வியாழன், 20 பிப்ரவரி, 2025

மகா கும்பமேளாவில் குளிக்கும் பெண்களின் 'வீடியோக்கள்' விற்பனைக்கு.. வெளியான அதிர்ச்சி

Maha Kumbh Mela: Women bathing videos for sale online! Archives - Gem  Television
மாலை மலர் :  உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்து ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி, மகா சிவராத்திரியை ஒட்டி இந்த விழா முடிவுக்கு வரும். உ.பி. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது.

கொடுமை என்னவென்றால் இதுபோன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்வதற்காக அவற்றின் டீசர்கள் (முன்னோட்டம்) பகிரப்படுகின்றன. பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்களின் டீசர்கள் ஏராளமாக வளம் வருகின்றன.

இந்த வீடியோக்களில் பல, பெண்கள் குளிக்கும் முழு வீடியோக்களையும் பார்க்க, பயனர்களை டெலிகிராம் லிங்க்-குக்கு இட்டுச் செல்கின்றன.

"மகா கும்ப கங்கை நீராடல்" போன்ற தலைப்புகளுடன் பெண்கள் குளிக்கும் வீடியோக்களை பகிர்ந்து பயனர்களை இந்த கும்பல்கள் கவர்ந்து வருகின்றன. இதில் #mahakumbh2025, #gangasnan, மற்றும் #prayagrajkumbh உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்துகின்றனர்.

ஒரு பெண் தனது கீழ் முதுகு, பின்பகுதி வெளியே தெரியும் நிலையில் ஆற்றில் குளிக்கும் வீடியோ ஒன்று அதற்கு உதாரணம். தான் வீடியோ பதிவு செய்யப்படுவதை அறியாமல், அந்த பெண் தொடர்ந்து குளிக்கிறார். இந்த வீடியோ பகிரப்பட்ட சமூக வலைதள கணக்கை போல ஏராளமான கணக்குகளில் இதுபோன்ற ஏராளமான வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் தற்போது மகா கும்பமேளாவில் எடுக்கப்பட்ட வீடியோக்களும், பழைய வீடியோக்களும் சேர்ந்தே உள்ளன. டெலிகிராமில் "கங்கை நதி திறந்தவெளி குளியல் குழு", "மறைக்கப்பட்ட குளியல் வீடியோக்கள் குழு" மற்றும் "திறந்தவெளி குளியல் வீடியோக்கள் குழு" போன்ற சேனல்கள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 18 வரை டெலிகிராம் அனலிடிக்ஸ் படி, 'திறந்தவெளி குளியல்' என்பதை அதிக பெயர்கள் தேடியுள்ளனர்.

இதில் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பலவற்றில், பெண்கள் உடை மாற்றுவது, துண்டுகளுடன் நிற்பது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சேனல்களில் இணைய ரூ.1,999 முதல் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கும்பமேளாவுக்கு வரும் எல்லோருடைய கைகளிலும் மொபைல் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், யார் யாருடைய புகைப்படம் எடுக்கிறார்கள், யாரை வீடியோ எடுக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதை சாதகமாக பயன்படுத்தி இத்தகைய கும்பல்கள் இயங்கி வருகின்றன.

இதுபோன்ற டெலிகிராம் சேனல்களில், பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைத் தவிர, மருத்துவர்கள், செவிலியர்களால் பெண்கள் பரிசோதிக்கப்படும் சிசிடிவி காட்சிகள், அவர்களின் அந்தரங்க உறுப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது உள்ளிட்ட வீடியோக்களும் வளம் வருகின்றன.

மகா கும்பமேளாவில் குளிக்கும் பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மகா கும்பமேளாவில் பெண்களின் கௌரவத்தைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. இது மிகவும் அநாகரீகமான மற்றும் உணர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய விஷயம். மகா கும்பமேளாவில் மோட்சம் பெற வந்த பெண் சக்திகயின் படங்கள் வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்ட செய்தியால் பக்தர்கள் மத்தியில் பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது.

பெண்களின் கௌரவத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. இந்த ஆன்லைன் விற்பனையிலிருந்து ஜிஎஸ்டி சம்பாதிப்பதன் மூலம் அரசாங்கம் இந்த சட்டவிரோத வியாபாரத்தில் பங்குதாரராக மாறவில்லையா?

உ.பி. மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இதை உடனடியாகக் கவனத்தில் கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: