சனி, 22 பிப்ரவரி, 2025

கர்நாடகா- மகாராஷ்டிரா இடையே பேருந்து சேவைகள் நிறுத்தம்! .. பேருந்து தாக்கப்பட்டதால் பதற்றம்

 tamil.oneindia.com  - Velmurugan P : பெங்களூர்: கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையேயான பேருந்து சேவைகள் சனிக்கிழமை இரவு 7 மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை இரவு கர்நாடகாவின் பெலகாவி அருகே ஒரு மகாராஷ்டிரா மாநில அரசு பேருந்து தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பேருந்து சேவைகள் இரு மாநிலங்களுக்கு இடையே தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையோரத்தில் இருக்கும் பெலகாவி மாவட்டம் கர்நாடகாவுக்கு சொந்தமானது ஆகும். இங்கு மராத்தி பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர்.அதேபோல் கன்னடம் பேசும் மக்களும் உள்ளனர். மராத்தி பேசும் மக்கள். பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு அங்கு வசிக்கும் கன்னடம் பேசும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இரு மாநில அரசு தலைவர்களுமே அந்தந்த மாநிலங்களுக்கு ஆதரவாக பலமுறை போராட்டங்களும் நடத்தியுள்ளனர். அவ்வபோது மராத்தி, கன்னடா மொழி தொடர்பாக பிரச்சனைகள் எழுந்து வருகிறது.
Bangalore Karnataka Maharashtra bus

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கர்நாடகா அரசு பேருந்தில் பணிபுபுரியும் மல்லப்பா ஹுக்கேரி என்ற நடத்துனர் பெலகாவி அருகே சுலேபாவி கிராமத்தில் கன்னடத்திற்கு பதில் மராத்தி பேசச்சொல்லி தாக்கப்பட்டுள்ளார். இதுபற்றி நடத்துனர் கூறும் போது, சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் ஏறினார். அவர் மராத்தியில் பேசினார். நான் 'எனக்கு மராத்தி தெரியாது, கன்னடத்தில் பேசுங்கள்' என்று நான் கூறினேன். மராத்தி தெரியாது என்று சொன்னதும் என்னை அவமானப்படுத்திய அந்த பெண், நான் கட்டாயம் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது திடீரென அங்கிருந்த பலர் ஒன்று கூடி என்னை சரமாரியாக தாக்கினார்கள் " என்றார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த அரசுப் பேருந்து நடத்துநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் 14 வயது சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நடத்துநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 14 வயது சிறுமி, நடத்துநர் தனக்கு எதிராக அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். போக்சோ வழக்கு தொடர்பாக இன்னும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. விசாரணைக்கு பிறகே கைது பற்றி முடிவு செய்வோம் என்று போலீசார் கூறினார்கள்.

இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பெங்களூரிலிருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிரா மாநில அரசு பேருந்து வெள்ளிக்கிழமை இரவு கன்னட மொழி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. ஓட்டுநர் பாஸ்கர் ஜாதவின் முகத்தில் கருப்பு மை பூசி தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் நடந்ததை மகாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் உறுதி செய்துள்ளார். மேலும் கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வரை பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படாது என்று அமைச்சர் சர்நாயக் கூறினார்.

இதனிடையே காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கர்நாடகாவில் இருந்து மகாராஷ்டிரா நோக்கி செல்லும் அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து செல்லும் பேருந்துகள் பெலகாவி மாவ்டடம் நிப்பானி தாலுகாவில் உள்ள கோக்னோலி (எல்லை) வரை சென்று வருகின்றன. அதேபோல் மகாராஷ்டிரா மாநில பேருந்துகளும் கோக்னோலி வரை தான் சென்று வருகின்றன.

கருத்துகள் இல்லை: