![]() |
தன்னை எம்பியாக்கிய புலிகளுக்காக வாழ்நாள் முழுவதும் அவர்களின் ஏவல் பேயாக எப்படி எப்படி எல்லாம் திரு யோகேஸ்வரன் செயல்பட்டிருக்கிறார். அமிர்தலிங்கம் கொலைக்கு எவ்வளவு வசதி செய்து கொடுத்திருக்கிறார் திரு யோகேஸ்வரன் எம்பி?
சென்னை பத்திரிகையாளர் திரு கோபாலனின் இந்த பதிவு பல இருட்டு பக்கங்களை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது
gopalan chennai : அமிர்தலிங்கம் இலங்கை திரும்பியதுமே அவர் விடுதலைப் புலிகளின் முதல் குறியானார். அவரை நெருங்க யோகேஸ்வரனைப் பயன்படுத்திக்கொண்டனர். யோகேஸ்வரன் எல்லோரையும் எளிதில் நம்பிவிடுவார். விடுதலைப்புலிகளால் அவரும் சிறைப் படுத்தப்பட்டிருந்தாலும் அவருக்கு அவர்கள் மீது அனுதாபம், அன்பு உண்டு. தமிழர்கள் ஒன்றுபடவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியவர் அவர்.
கொழும்பில் விடுதலைப் புலியினர் சார்பில் யோகேஸ்வரனை முதன் முதலில் சந்தித்தது அறிவு என அழைக்கப்பட்ட சிவகுமார். ”வன்னிக்கு வாருங்கள், முன்னணியின் தலைவர் சிவ சிதம்பரத்தையும் செயலர் நாயகம் அமிர்தலிங்கத்தையும் அழைத்துக்கொண்டு வாருங்கள் ஒற்றுமை குறித்துப் பேசுவோம்,” என அறிவு அப்போது அழைப்பு விடுத்திருக்கிறார்
ஆபத்துக்களை அதிகம் உணராமல், மற்ற தலைவர்களிடமும் சொல்லாமல் யோகேஸ்வரன் முதலில் செல்கிறார். பாண்டிகுளத்தில் அந்த இரகசிய சந்திப்பு நிகழ்கிறது.
அப்போதுதான் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்த விக்னா எல்.டி.டி.இ யின் வவுனியா பகுதி அரசியல் பிரிவின் தற்காலிகத் தலைவர் பீட்டர் லியோன் அலாசியஸ் என்பது யோகேஸ்வனுக்குத் தெரியவந்தது.
மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றாலும் அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் வராதது ஏமாற்றமளிக்கிறது என்றார் பீட்டர். மாத்தையா அவ்விருவரையும் சந்திக்கத் தயராயிருப்பதாகவும் பீட்டர் தெரிவித்தார். அவர்கள் வருவதற்கான ஏற்பாட்டினை செய்யவே தான் வந்ததாக யோகேஸ்வரன் கூறினார்.
மான்கறி விருந்தெல்லாம் அவருக்கு அப்போது அளிக்கப்பட்டது. ஒரே மகிழ்ச்சி. ஆனால் கொழும்பு திரும்பிய அவருக்கு மற்ற தலைவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் சென்றுவந்திருக்கிறோம் எப்படி தகவலை உடைப்பது என உறுத்தியிருக்கவேண்டும்.
தான் மனைவியுடன் கண்டி சென்று வந்ததாகவே கூறிக்கொண்டிருந்தார். சாட்சிக்காக சரோஜினையைக் கூட அழைத்துச் சென்று கண்டியில் ஒரு உறவினர் வீட்டில் விட்டுவிட்டு பாண்டிகுளம் சென்றவர் யோகேஸ்வரன்.
ஆனால் அவரது வான் டயர்களில் சிகப்பு மண் ஒட்டியிருந்தது. தவிரவும் அவர் யாழ்ப்பாண பலாப்பழங்களை வாங்கி வந்திருந்தார் கண்டியில் கிடைக்கும் காய் கனிகளை அல்ல. ஆனந்த சங்கரி ஏதோ நடக்கிறது என ஊகித்துவிட்டார். ஆனால் துருவித் துருவி கேட்டபோதும் அவரிடம் விடுதலைப் புலி தலைவர்களை தான் சந்தித்தது குறித்து யோகேஸ்வரன் வாய் திறக்கவில்லை.
என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று அவர் திணறிக்கொண்டிருந்த வேளையிலேயே, சிவசிதம்பரத்தையும் அமிர்தலிங்கத்தையும் அழைத்துகொண்டு வருமாறு டெலிஃபோனில் விடுதலைப்புலிகள் நச்சரிக்கத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் சிவசிதம்பரம் சென்னை செல்கிறார். அங்கேதான் அவரது மனைவி தன் மகன் மற்றும் மருமகளுடன் அப்போது வசித்துக்கொண்டிருந்தார்.
சிவசிதம்பரம் சென்ற செய்தியை யோகேஸ்வரன் விடுதலைப்புலிகளுக்குத் தெரிவிக்க, சரி இனியும் கால தாமதம் வேண்டாம், அமிர்தலிங்கத்துடன் வவுனியா வாருங்கள் என அன்புக் கட்டளையிடுகின்றனர்.
வேறுவழியில்லாமல் யோகேஷ் அமீரிடம் மென்று விழுங்கிச் சொல்ல, அவருக்குக் கடுங்கோபம். யாரைக் கேட்டுகொண்டு ஒத்துக்கொண்டீர்கள் என்று எகிறி, இறுதியில் வடக்கே சென்று அவர்களை சந்திக்கும் உத்தேசமில்லை என்று திட்டவட்டமாக அமிர்தலிங்கம் கூறிவிடுகிறார்.
இப்போது யோகேஷுக்கு மேலும் ஒரு சிக்கல். எப்படி விடுதலைப்புலிகளிடம் இதைச் சொல்வது, அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்?
வேறு ஒரு தளத்தில் விறுவிறுப்பானதொரு திருப்பம். அதிபர் பிரேமதாசா விடுதலைப்புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்குகிறார். ஆண்டன் பாலசிங்கம் தலைமையில் ஒரு குழு கொழும்பு வந்தது. அவர்களுடன் பீட்டர் லியோன் அலாசியஸ், விக்னா உட்பட பேச்சு வார்த்தைக்குத் தொடர்பில்லாத வேறு பல எல்டிடியினரும் வந்து சேர்ந்தனர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி கொழும்பை ஒட்டிய பகுதிகளில் இடம் பிடிக்கத் தொடங்கினர்.
தொடர்ந்து அவர்கள் யோகேஸ்வரனை நச்சரிக்க, அவர் அமிர்தலிங்கத்தின் பதிலை சொல்லமுடியாமல் தவிக்க இறுதியில் இரத்த அழுத்தம் உயர, ஹார்ட் அட்டாக்கே வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் அவரை விடுவதாயில்லை போலும் புலிகள், விசுவும் அலோசியசும் அவரை வந்து பார்க்கின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வடமராச்சி பகுதியில் உள்ள வத்திரி எனும் நகரைச் சேர்ந்தவர் ராசையா அரவிந்த ராசா எனும் விசு. 1983 கலவரங்களுக்குப் பிறகு மேல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இயக்கத்தில் சேர்ந்தவர் அவர். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஜ்வாலாமுகியில் இந்திய அரசு அளித்த ஆயுதப்பயிற்சியில் பங்கேற்றார்.
Praba-mahendrarajah
பிரபாகரனுடன் மாத்தையா. விடுதலைப்புலிகளின் துணைத்தளபதியாக இயங்கிய மாத்தையா பின்னாளில் துரோகி என அறிவிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்
பின்னர் இலங்கை திரும்பியவர் கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் அடங்கிய வன்னிப் பிரிவின் தலைவரான கோபால்சாமி மஹேந்திரராஜா எனும் மாத்தையவின் கீழ் பணியாற்றி அவருக்கு மிக நெருக்கமானார்.
1987ல் பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்புகிறார். இலங்கை இராணுவத்துடன் மோதல் முற்றுகிறது. மாத்தையாவும் விசுவும் யாழ்ப்பாணம் செல்கின்றனர். மாத்தையா துணைத் தளபதியாக அறிவிக்கப்பட்டபின் அவர் பீட்டா 2 எனும் உளவுப் பிரிவைத் துவக்கி, விசுவிடன் அதன் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
அந்த விசுதான் பின் நாளில் அலாசியசுடன் சென்று யோகேஸ்வரனை மருத்துவமனையில் சந்திக்கிறார். அச் சந்திப்பில் உடனிருந்த மன்னார் எம்பி சூசைதாசன், நெஞ்சு வலி வந்து, சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த யோகேஷிடம், எவ்விதக் கருணையும் காட்டாமல் அவ்விருவரும் கடுமையாகவே பேசினர் என்கிறார், அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரத்தை சந்திப்பது தாமதாவது புலிகள் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்ததை தன்னால் உணரமுடிந்த்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
யோகேஸ்வரன் வீடு திரும்பிய பிறகும் விடுவதாயில்லை புலிகள். நான்கு முறை அவ்வாறு சந்தித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் சில நிமிடங்களே. என்ன நடந்தது என்று தெரியாது. வேறு எந்த ஐக்கிய முன்னணித் தலைவரும் உடன் இல்லை. அவர்மட்டும்தான். அவரைப் படாத பாடு படுத்தியிருக்கவேண்டும். அச் சந்திப்புக்களுக்குப் பிறகு மிக நொந்துபோய் காணப்பட்டார் அவர். ஐந்தாவது சந்திப்பு 1989ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று. அதுவே அவரது வாழ்வின் இறுதி நாளாகவும் அமைந்த்து.
கொழும்பு திரும்பி ‘பாதுகாப்பான’ இடத்தில் தலைவர்கள் தங்கவைக்கப்பட்டனரல்லவா. அப்போது ஒரு நாள் மாலை அமிர்தலிங்கமும் மங்கையர்க்கரசியும் தங்கள் வீட்டிற்கருகே நடந்துகொண்டிருந்தபோது, இரண்டு விடுதலைப் புலியினரை சந்திக்க நேர்கிறது. அவர்கள் தங்களை முறைத்துப் பார்த்ததாகவும், அப்போது தனது அச்சத்தினை தான் வெளிப்படுத்தியதாகவும், பதிலுக்கு அமிர்தலிங்கம், “தவம் இதையெல்லாம் பெரிது படுத்தவேண்டாம்..அவர்கள் போராளிகளல்லவா.. நம்மை மிரட்டுவது போன்ற தோரணை அவர்களிடம் இருப்பது இயல்பு,” எனக்கூறியதாகவும் மங்கையர்க்கரசி தெரிவித்தார்.
இதனிடையே சிவசிதம்பரம் கொழும்பு திரும்புகிறார். தொடர்ந்து புலிகள் அழுத்தம் கொடுக்க, யோகேஸ்வரன், சரி வன்னி செல்லவேண்டாம். இங்கேயாவது சந்தித்து விடுங்களேன் என மன்றாடுகிறார் அமீரிடம்.
விடுதலைப் புலிகளை சந்திப்பதால் ஒற்றுமை உருவாகக்கூடும், விடுதலைப்புலிகளுடன் ஏதாவது உடன்பாடு ஏற்பட்டால் அது கூட்டணிக்கும் நல்லதுதானே என யோகேஸ்வரன் கருதினார்.
யோகேஸ்வரன் சேம் சைட் கோல் போடுபவர் என ஒருமுறை பிரபாகரன் கூறினாராம்!
அப்படித்தான் அவரையும் அறியாமல் நடந்தது. அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் ஒத்துக்கொள்ள, புலிகளுக்குத் தகவல் சொல்லி அனுப்பப்படுகிறது. அலாசியஸ் காலை 10 மணிக்கு டெலிஃபோனில் பேசி மாலை ஆறு மணிக்கு வருவதாகத் தெரிக்கிறார்.
அன்றோ இலங்கைக்கான இந்தியத் தூதர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளவேண்டியிருந்தது. அண்ணே கொஞ்ச நேரம் பொடியன்களிடம் பேசிவிட்டுப் போங்களேன் என யோகேஸ்வரன் கூற அவர்களும் ஒத்துக்கொள்கின்றனர்.
மீண்டும் ஒரு அழைப்பு. “சந்திக்க அரசியல் பிரிவுத் தலைவர் யோகியும்வருகிறார். 6.30 மணிக்கு வருகிறோம். ஆனால் வருவோரை சோதனையிடக்கூடாது,” என அலாசியஸ் வேண்டிக்கொள்கிறார்.
வெள்ளந்தியாக யோகேஸ்வரனும் ஒத்துக்கொள்கிறார். யோகியே வரும்போது உடன்வருவோரை சோதனையிடச் சொல்வது இழுக்கல்லவா?
அவருக்குத் தலை கால் புரியவில்லை. யோகியே வருகிறாரென்றால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு?
உதவி ஆய்வாளர் தம்பிராஜா கந்தசாமியிடம், ”பெரிய ஆளுங்க வாராங்க…சோதனையெல்லாம் வேண்டாம்,” என்கிறார். “அய்யா என்ன இருந்தாலும் இந்தப் பசங்களை எல்லாம் நம்பக்கூடாதுங்க,” என இழுக்கிறார். கந்தசாமி.
”கவலையை விடுங்க… ஒண்ணும் ஆயிராது,.,,,அவுங்க நம்ம விருந்தாளிங்க இல்லியா…..Search அது இதுன்னு செஞ்சா அது நல்லாவா இருக்கும்?” என்கிறார் யோகேஷ், கந்தசாமி என்ன செய்வார் பாவம்?
அந்த வீட்டின் முதல் மாடியில் யோகேஸ்வரன், அவரது மனைவி சரோஜினி மற்றும் சிவசிதம்பரமும்,. கீழ் தளத்தில் அமிர்தலிங்கம் தம்பதியினருடன் மாவை சேனாதிராஜாவும் தங்கியிருந்தனர்.
6.40. விசு எனும் இராசையா அரவிந்த ராஜா, விக்னா எனும் பீட்டர் லியான் அலாசியஸ் மற்றும் அறிவு எனும் சிவா ஆகிய மூவர் அடங்கிய விடுதலைப் புலிகள் குழு வந்து சேர்கிறது, ஆனால் அவர்களுடன் யோகி இல்லை. சோதனையிடப்படாமல் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சிவா கீழேயே நின்றுகொள்கிறார்.
யோகி வராதது யோகேஷுக்கு ஏமாற்றமே. ஆயின் என் செய? அவர்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்று அமரவைக்கிறார். சரோஜினி சிற்றுண்டி தயார் செய்ய உள்ளே செல்கிறார். அமிர்தலிங்கத்திற்குச் சொல்லி அனுப்பப்படுகிறது. முதல்நாள் தங்களை சந்தித்துவிட்டு இலண்டன் திரும்பிய மகன் பகீரதனிடமிருந்து டெலிஃபோன் வந்தால் தகவல் சொல்லுமாறு கூறிவிட்டு அமிர்தலிங்கம் மேல் தளத்திற்குச் செல்கிறார்.
அவர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி என புலிப் பிரதிதிகள் கூறுகின்றனர். பதிலுக்கு இவர்களும் போராளிகளின் தியாகத்தை மதிப்பதாகவும் ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் கிடைக்கக்கூடிய பயன்களை நழுவவிடக்கூடாது, புலிகளும், ஐக்கிய முன்னணியினரும் இணைந்து செயல்படவேண்டும் எனக் கூறுகின்றனர்.
அடுத்த சந்திப்பு எங்கே எப்போது என விவாதிக்கப்படுகிறது. இந்திய அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தைகள் குறித்து விசு, ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டே பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்றார். எல்லோரும் சிரிக்கிறார்கள்.
கீழே நின்றுகொண்டிருந்த அறிவு பரபரப்பாக, தொடர்ந்து தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தவண்ணம், குறுக்கும் நெடுக்குமாக திரிந்துகொண்டிருந்தார்.
மஹாவேலி அமைச்சிலிருந்து அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டிருந்த கெகால் மாவட்டத்தைச் சேர்ந்த நிசாங்கா திப்போட்டுமுனுவா எனும் போலீஸ்காரருக்கு அறிவின் நடமாட்டம் குறித்து சந்தேகம் எழுந்து, அவரைப் பிடித்து தீவிரமாக சோதனையிட்டு, அவரிடமிருந்து துப்பாக்கி குண்டுகளையும் கையெறிகுண்டுகளையும் கைப்பற்றினார்.
பின்னர் அவரை சத்தியமூர்த்தியிடம்விட்டுவிட்டு நிசாங்காவும் கந்தசாமியும் அமைதியாக மேலே சென்றனர்.
கந்தசாமி மேல் படியில் நின்றுகொண்டார். உள்ளிருப்பவர்கள் கண்ணில்படாதபடி பால்கனி சுவற்றில் சாய்ந்து நின்றார் நிசாங்கா. உள்ளே சென்று பேச்சுவார்த்தையில் குறுக்கிட அவர்கள் விரும்பவில்லை. ஆயினும் குண்டுகளும் கிரனேடுகளும் அவர்களை கவலையுறச்செய்திருந்தன. எனவே முன்னெச்செரிக்கையாக அப்படி நின்றுகொண்டனர்.
உள்ளேயோ சகஜமாக, கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தனர். மாலை 7.20 இருக்கலாம். தன் கோப்பையை டீ பாயின்மேல் வைப்பதற்காக எழுந்த விசு அமிர்தலிங்கம் பக்கம் திரும்பி, ”எல்லோரும் புலிகளை அரக்கர்கள் என்று நினைப்பினம்…ஆனால் உண்மையான அரக்கர்கள் நீங்கள்தான்,” என்றார்.
அவர் ஏதோ தமாஷ் பண்ணுகிறார் என நினைத்து மற்றவர்கள் சிரித்துக்கொண்டிருக்கும்போதே விசு விரைந்து தன் பிஸ்டலை உருவி அமிர்தலிங்கத்தை நோக்கி சுடத் துவங்கினார்.
அதிர்ந்துபோன யோகேஸ்வரன் அப்படிச் செய்யாதீர்கள் என்று அலறியபடி எழுந்தார். அலோசியஸ் அவரைச் சுட்டார்.
சிவசிதம்பரத்தால் வேண்டாம் வேண்டம் என்று மட்டுமே சொல்ல முடிந்தது. குண்டுச் சத்தம் கேட்டு திடுக்கிட்ட நிசாங்கா, கண்ணாடித் தடுப்பு வழியே பார்த்து, அப்போதே சுடத் துவங்குகிறார். விசு, அலோசியஸ் இருவரையுமே குண்டுகள் துளைக்கின்றன. ஆனால் அவர்கள் வேகமாக வெளியில் ஓடுகின்றனர்.
உள்ளே ஓடிவரும் கந்தசாமியும் அவர்களை நோக்கி சுடுகிறார். திருப்பிச் சுட்டுக்கொண்டே ஓடும் இருவரின் மீது மீண்டும் நிசாங்கா சுடுகிறார். இறுதியில் இரு கொலையாளிகளும் கொல்லப்படுகின்றனர்.
இந்தக் களேபரத்தில் திமிறிக்கொண்டு தப்பிக்க முயற்சித்த சிவகுமார் சத்தியமூர்த்தியிடமிருந்து கிரனேடையும் பிடுங்க முயல்கிறார். ஆனால் அவரும் நிசாங்காவின் கரங்களில் மடிகிறார்.
அப்புறம் மனைவிமார் ஓடி வருகின்றனர். பீதியில் சிவசிதம்பரம் உறைந்துபோயிருந்தார். இரத்தவெள்ளத்தில் கிடந்த யோகேஸ்வரன் “பாஸ்டார்ட்ஸ், பாஸ்டர்ட்ஸ்” என முனகியபடி இருந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அமீரும் யோகேஸ்வரனும் மரணித்திருந்தனர். (சிவசிதம்பரம் பல ஆண்டுகள் கழித்து 2000ல் இறக்கிறார்.)
தமிழர் தலைவர்களிருவர் சுட்டுகொல்லப்பட்ட செய்தி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவிற்கு சொல்லப்பட்டது. நல்லவேளை அமிர்தலிங்கத்தை சிங்களர் எவரும் அவகளைக் கொல்லவில்லை என்றாராம்.
(ஸ்ரீமாவோவிடம் செய்தி சொன்னவர் அவரது தனிச் செயலர் லசாந்தா விக்ரமதுங்கே. 2009ஆம் ஆண்டு கொழும்பில் கொல்லப்பட்ட பத்திரிகை ஆசிரியர்.)
ஜூலை 13 அன்று அமிர்தலிங்கத்தின் படுகொலை. அவரது மகன் பகீரதன் அதற்கு முதல் நாள்தான் பிரிட்டன் திரும்புகிறார். விமானநிலையத்தில் ”கவலைப்படாதீங்க உங்கப்பாவை நான் பத்திரமா பாத்துக்குவேன்,” என உறுதியளித்தவர் நிசாங்கா.
”தந்தை கொல்லப்பட்ட உடன் திரும்பும் பகீரதனின் கால்களில் விழுந்து என்னை மன்னித்துவிடு தம்பி, நான் வாக்கு தவறிவிட்டேன்,”எனச்சொல்லி கதறினாராம் நிசாங்கா.
பகீரதன் தான் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். நிசாங்கா இப்போது பணி ஓய்வுபெற்றுவிட்டார். அமீர் கொல்லப்பட்டு 21 ஆண்டுகள் கழித்து இலங்கை சென்ற அமிர்தலிங்கத்தின் மனைவியும் பகீரதனும் சபரகமுவா பிரதேசம் சென்று நிசாங்கா குடும்பத்தினரை சந்தித்தனர்.
நிசாங்காவுடன் மங்கையர்க்கரசி
உணர்ச்சிமயமான சந்திப்பு. நிசாங்காவை பார்த்தவுடன் இருவரும் மீண்டும் உடைந்துபோய் கதறி அழுதனர்.
(மூத்த பத்திரிகையாளர் டிபிஎஸ் ஜயராஜ் தனது வலைத்தளத்தில் http://dbsjeyaraj.com/dbsj/archives/32136 எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக