சனி, 15 ஜூன், 2024

பாஜகவின் “கரசேவையை”த்தான் sick சீமான் செய்துகொண்டிருக்கிறார். அதுவும் சொந்த ஆதாயத்துக்காக!

May be an image of 2 people and text

LR Jagadheesan  :  பேசாப்பொருளை பேசத்துணிந்தேன்
இந்தியாவின் மதசிறுபான்மையினர் தொடர்பாக ஆர்எஸ்எஸ்/பாஜகவின் அடிப்படை கொள்கைக்கும் தமிழ்நாட்டின் மொழிவழி சிறுபான்மையினர் மற்றும் மதவழிசிறுபான்மையினர் தொடர்பிலான சீமானும் அவரது கட்சியும் முன்னெடுக்கும் அடிப்படை கொள்கைக்கும் என்ன பெரிய வேறுபாடு?
முந்தையது பாசிசமென்றால் பிந்தையதன் பெயர் என்ன?
முஸ்லீம்களுக்கென்று பாகிஸ்தான் பிரித்துக்கொடுத்தபின் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த தனி உரிமையும் கிடையாது/கூடாது, அப்படி கேட்பவர்கள் பாகிஸ்தானுக்குப்போங்கள் என்கிற கோஷத்துக்கும்;
மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபின் தமிழ்நாட்டின் பிறமொழியாளர்கள் அரசியல் உள்ளிட்ட அதிகாரங்கள் எதிலும் பங்கேற்கக்கூடாது அப்படி கோருபவர்கள் ஆந்திராவுக்கு செல்லுங்கள் என்றும் இஸ்லாம் கிறிஸ்தவம் உள்ளிட்ட மாற்றுமதத்தவர்கள் முழுமையான தமிழர்கள் அல்ல என்றும் கூறும் சீமான் கட்சியின் அறிவிக்கப்பட்ட கொள்கைக்கும்
என்ன பெரிய வேறுபாடு?


ஒன்று மதவழி சிறுபான்மையினர்
மற்றது மொழிவழி சிறுபான்மையினர்
ஒன்று இந்திய சுதந்திரத்தோடு நடந்த மதவழி பிரிவினை
மற்றது;
மற்றது சுதந்திர இந்தியாவில் நடந்த மொழிவழி மாநில பிரிவினை.
ஒன்று பாகிஸ்தானுக்கு போக மறுத்த மதவழி சிறுபான்மையினர் தொடர்புடையது;

May be an image of 1 person and text
மற்றது மொழிவழி மாநில பிரிவினைக்கு பின்னும் தமிழ்நாட்டில் இருக்கும் மொழிவழி சிறுபான்மையினர் தொடர்புடையது.
இரண்டு சிறுபான்மையினருமே அவரவர் வாழும் நிலப்பரப்பில் பலநூற்றாண்டுகளாக வாழ்ந்தவர்கள்.
இந்திய பிரிவினைக்கும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கும் எப்படி தொடர்பில்லையோ அதே போல்தான் தமிழ்நாட்டில் வாழும் மொழிவழிசிறுபான்மையினருக்கும் மொழிவழி மாநில பிரிவினையோடு எந்த தொடர்பும் இல்லை.
ஒரு தொகுதி மக்களை மதத்தின் பெயரால் அந்நியப்படுத்துவது தவறென்றால் மற்ற தொகுதி மக்களை மொழியின் பெயரால் அந்நியப்படுத்துவது மட்டும் எப்படி சரி?
அதெப்படி இத்தனை பேர் சீமானுக்கு வாழ்த்துப்பா பாடுகிறார்கள்? எந்த தயக்கமும் இல்லாமல்? எந்த கூச்சமும் இல்லாமல்? இடது, வலது, நட்டநடுசெண்டர், அம்பேட்காரிய, மார்க்ஸீயர்களோடு இஸ்லாமியர்களின் அதிதீவிர போராளிகளாக காட்டிக்கொள்ளும் அமைப்பும் எப்படி சீமானை பாராட்டவும் கொண்டாடவும் முடிகிறது?
இறுதியாக தமிழ்நாட்டின் அரசாங்க புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் மதவழிசிறுபான்மையினரின் எண்ணிக்கையும் மொழிவழி சிறுபான்மையினரின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒரே அளவு என்பதை பலரும் கவனிக்கத்தவறுகிறார்கள்.
இதில் பாபர் மசூதி இடிப்புக்குப்பின் தமிழ்நாட்டில் மதவழி சிறுபான்மையினர் எப்படி பாஜக எதிர்ப்பணியில் ஒன்று திரளும் போக்கு இப்போது முழுமையடைந்திருக்கிறதோ ஏறக்குறைய அதே காலகட்டத்தில் மொழிவழி சிறுபான்மையினர் பாஜகவை நோக்கி நகர்வதும் அதிகரித்திருக்கிறது. அதை இன்னும் வேகப்படுத்தும், முழுமையாக்கும் “கரசேவையை”த்தான் “செந்தமிழன்”(sick) சீமான் வெகுசிறப்பாக செய்துகொண்டிருக்கிறார். அதுவும் சொந்த ஆதாயத்துக்காக.
ஆனால் அவர் பரப்பும் விஷம் வேரூன்றத்துவங்கியிருக்கிறது என்பதற்கான ஆபத்தின் அறிகுறிதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் அவருக்கு கிடைத்திருக்கும் மாநில கட்சிக்கான அங்கீகாரம்.
பொதுவாழ்வில் ஒரு இளம் தலைமுறையையே தன் பேச்சாற்றலால் சிதைத்து சீரழித்த தலைவராக சீமான் வளர்ந்து நிற்கிறார். அதுவும் ஒரு zombieகளின் கூட்டமாக அவர்களை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு இப்போது மாநிலகட்சியாக அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. பூந்தோட்டத்தில் புகுந்த குரங்குக்கு கள்ளை ஊற்றிக்கொடுத்த கதையாக.
தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்குவங்கி 11% தாண்டியது (11.24%) கவலைக்குரிய செய்தியென்றால் அதற்கு சற்றும் குறைந்ததல்ல சீமானுக்கு கிடைத்திருக்கும் 8.18% வாக்கும் மாநிலகட்சி அங்கீகாரமும். மதவாதமும் இனவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இரண்டின் அடிப்படையுமே பெரும்பான்மையின் மேலாதிக்கம். சிறுபான்மைக்கு அதில் சமத்துவமில்லை. இரண்டாம் இடம் தான். இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மதசிறுபான்மையினருக்கு என்ன இடத்தை இந்துத்துவம் அளிக்க விரும்புகிறதோ அதே இடத்தைதான் சீமானின்  தமிழ்தேசியம் தமிழ்நாட்டில் மொழிவழிசிறுபான்மைக்கு அளிப்போம் என்கிறது. இதில் ஒன்று மோசமென்றால் மற்றது படுமோசம். ஒன்றை எதிர்த்தபடி மற்றதை உச்சிமுகிர ஒன்றுமில்லை.
மொத்தமாக தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருபங்கு வாக்காளர்கள் அதாவது 20% வாக்காளர்கள் மதவாதத்தையும் இனவாதத்தையும் ஆதரிக்கிறார்கள். மும்முனை போட்டியில் சுமார் 35 முதல் 40% வாக்குகளை கொண்டே தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியும் என்கிற சாத்தியத்தை கணக்கில் கொண்டு இந்த 20% வாக்குத்திரளை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டின் உண்மையான நிலவரம் என்ன என்பது புரியவரும்.
பிகு: கவிஞர் வைரமுத்து எதற்கும் தன் வாரிசுகளுக்கு ஹைதராபாதிலோ அமராவதியிலோ இப்போதே வீடுகளை வாங்கி வைப்பது நல்லது. அடுத்து அமையப்போகும் “செந்தமிழன்”(sick) சீமானின் “தமிழ்தேசிய” ஆட்சியில் அவர்களுக்கு அவை தேவைப்படலாம். அமீருக்கும் இந்த ஆலோசனை பொருந்தும். பாகிஸ்தானா வங்கதேசமா அல்லது வேறுநாடா என்பது அவரது தேர்வு.

கருத்துகள் இல்லை: