BBC News தமிழ் - - லக்கோஜு ஸ்ரீநிவாஸ் : ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஆந்திராவில் தலைநகர் அமராவதி மற்றும் அருகிலுள்ள விஜயவாடா ஆகிய இரண்டு பகுதிகளும் நீரில் மூழ்கின.
கிருஷ்ணா, குண்டூர், ஏலூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
விஜயவாடாவில் புடமேரு ஆறு நிரம்பியதால் சிங்நகர், வம்பே காலனி, ராஜராஜேஸ்வரிபேட்டை உள்ளிட்ட பல பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின.விஜயவாடாவில்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை மீட்டபோது கைக்குழந்தையை தூக்கிச்
சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த பணியாளர்
கிருஷ்ணா லங்கா, இப்ராஹிம்பட்டினம், ஜூபுடி மற்றும் பிற பகுதிகளும் நீரில் மூழ்கின. புலிகத்த, சிறுகுல்லங்க, யட்லலங்கா மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு ஏற்கனவே முகாம்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணா ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் பிரகாசம் தடுப்பணையின் கீழ் 70 கதவணைகள் உயர்த்தப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பிரகாசம் அணையில் இருந்து இதுவரை 11 லட்சத்து 20 ஆயிரத்து 101 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஜயவாடாவில் வீடுகளில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக மச்சிலிப்பட்டினத்தில் இருந்து சுமார் 100 படகுகள் வரவழைக்கப்பட்டன. இவை லாரிகள் மற்றும் வேன்களில் சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டன.
மீட்புப் படையினர் படகுகளில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
தெலங்கானாவில் என்ன நிலவரம்?
தெலங்கானா மாநிலத்திலும் இடைவிடாது பெய்த மழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. கனமழையால் கம்மம், வாரங்கல், நல்கொண்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கம்மம் நகரின் சில பகுதிகளில் 10 அடி வரை வெள்ளம் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன.
மூணாறு வெள்ளப்பெருக்கு காரணமாக கம்மம் நகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் மற்றும் காலனிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
வாரங்கல் மற்றும் மகபூபாபாத் மாவட்டங்களும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில் தண்டவாளத்திற்கு அடியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கம்மம் மாவட்டத்தில் உள்ள பாலேறு நீர்த்தேக்கம் நிரம்பியதால், நீர்த்தேக்கத்தில் இருந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. குசுமஞ்சி வீதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
இரு மாநில முதலமைச்சர்களுடன் பேசிய பிரதமர்
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோதி தொலைபேசியில் பேசினார்.
தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அவர் உறுதி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானாவில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார் என தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக