வெள்ளி, 14 ஜூன், 2024

பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட வாய்ப்புள்ளது !

மின்னம்பலம் -indhu  :  கேரள மாநிலம் வயநாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அங்கு பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகளின் படி, வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 6,47,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல், ரேபரேலி தொகுதியில் 6,68,649 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு உறுப்பினர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், ஒரு தொகுதியின் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். இதன்படி, 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ராகுல் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் 12ஆம் தேதி வயநாட்டில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாட்டின் எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டே முடிவு செய்வேன். எந்த தொகுதி எம்.பி.யாக தொடர்வது என்பதை முடிவு செய்வது எனக்கு தர்மசங்கடமாக உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அப்போது தோல்வியடைந்தார்.

தற்போது, ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாகவே ராகுல் காந்தி தொடர்வார் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வயநாடு எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்யும் பட்சத்தில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவார் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்து

கருத்துகள் இல்லை: