சாவித்திரி கண்ணன் : அசோக் நகர் அரசு பள்ளியில் ஆதிக்க சக்திகள் நடத்திய சம்பவம் வெளியில் தெரிய வந்ததால் இவ்வளவு பரபரப்பு!
கடந்த ஓராண்டாகவே இது போல தமிழகம் முழுக்க பல பள்ளிகளில் சில அமைப்பினர் கல்வித் துறை அனுப்பியதாக யோகா பெயரிலும், உடற்பயிற்சி பெயரிலும் உள் நுழைந்து கேட்பாரற்ற வகையில் செயல்படுகின்றனர் என அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.
ஆன்மீகத்திற்கோ, யோகாவிற்கோ நான் எதிரானவன் இல்லை. அதற்கென தனி பள்ளிகள் நடத்துங்கள். மகிழ்ச்சி. தேவைப்படுவோர் வந்து கற்கக்கட்டுமே!
‘’புத்தகப் படிப்பு மட்டும் போதாது, மத்தகப் படிப்பு வேண்டும்’’
‘’இதையெல்லாம் உணர மறுத்ததால் தான், பேச தயங்குவதால் தான் இந்த நாடு நாசமாகப் போனது.’’
‘’இந்த நாட்டில் 67,000 குருகுலங்கள் இருந்தன. அவை அழிக்கப்பட்டன’’
‘’3,25000 குருகுலங்கள் இருந்ததன. அவையும் அழிக்கப்பட்டன.’’
ஒரு மந்திரத்தை சொன்னால், நெருப்பு மழை பொழியும். ஒரு மந்திரத்தை சொன்னால் நோய் பறந்து போகும். ஒரு மந்திரத்தை சொன்னால் காற்றில் பறந்து போக முடியும்....என ஒலைச் சுவடியில் எழுதி வைத்ததை எல்லாம் பிரிட்டிஷார் அழித்து விட்டனர்....!
- பரம்பொருள் அமைப்பின் விஷ்ணு பேசியதின் சில துளிகளே இவை!
எவ்வளவு பொய்கள்... எவ்வளவு வன்மம்... எவ்வளவு விஷமத்தனம்...!
உங்களை மாதிரி சனாதனிகளிடம் இருந்து எளிய மக்களை காப்பாற்றி, கல்வி அளித்தவர்கள் ஆங்கிலேயர்கள். சூத்திரனான சம்பூகன் மந்திரங்கள் ஓதி தவம் செய்து கொண்டிருந்த போது, அவனை கொன்றவன் ராமன்.
’’பிராமணர்களைத் தவிர, பிறர் தவம் செய்யக் கூடாது’’ என சொல்லிய சமூகம் எதுவோ, அந்த சமூகத்தின் பிரதிநிதி தான் இந்த விஷ்ணு என்பதை நாம் மறுக்க முடியாது.
இப்ப கூட குருகுலக் கல்விக் கூடம் ஆரம்பித்து சொல்லிக் கொடுங்களேன், மாணவர்கள் வரும் பட்சத்தில். அரசு பள்ளி மாணவச் செல்வங்களை குழப்ப வேண்டாமே!
முதலமைச்சர் அமெரிக்காவில் இருந்து தெளிவில்லாத விளக்கம் தந்துள்ளார்.
அன்பில் மகேஷ் நிலைமையை சமாளிக்க, பள்ளிக்கு நேரடி விசிட் செய்து எதிர்த்து கேட்ட ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி உள்ளார். இந்த விஷ்ணு அமைச்சர் அன்பில் பொய்யா மொழியை அவரது அலுவலகத்திலேயே சந்தித்து தான் இது போல நிகழ்ச்சிகள் நடந்த வாய்ப்பு கேட்டுள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வந்துவிட்டன.
இதற்கு அடுத்த கட்டமாக கல்வி அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்கி உள்ளனர். ஆக, இதில் அமைச்சர் தான் முதல் கல்பிரிட்.
விரும்பத்தகாத மிகப் பெரிய மாற்றங்கள் – அதாவது ஏமாற்றங்கள் -இந்த மாநில ஆட்சியாளர்களின் ஒத்துழைப்போடு தமிழ் நாட்டில் நடந்து கொண்டுள்ளன... என்பதை நான் தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறேன்...!
சாவித்திரி கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக