கர்நாடக மாநிலத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்னை நீடித்துவரும் நிலையில், அவரது இந்த நியமனத்திற்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று சென்னையில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அந்தத் தீர்மானத்தில், "நரேந்திர மோதி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் ஜல்சக்தி மற்றும் ரயில்வே துறை இணையமைச்சராக வீ. சோமன்னா பதவியேற்றிருப்பது காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்துவரும் கா்நாடகத்தைச் சேர்ந்த வீ. சோமன்னாவை ஜல்சக்தி பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்" என கூறப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் தீர்மானம்

செல்வப்பெருந்தகை


"கர்நாடக மாநிலத்திற்கு வேறு மாநிலங்களோடும் நதிநீர் பிரச்சனை இருக்கிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை நீர்வளத் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பதன் மூலம் தென்னிந்தியாவின் ஒற்றுமையையே சீர்குலைக்க நினைக்கிறார் நரேந்திர மோதி.

இதன் மூலம் தமிழ்நாட்டின் நீர்வள உரிமையைப் பறிக்க நினைக்கிறார். அவரை மாற்ற வேண்டும். மாநிலங்களின் நீர்வள உரிமையை பிரதமர் விருப்புவெறுப்பின்றி அணுக வேண்டும்" என்கிறார், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.

இதுதொடர்பாக தமிழ்நாட்டின் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் கருத்தைப் பெற மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

திமுக எழுப்பும் கேள்விகள்

கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன்

படக்குறிப்பு, கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன்

"இந்தியாவில் நீர்வளத்துறை அமைச்சர்களை நியமிக்கும்போது, நதிநீரைப் பகிர்வதில் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமித்ததில்லை. இது சட்டமல்ல; ஒரு அரசியல் நெறிமுறை.

காங்கிரஸ் ஆட்சியின்போது, இதுபோல ஒருவரை நியமிக்க நினைத்தபோது, அதைச் சுட்டிக்காட்டியவுடன் அவர் நியமிக்கப்படவில்லை. இந்த நெறிமுறைகள் எல்லாம் இப்போது மீறப்பட்டிருக்கின்றன" என்கிறார், தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன்.



பாஜக கூறுவது என்ன?

நாராயணன் திருப்பதி

படக்குறிப்பு, நாராயணன் திருப்பதி

ஆனால், இதுபோன்ற விஷயங்களில் உள்நோக்கம் கற்பிப்பது மிகத் தவறு என்கிறார் பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.

"இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இடையில் நதி நீர் பிரச்னை நிலவிவருகிறது. இப்படி ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பிக்க முடியுமா? எல்லா செயல்பாடுகளுக்கும் இடையில் உள்நோக்கம் கற்பிப்பது தவறானது. நியமிக்கப்படுபவர்கள் சரியான முறையில் செயல்படவில்லை என்றால் அப்போது சுட்டிக்காட்டினால் ஒரு அர்த்தம் இருக்கும்.

கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் காவிரி பிரச்னை குறித்து முடிவெடுக்க ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இதுபோல உள்நோக்கம் கற்பிப்பது தவறு" என்கிறார் நாராயணன் திருப்பதி.

கர்நாடகத்தின் நதிநீர் பகிர்வு பிரச்னைகள்

கர்நாடக மாநிலத்தைப் பொருத்தவரை, தமிழ்நாட்டுடன் மட்டுமல்லாமல் அதனை ஒட்டியுள்ள பல மாநிலங்களுடனும் நதி நீரைப் பகிர்வதில் தாவாக்கள் உள்ளன. ஆந்திர மாநிலத்துடன் கிருஷ்ணா நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் பிரச்னைகள் உள்ளன. அதேபோல, மஹாதயி நதியின் குறுக்கே அணைகளைக் கட்ட கர்நாடகா விரும்புவதால், கர்நாடகத்திற்கும் கோவாவுக்கும் இடையில் நதி நீர் பிரச்னை நீடித்து வருகிறது.

அதேபோல, கர்நாடகத்திற்கும் மகாராஷ்டிராவுக்கும் இடையில் நதி நீர் பிரச்னைகள் உள்ளன. "நான் எத்தனையோ நதி நீர் பிரச்னைகளைத் தீர்த்துவைத்தேன். ஆனால், என்னால் தீர்க்க முடியாத மூன்று நதி நீர் தாவாக்களில் கர்நாடகா - மகாராஷ்டிரா நதி நீர் தாவாவும் ஒன்று" என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொல்லும் அளவுக்கு சிக்கலான பிரச்னையாக அது நீடித்து வருகிறது.

வீ. சோமன்னாவின் பின்னணி

வீ. சோமன்னா

பட மூலாதாரம், V. Somanna/X

வீரண்ண சோமன்னா என்ற வீ. சோமன்னா தெற்கு கர்நாடக பகுதியைச் சேர்ந்தவர். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த மூத்தத் தலைவர்களில் ஒருவர்.

1998லிருந்து கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏவாக இருந்துவரும் சோமன்னா, பி.எஸ். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷட்டர் ஆகியோரின் அமைச்சரவையில் பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தவர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவிந்தராஜ் நகர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான சித்தராமய்யா போட்டியிட்ட வருணா ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடும்படி கட்சித் தலைமை அவருக்கு கட்டளை இட்டது. இரு தொகுதிகளிலுமே அவர் தோல்வியடைந்தார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது தனது தோல்வி குறித்து கண்ணீர் விட்டு அழுதார் சோமன்னா. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் டும்கூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கட்சித் தலைமை அவருக்கு வழங்கியது.

அந்தத் தொகுதியோடு பெரிதாக பரிச்சயம் இல்லாவிட்டாலும்கூட, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வீ.சோமன்னா வெற்றிபெற்றார்.