BBC News தமிழ் : தெற்காசியாவில் முதன்முறையாக, சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நடைபெறுகிறது. ஃபார்முலா 4 (F4) இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ரேசிங் லீக் (IRL- ஐஆர்எல்) என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இவைதவிர ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டிகளும் நடைபெறுகின்றன.
கார் பந்தயங்களுக்கு இடையில் பொழுதுபோக்கு கார் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இப்போது நடைபெறுவது ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்தின் 2ஆம் சுற்று போட்டிகள். முதல் சுற்று போட்டிகள் ஒரு வாரத்திற்கு முன்பாக (ஆகஸ்ட் 24 மற்றும் 25) சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் நடைபெற்றன. தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஆந்திராவைச் சேர்ந்த தனியார் அமைப்பு
ஒன்றும் இணைந்து ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துகின்றன. சென்னை
தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா
சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள 3.5 கிலோ மீட்டர்
சுற்றளவு கொண்ட பாதையில் இது நடத்தப்படுகிறது.
இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ‘ஸ்ட்ரீட் சர்க்யூட்’ (Street Circuit) என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பெய்த மழை, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஆகியவற்றால் போட்டிகள் தாமதமாக தொடங்கின. சனிக்கிழமை இரவு ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் பயிற்சிப் போட்டிகளை தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பந்தயப் பாதையை சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பினர் (எஃப்ஐஏ) ஆய்வு செய்தனர். அப்போது ஃபார்முலா 4 கார்களை பந்தயப் பாதையில் இயக்கி அவர்கள் பரிசோதனையும் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, தகுதிச் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. தகுதி சுற்றின் அடிப்படையிலேயே பிரதான பந்தயத்தில் டிரைவர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். இதனால் தகுதிச் சுற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.
சென்னை டர்போ ரைடர்ஸ்
ஃபார்முலா 4 (F4) பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், ஆமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணிக்கு தலா 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.
கார் பந்தயங்களில் ஃபார்முலா 1 (F1) ரேஸ் என்பது சர்வதேச அளவில் நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக ஃபார்முலா 2, 3, 4 எனப் பிரித்து வைத்துள்ளனர்.
இந்தியன் ரேசிங் லீக் (IRL) பிரிவில் 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் இரு இந்திய வீரர்கள், இரு வெளிநாட்டு வீரர்கள் என ஆறு அணிகளுக்கும் மொத்தமாக 24 பேர் இருப்பார்கள். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயம். அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் இருப்பார்கள்.
சென்னை டர்போ ரைடர்ஸ் அணியில் இந்திய வீரர்களான சந்தீப் குமார், முகமது ரியான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் லான்காஸ்டர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீராங்கனை எமிலி இடம் பெற்றுள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற முதல் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற ஜான் லான்காஸ்டர், "தொழில்நுட்ப ரீதியில் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த சர்க்யூட்டைச் சுற்றியுள்ள சென்னையின் வரலாற்று நினைவுச்சின்னங்கள் இந்த பெரிய நிகழ்வுக்கு ஏற்ற பின்னணியை வழங்குகின்றன. இதில் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.
போர்ச்சுகல், செக் குடியரசு, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு என்ன லாபம்?
ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயப் போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து போட்டிகள் நடைபெறும் இடத்திலிருந்து பிபிசி தமிழிடம் பேசினார் கார், பைக் ரேஸ் சாம்பியனும் பாஜகவைச் சேர்ந்தவருமான அலிஷா அப்துல்லா.
“இதை நிச்சயம் அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும். தமிழக அரசு மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். இது ஏன் முக்கியம், நாட்டிற்கு அவசியமா என பலர் கேள்வி எழுப்புகின்றனர். தெற்காசியாவில் முதன் முறையாக இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயப் போட்டிகள் நடப்பதால், சென்னை சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இது ஒரு தொடக்கம் தான், எதிர்காலத்தில் இதுபோல பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால், சர்வதேச சுற்றுலாவும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் (Motor Sports) தொடர்பான முதலீடுகளும் அதிகரிக்கும்.” என்று கூறினார்.
ஆனால் இதைக் காண வரும் மக்கள், மீண்டும் வீட்டிற்குச் செல்லும் போது அல்லது ஒருபோதும் சாலையில் வாகனங்களை வேகமாக ஓட்டக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
‘நேரடி பலனை மட்டுமே பார்க்கக் கூடாது’
இதுகுறித்து பேசிய பொருளாதார நிபுணர் நாகப்பன் புகழேந்தி, “நாட்டில் பலர் உணவு இல்லாமல் இருக்கும் போது ராக்கெட், செயற்கைக்கோள் தேவையா என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள் அல்லவா? ஆனால் அதேசமயத்தில் இஸ்ரோவால் இந்தியாவுக்கு சர்வதேச புகழும் அங்கீகாரமும் கிடைத்தது என்பதை மறுக்க முடியாது. எனவே சில விஷயங்களில் நேரடிப் பலனை மட்டுமே பார்ப்பது சரியாக இருக்காது” என்று கூறுகிறார்.
“இந்த கார் பந்தயப் போட்டிகள் தேவையா, தமிழ்நாட்டிற்கு பலன் உண்டா என்பதைச் சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இதற்கு செலவு செய்யப்பட்ட தொகை, இதனால் கிடைத்த வருமானம், மக்களின் ஆதரவு குறித்த முழுமையான தகவல்கள் கிடைப்பதற்கு முன்பே இது வீண் வேலை என்று கூறி விட முடியாது” என்கிறார் அவர்.
இதுபோன்ற போட்டிகள் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் பெருமிதத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன என்று கூறிய அவர், “கார் பந்தயப் போட்டிகளை மக்கள் தொலைக்காட்சிகளில் தான் பார்த்திருப்பார்கள். அதை நேரடியாகக் காண வேண்டும் என்ற ஆவல் மக்களுக்கு இருக்கும். எனவே இது நல்ல முயற்சி தான்” என்று கூறினார்.
ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் 3-வது சுற்று போட்டிகள் கோவையில் செப்டம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோவா மற்றும் கொல்கத்தாவில் நடத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக