bbc.com : இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிக் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
புது டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் ரிது சக்சேனா, பிபிசி ஹிந்தியிடம் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.
சனிக்கிழமை மாலை ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததைத் தொடர்ந்து, இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இறந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள் என்றும், 10 பேர் பெண்கள் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
நேரில் பார்த்தவர்கள் கூறுவதென்ன?
பிராயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவுக்குச் செல்ல வந்தவர்கள், அங்கிருந்து டெல்லி திரும்பியவர்கள் என ரயில் நிலையத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது எனச் சம்பவ இடத்திலிருந்தவர்கள் பிபிசி ஹிந்தியிடம் கூறினர்.
ரயில் நிலையத்தில், இரண்டு ரயில்களின் வருகை தாமதமானது.மேலும் கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜுக்கு ஒரு ரயில் கிளம்ப இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
"நான் இரவு 9.15 மணிக்கு புது டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தேன். நான் வந்தபோது, ரயில் நிலையத்தில் ஒரு பெரும் கூட்டம் இருந்தது. ரயில்வே நிலையத்தின் வெளியேறும் வழியில் இருந்தும் மக்கள் உள்ளே நுழைந்தனர். எனது தாயார் நூலிழையில் மரணத்திலிருந்து தப்பினார். நாங்களும் இதிலிருந்து காப்பாற்றப்பட்டோம். எங்கள் கண் முன்னே ஒரு வயதான பெண்மணி மயக்கமடைந்தார்", என்று இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மனோரஞ்சன் ஜா தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள முக்கிய ரயில் நிலையமான இங்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடி இருந்ததால், தன்னால் ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்ல முடியவில்லை என ரூபி தேவி என்ற பெண் கூறினார்.
காவல்துறை தங்களது பணிகளைச் செய்தனர். ஆனால் கூட்டம் மிக அதிகமாக இருந்தது என மற்றொரு நபர் கூறினார்.
"நாங்கள் நடைமேடை எண் 13 இல் இருந்தோம். எல்லோரும் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டிருந்தார்கள். எங்கள் கண் முன்னே பலர் விழுந்தனர். அங்கு பரபரப்பான சூழல் நிலவியது", என்று இந்த விபத்தை நேரில் பார்த்த காஜல் என்ற பெண் கூறினார்.
"பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் மகத் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களில் பயணிக்க பல பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் செல்லவேண்டிய இடத்துக்கு இதுதான் கடைசி ரயில் என்று எல்லோரும் நினைத்ததால் அதில் உறுதியாக ஏறி பயணிக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர்", என்று ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் திலீப் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
"புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பற்றிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் உதவி செய்யப்பட்டு வருகிறது", என்று ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
"ரயில்வே நடைமேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிர் இழந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்", என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அது போலவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா, "புது டெல்லி ரயில் நிலையத்தில் நடந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினேன். டெல்லியின் துணைநிலை ஆளுநர் மற்றும் டெல்லி காவல்துறை ஆணையரிடம் பேசி, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்", என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியின் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, "புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ஒரு துயரமான விபத்து நடைபெற்றுள்ளது", என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
"நான் டெல்லி காவல்துறை ஆணையரிடம் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். மேலும் மீட்புப் பணியாளர்களை அனுப்புமாறும் தலைமைச் செயலாளரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும், அதனை கையாள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன.'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக