ச் செய்யப்படுவதில் அதன் கோரம் வெளிப்படாமல் ஸர்வ சாதாரணமாய்ப் போய்விடுகின்றது. இப்பொழுதும் ஹிந்துக்களுக்குள் உயர் வகுப்பினரிடையில் வழக்கமா யிருந்துவரும் கணவனை யிழந்தோரின் சிரமுண்டிதம்(மொட்டையடித்தல்) தவறான செய்கை- கொள்கை என்றும் எண்ணப்படுவதில்லை, உயர் வகுப்பினரிடையிலேயே ஒரு சாரார் சிரமுண்டிதம் செய்வதில்லை. அதனால் அவர்கள் நெறிதப்பிப் போவதுமில்லை. அது ஒரு நிந்தனையாகக் கொள்வதுமில்லை. வழக்கப் பைசாசமாகிய குப்பைக் கூளங்கள் வெகு உயரத்திற்கு மேடிட்டு உயர்ந்துபோக, உத்தம லக்ஷ்யங்களும், சாஸ்திராதாரங்களும அடக்கிய கோபுரமானது தாழ்ந்தபடியிலிருந்து தவிக்கும் காலமாய்ப் போய்விட்டது. இதற்கு மீட்சி எப்போதோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக