கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷை இப்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் தான் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்திய நிலையில், இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆக. 9ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்தில் இதுவரை சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இதில் வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்களும் நடந்து வருகின்றன.
பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். அவருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. பெண் மருத்துவர் கொல்லப்பட்ட போது அதைத் தற்கொலை எனப் பெற்றோரிடம் முதலில் சொன்னது, குற்றம் நடந்த செமினார் ஹால் அருகே புதுப்பிப்பு பணிகள் அவசர அவசரமாக நடந்தது என இவரைச் சுற்றிப் பல சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கடந்த வாரம் அவரிடம் உண்மையைக் கண்டறியும் சோதனையையும் சிபிஐ அதிகாரிகள் நடத்தி இருந்தனர்.
இது மட்டுமின்றி ஆர்ஜி கார் மருத்துவமனையில் பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும் அதில் சந்தீப் கோஷுக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சந்தீப் கோஷுக்கு சொந்தமான 15 இடங்களில் கடந்த வாரம் ரெய்டும் நடத்தினர்.
இந்தச் சூழலில் இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை இப்போது கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சிபிஐ அதிகாரிகள் தான் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக