சனி, 7 செப்டம்பர், 2024

அசோக் நகர் பள்ளியில் சங்கி சொற்பொழிவு; தட்டிக்கேட்ட ஆசிரியர்- என்னதான் நடந்தது?

 நக்கீரன் : சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி, தமிழக முதல்வர் வரை சென்று விவகாரமாகியுள்ளது.
பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதகரமானத்தைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்?
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா?
அல்லது தன்னிச்சையாக இவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா?
என்பது குறித்து முழுமையாக விசாரணை தொடங்கி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம் கல்விக்கு சம்பந்தம் இல்லாத; உரிய அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வர் வரை விவகாரம் சென்ற நிலையில், 'பள்ளி குழந்தைகள் அனைவரும் முற்போக்கான மற்றும் அறிவியல் பூர்வமான கருத்துக்களை பெற்றிட வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட ஆணையிட்டுள்ளேன்' என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். 'இதில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கை தமிழகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த பாடமாக இருக்கும்' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எச்சரித்துள்ளார்.

காலையிலேயே கனத்த எதிர்ப்புகளை பெற்ற இந்த சொற்பொழிவில் அப்படி நடந்ததுதான் என்ன? சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Spiritual Discourse in School; Teacher who knocked - what happened?

மகாவிஷ்ணு நடத்திய அந்த சொற்பொழிவில் ''நம்மை மீறி இந்த பிரபஞ்சத்தில் ஒன்னு இருக்கா இல்லையா? இல்லை என டவுட் இருப்பவர்கள் மட்டும் கையை தூக்கங்கள். நான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். எனக்கும் இல்லாமல்தான் இருந்தது அதனால் தான் கேட்கிறேன். எதுவொன்று இல்லை என்றால் இந்த உடல் கீழே விழுந்து விடுமோ அது என்னது? உயிர் பிரிந்து உடல் கீழே விழுவதற்கு முன் உடலில் எது இருந்தது? எது போனது? அதைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு.

கண்களை மூடுங்கள் நீங்கள் எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் போனாலும் இது கிடைக்காது. போகிற போக்கில் சொல்கிறேன் என அலட்சியப்படுத்தக் கூடாது. ஒரு மந்திரத்தை இப்பொழுது சொல்வேன் அந்த மந்திரத்தை உங்கள் வாய் உச்சரிக்கக் கூடாது உங்கள் மனம் தான் உச்சரிக்க வேண்டும்'' என தெரிவித்து மந்திரம் ஒன்றை மாணவிகளிடம் தெரிவித்தார். மாணவிகள் அனைவரும் கண்களை மூடி கொண்டனர்.

எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக மந்திரத்தை சொல்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பிரபஞ்ச சக்தி உங்களுக்குள் இறங்குவதை உணர முடியும். மந்திரத்தை வேகப்படுத்துங்கள் இப்படிப்பட்ட ஒரு நாளுக்காக தான் உங்கள் பெற்றோர்கள் 10 மாதம் சுமந்திருக்கிறார்கள். இந்த வலி, வேதனை எல்லாம் தாண்டி ஒரு சுகப்பிரவேசமாக பிறந்த உங்களுக்கு உங்க அப்பா முத்தம் கொடுப்பதை உங்கள் தாய் பார்க்கிறார் என்று பாருங்கள்'' என சொல்லச் சொல்ல அங்கிருந்த மாணவிகள் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தனர்.

தொடர்ந்து பேசிய மகாவிஷ்ணு, ''எனர்ஜி ஏற ஆரம்பித்து விட்டால் நீங்கள் கடவுளாக மாறி விட்டீர்கள் என்று அர்த்தம். அதிகமான நேரம் இல்லை. எத்தனை பேருக்கு கலர் கலராக பயிற்சி பண்ணும் போது தெரிந்தது?'' என மாணவிகளை நோக்கி கேட்க, சில மாணவிகள் கையை உயர்த்தினர்.

Spiritual Discourse in School; Teacher who knocked - what happened?

தொடர்ந்து சைதாப்பேட்டை அரசுப் பள்ளியிலும் மகாவிஷ்ணு இதேபோன்ற சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த பொழுது கடவுள், மறுஜனனம் உள்ளிட்டவை குறித்தும் பேச தொடங்கினார். கண்ணில்லாமல் பலர் பிறக்கிறார்கள். பலர் நோய்களோடு பிறக்கிறார்கள். இறைவன் கருணையானவர் என்றால் எல்லாரையும் ஒரே மாதிரி படைத்திருக்க வேண்டுமே. ஏன் ஒருத்தன் கோடீஸ்வரனாக இருக்கிறான்; ஒருத்தன் ஏழையாக இருக்கிறான்; ஒருத்தன் கிரிமினலாக இருக்கிறான்; ஒருத்தன் நல்லவனாக இருக்கிறான்; ஒருத்தன் ஹீரோவாக இருக்கிறான்; ஒருத்தன் ஹீரோ மாதிரி இருக்கிறான்; ஏன் இந்த மாற்றங்கள் போன ஜென்மத்தில் என்ன செஞ்சீங்களோ அதை பொறுத்து உங்களுக்கு இந்த பிறவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பிறவியிலும்...'' என பேச ஆரம்பிக்க எதிர்ப்பு குரல் கிளம்பியது. அங்கிருந்த ஆசிரியர் சங்கர், ''பள்ளியில் ஆன்மிகம், கர்மா குறித்தெல்லாம் பேசுவது தவறு. இது மாணவர்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளுக்கு வழிவகுக்கும்'' என்றார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சர்ச்சை பெரியதாக வெடித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை வரை சென்றுள்ளது.

இன்று அசோக் நகர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்போக்குத்தனமான சொற்பொழிவிற்கு எதிராக கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரை பொன்னாடை போர்த்தி பாராட்டினார். தமிழ் ஆசிரியரான சங்கர் மாற்றுத்திறனாளி. தமிழ் எப்பொழுதும் தமிழகத்தை கை விடாது. இதுகுறித்து மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

கருத்துகள் இல்லை: