ராதா மனோகர் : இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்காக கூட்டணிகளை ஒழுங்கமைக்கும் பணியில் இந்திய ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது!
குறிப்பாக வடக்கு மற்றும் மலையக தமிழ் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் சஜித் பிரேமதாசா அணிக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் ஒன்றிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தெரிகிறது.
அஜித் தோவல் மற்றும் இந்திய தூதரங்களின் ஆலோசனைகள் செவி மடுத்து அரசியல் செய்யும் சிறுபான்மையினரின் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் இந்திய அரசின் தூதுவர்களோடு பேசும் பொழுது ·
தமிழகத்தில் சுமார் தொண்ணூறு ஆயிரம் தமிழர்கள் இன்னும் குடியுரிமை அற்று பெரும் கேள்விக்குறியான் வாழ்வு வாழ்கிறார்கள்
இந்திய அரசுக்கு இதை எடுத்து கூறவேண்டிய கடமையும் வாய்ப்பும் தற்போது இலங்கை தமிழ் தலைவர்களுக்கு உண்டு
முதலில் இதை செய்யுங்கள் ..
அப்புறம் இலங்கை ஜனாதிபதியாக சஜித் வருவதா விஜய் வருவதா அஜித் வருவதா என்பதை பற்றி பேசலாம் என்று உங்கள் எஜமானர்களுக்கு கூறுங்கள்
இந்த விடயத்தை வழமை போல மௌனமாக கடந்து போகப்போகிறீர்கள் என்பதுவும் தெரியும்
உங்களிடம் எந்த விதமான நேர்மையும் இல்லை
மக்கள் நலன் சார்ந்த சிந்தனையும் இல்லை என்பது உலகம் அறிந்த விடயம்
மீள்பதிவு 1 : ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இன்னும் 100000 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.
ஆனால் இன்றுவரை இதை இந்தியா நிறைவேற்றவில்லை!
மறுபுறத்தில் இந்த ஒப்பந்தத்தின் அளவை தாண்டி இரு மடங்குகிற்கு மேல் இலங்கை குடியுரிமை வழங்கி விட்டது
இலங்கையில் தற்போது நாடற்றவர்கள் என்ற மக்கள் யாருமே இல்லை!
இந்தியாவில் இன்னும் மேற்குறிப்பிட்ட அளவு தமிழர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள்!
எதெற்கெடுத்தாலும் சிங்கள அரசு சிங்கள ராணுவம் என்று வெறுப்பு அரசியல் செய்யும் தமிழக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கொஞ்சம் கண்ணை திறந்து பார்க்கவேண்டும்!
தமிழர்கள் இன்றும் நாடற்றவர்களாக இருப்பது தமிழகத்தில்தான்
இலங்கை அரசிடம் இருக்கும் நேர்மை கூட இந்திய ஒன்றிய அரசிடம் இல்லை என்பதுதான் உண்மை!
மீள் பதிவு 2 : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி மோடி அரசின் தோல்வி
இலங்கை அரசியல் தலைவர்களுடன் பேச வேண்டிய தேவை இந்திய பாதுகாப்பு ஆலோசகருக்கு இல்லை
அப்படி ஒரு தேவை ஏற்பட்டிருந்தால், கொழும்புக்கு பயணிப்பதை விட, புதுதில்லியில் இருந்தே சம்பந்தப்பட்ட தலைவர்களுடன் டோவல் பேசியிருக்க முடியும்” என்று இந்திய மூத்த இராஜதந்திர வட்டாரம் ஒன்று சண்டே ஐலண்டிடம் தெரிவித்தது.
“ஒருவேளை அஜித் தோவல் இரகசியமாக இந்த தலைவர்களை நேரில் சந்திக்க வேண்டியிருந்தால் கூட, ஊடகங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் தெரியாமல் அவர் அதைச் செய்திருக்கலாம்.
இதற்கு முன்பும் அவர் பலமுறை இதை (இரகசியமாக) செய்திருக்கிறார்.
இதைத்தான் நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியை தெரிவு செய்ய கூடாது என்று நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது திரு டல்லாஸ் அழகப்பெருமா என்ற ஒரு விலாசமில்லாத அரசியல்வாதியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று முழு மூச்சுடன் இந்தியா முயன்றது
சகல சிறுபான்மை கட்சிகளும் இந்தியாவின் சொல் கேட்டு டல்லாஸ் அழகப்பெருமா என்ற உலக மகா தலைவரை ஆதரித்தன.. ( ஆனால் பலர் இரகசிய வாக்கெடுப்பில் ரணிலுக்கு ஆதரவாக வாக்கை செலுத்தினார்கள்)
இதுதான் முன்பு நடந்தது
இப்போது மீண்டும் அதே விளையாட்டை ஏறக்குறைய அதே சிறுபான்மை அல்லக்கை கட்சிகளோடு சேர்ந்து முயல்கிறது .. அஜித் தோவலின் இலங்கை வருகையில் இந்த விளையாட்டும் அடங்கும்
இதைவிட வேறு சில முக்கிய் விடயங்களும் உள்ளன.
இது பற்றி நான் முன்பு எழுதிய பதிவை வாசியுங்கள் :
.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி பிரதமர் மோடியின் அரசியலுக்குத் தோல்வி?
இலங்கை விடயத்தில் இந்திய ஒன்றிய அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் போட்டி போட்டுகொண்டு தப்பு கணக்குகள் போட்டவண்ணமே உள்ளனர்.
சில விடயங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்!
சென்ற ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார சிக்கலின் போது மக்கள் வீதிக்கு வந்து அந்த ஆட்சியாளர்களை தூக்கி எறிந்தார்கள்.
அந்த பொருளாதார சிக்கலுக்கு வெறும் கோவிட் தொற்று மட்டும் காரணமல்ல,
வகை தொகை இல்லமால் கொள்ளை அடித்து நாட்டை நடுத்தெருவுக்கு கொண்டு வந்ததில் அன்றைய ஆட்சியாளர்களின் பங்கும் பெரிய அளவில் இருந்தது.
அந்த நிலையில் இருந்து ராஜபக்சவினர் தப்புவதற்கு அவர்களுக்கு முன்னால் தெரிந்த ஒரே ஒரு வழி,
திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்களை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவதுதான். .
இந்த மக்களின் போராட்டத்திற்குள் மறைந்து கொண்ட கலவரக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டையும் எரித்து அவரது வளர்ப்பு நாயையும் அடித்து கொன்றார்கள்.
ஏற்கனவே 1995 தேர்தலின் போது திரு ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்கு புலிகளுக்கு பணம்
கொடுத்து வெற்றியை திருடிய வரலாறும் உண்டல்லவா?
இயற்கை எவ்வளவு வேடிக்கையாக மாத்தி யோசிக்கிறது?
1995 இல் வெற்றியை தட்டி பறித்தவர்களே மீண்டும் அதே ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து தற்காலிமாக பிரதமர், ஜனாதிபதி என்று பதவிகளை கொடுத்தார்கள்.
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களின் உணவு, எரிபொருள், உரம் போன்ற பிரச்சனைகளை, தற்காலிகமாக ஒரு வழிக்கு கொண்டுவந்தார்.
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் சில கப்பல்களில் அரிசி பால் பவுடர் அவசர உதவிக்கான சில மருந்து வகைகளை அனுப்பி வைத்தார்.
முதல்வரின் இந்த உதவியானது வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வாக்கினை எனக்கு ஞாபகப்படுத்துகிறது!
அமெரிக்கா கொடுத்த உரம் பெரிய அளவில் விவசாயிகளை திருப்திப்படுத்த உதவியது.
யு எஸ் எயிட் நிறுவன பொறுப்பாளரான அமெரிக்காவின் சமந்தா பவர் ( ரணிலின் நீண்ட கால நண்பர்) என்ற அதிகாரமிக்க பெண்மணி ரணிலுக்கு பெரிய அளவில் ஆதரவளித்தார் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் ராணுவத்தின் ஒத்துழைப்பும் கிடைத்தது.
இதில் கூட மேற்கு நாடுகளின் உதவி ரணிலுக்கு இருந்ததாக பொதுவெளியில் ஒரு கருத்து பேசப்படுகிறது .
இந்நிலையில்தான் மோடி, அதானி மற்றும் ராஜபக்சக்கள் இடையே உள்ள ஒரு நல்ல கெமிஸ்ட்ரி பற்றியும் பேசவேண்டி உள்ளது.
ராஜபக்சக்களின் கட்சியான பொதுஜன முன்னணியை,
பாஜக பாணியில் அல்லது,
சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியின் பாணி கட்சியாக வளர்த்து எடுப்பதுதான் தனது இலட்சியம் என்று திரு பசில் ராஜபக்ஸ ஒருமுறை திருவாய் மலர்ந்தருளிய விடயத்தையும் இங்கே ஞாபகத்தில் கொள்வது நல்லது.
மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவோடு பாஜகவுக்கு ஒருபோதும் நட்புறவு இருந்ததே கிடையாது.
ரணில் விக்கிரமசிங்காவின் ஆளுமை என்பது ஓரளவு திரு மன்மோகன் சிங் அல்லது,
பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் போன்றவர்களோடு ஒப்பிடத்தக்கது.
இப்படிபட்ட குணாதிசயங்கள் சங்கிகளுக்கு எப்படி ஒத்துப்போகும்?
தற்காலிக ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றால்தான் அவரது பதவி நீடிக்கும்.
எனவே சட்டப்படி அதற்குரிய வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டது.
இந்த இடத்தில்தான் ,
எல்லாம் கைநழுவி போய்விட்டது என்று எண்ணிக்கொண்டிருந்த அதானி + பாஜகவுக்கு,
இந்த வாக்கெடுப்பை, ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் எண்ணம் உருவானது.
வாக்கெடுப்பில் ரணிலை தோற்கடித்து மீண்டும் ராஜபக்சக்களை அல்லது
அவர்களின் ஒரு அல்லக்கையை ஜனாதிபதியாக்கும் ஆசை உண்டானது.
இந்த பின்னணியில் ராஜபக்ச கட்சியில் இருந்து டல்லாஸ் அழகப்பெருமா என்பவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கினார்கள்.
எந்த வித செல்வாக்குமற்ற ஒரு சாதாரண அரசியல்வாதியை எப்படி நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெறவைக்க முடியும்?,
எல்லோரும் நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருந்த வேளை அழகப்பெருமாவின் பின்னால் பல வடக்கு கிழக்கு மலையக கொழும்பு தமிழ் கட்சிகளும் முஸ்லீம் கட்சிகளும் அணிவகுத்தன.
இதென்ன கூத்து என்று பலரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
ஆனால் நாளாக நாளாக அழகப்பெருமாவே வெற்றி பெறுவார் என்று ஊடகங்கள் கோரஸ் பாடத்தொடங்கின.
அவ்வளவு தூரம் இந்திய ஒன்றிய அதிகார வர்க்கமும் அரசியல் வாதிகளுக்கும் ரணிலுக்கு எதிராக களமிறங்கினார்கள்.
ராஜபக்சக்களின் ஆதரவும் அனைத்து சிறுபான்மை கட்சிகளுக்கும் ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்று கற்பனை கணக்குகளில் அவர்கள் (இந்திய ஒன்றிய அறிவாளிகள்) திளைத்து கொண்டிருந்தனர்.
ஆனால், ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் நல்ல பெரும்பான்மையுடன் திரு ரணில் விக்கிரமசிங்கா வெற்றி பெற்றார்.
ரணிலின் வெற்றி என்பதை பாஜகவின் தோல்வி என்றாக்கினார்கள் இந்திய ஒன்றிய அறிவாளிகள்.
இந்தத் தேர்தல் மூலம் இனி ஒரு போதும் இலங்கை சிறுபான்மை கட்சிகளை நம்பவே கூடாது என்ற பாடத்தை படித்தனர் சங்கிகள்.
தங்களின் அனைத்து முயற்சிகளும், அனைத்து சக்திகளும் வீணாகிப்போன கோபத்தை திரு ரணில் விக்கிரசிங்கவிடம் காட்டினார்கள்.
வழக்கமாக இலங்கையில் பதவியேற்கும் எந்த பிரதமரும் ஜனாதிபதியும் டெல்லிக்கு சென்று கைகுலுக்குவது என்பது ஒரு வரலாற்று சம்பிரதாயம். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது .
அதை பின்பு ஒரு கட்டுரையில் அலசுவோம்.
இந்த நடைமுறையினை தூக்கி கடாசினார் ரணில் விக்கிரமசிங்கா.
அவ்வளவு தூரம் ரணிலுக்கு எதிராக களமாடி இருந்தார்கள்! ஏன்?
சங்கிகளின் ஆள்பிடிக்கும் வேலையை மேற்கு நாடுகளின் உதவியோடு ரணில் முறியடித்தார் என்றும் பேசப்படுகிறது. அதில் ஓரளவு உண்மை இருக்கலாம்.
ஆனால் உண்மையில் அந்த தேர்தலில் ரணில் தோற்றால் இலங்கைக்கு கிடைக்க இருந்த கடைசி சந்தர்ப்பமும் போய்விடும் என்ற அபிப்பிராயம் மக்களிடையே அழுத்தமாக இருந்தது.
ரணிலை தோற்கடித்திருந்தால் பல உறுப்பினர்கள் மீண்டும் வீதிகளில் நடமாட முடியாத நிலை வந்திருக்கும்.
இதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்
இந்த அரிச்சுவடி பாடம் கூட தெரியாமல் சங்கிகள் கோட்டை விட்டனர்!
சிறுபான்மை கட்சிகள் இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
இது ஒன்றும் பெரிய இரகசியம் அல்ல.
ஒன்றிய உளவுத்துறை இவ்வளவு மோசமாக தப்பு கணக்கு போட்டிருப்பது என்பது உண்மையில் ஆச்சரியத்திற்கு உரியது.
ஆசை வெட்கமறியாது… அதானிகளின் ஆசைக்கு அளவேது?
இதன் வெளிப்பாடாகவோ என்னவோ அண்மையில் அமெரிக்காவில் ஒரு பேட்டியின் போது திரு ரணில் விக்கிரமசிங்கவிடம் அவரின் வெளியுறவு கொள்கை பற்றி கேட்கப்பட்டது…
நீங்கள் இந்தியா சார்பானவரா அல்லது சீனா சார்பானவரா என்ற கேள்விக்கு மிக மெதுவாகவும் நிதானமாகவும்…
நான் இந்தியா சார்பானவர் அல்ல! என்று கூறிவிட்டு அதே நிதானத்துடன் மெதுவாக நான் சீனா சார்பானவரும் அல்ல என்றார்!
உடனே சிரித்துக்கொண்ட நிருபர் தாங்கள் நடுநிலைமையானவரா என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
அதற்கும் அதே நிதானத்துடன் மெதுவாக நான் நடுநிலைமையாளரும் அல்ல… நான் இலங்கை சார்பானவர் என்று பதில் கூறினார்.
Q: are you pro India or pro China
A : I am not pro India… I am not pro China
Q : are you neutral?
A :L No I am pro Srilanka
மேலெழுந்த வாரியாக பார்த்தால் இதிலென்ன இரகசிய செய்தி இருக்கிறது என்று பலருக்கும் தோன்ற கூடும்.
உண்மையில் கேள்வி கேட்ட நிருபர் கூட இந்த பதிலை பற்றி மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் சிரித்து கொண்டே அடுத்த கேள்விக்கு நகர்ந்தார்.
இங்கேதான் ரணிலின் அசல் பிராண்ட் அரசியல் இருக்கிறது.
இலங்கையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல முரண்பாடுகள் பல பரஸ்பர நலன்கள் உள்ளன.
பலவிடயங்களில் இவரைத் திருப்தி படுத்தவா அவரை திருப்தி படுத்தவா என்ற கேள்விகள் இருக்கின்றன.
ராஜபக்சக்கள் இந்த குழப்பத்தில்தான் பல சிக்கல்களில் தவறான முடிவெடுத்திருந்தார்கள்.
இந்தியா சீனா போன்ற நாடுகள் விரும்பாவிடினும் நான் சுதந்திரமாகவே முடிவெடுப்பேன்.
அது இந்தியாவுக்கு பிடிக்காவிடினும் சரி…
சீனாவுக்கு பிடிக்காவிடினும் சரி.
இலங்கைக்கு எது சரியோ அப்படித்தான் நான் முடிவெடுப்பேன் என்று இதன் மூலம் ரணில் தெளிவு படுத்தி விட்டார்.
இந்த துணிவு அல்லது நிர்பந்தம் ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு யார் காரணம்?
இந்த நிலைக்கு ரணில் விக்கிரமசிங்கவை தள்ளியதில் நிச்சயமாக இந்திய ஒன்றிய அதிகாரிகளுக்கு பங்கிருக்கிறது!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி சங்கிகளின் அரசியல் விளையாட்டுக்கு இலங்கையில் கிடைத்த தோல்வியாகவே கணிக்கப்படுகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக