புதன், 12 ஜூன், 2024

9 மாடுகளைக் கொன்ற சாயப்பட்டறை? குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்த விவசாயி!

minnambalam.com -  Kavi  :  கரூரில் அடுத்தடுத்து 9 மாடுகளை இழந்த விவசாய தம்பதியினர், தங்களது மாடுகள் இறப்புக்கு அருகில் உள்ள சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் நச்சுக்கழிவுதான் காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர்.
கரூர் திருமாநிலையூரில் வசித்து வருபவர் வேலுசாமி. இவரது மனைவி ஜாஸ்மின். விவசாய குடும்பத்தை சேர்ந்த இந்த தம்பதியினர் மாடுகள் வளர்த்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

தங்களது பிள்ளைகளை படிக்க வைத்து வருகின்றனர். அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் இவர்களது விவசாய நிலம் உள்ளது.
இதில் கால்நடைகளுக்கு தீவனமாக சோளம் பயிரிட்டு வருகின்றனர்

இந்நிலையில் இவர்கள் வளர்க்கும் கறவை மாடுகள் கடந்த மே 20ஆம் தேதி முதல் ஒவ்வொன்றாக இறந்துள்ளன. மே 20 முதல் தற்போது வரை மொத்தம் 9 மாடுகள் இறந்துள்ளன.

அடுத்தடுத்து மாடுகள் இறந்ததால் அதிர்ச்சியடைந்த வேலுசாமி, அருகில் உள்ள பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதுபோன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வருவாய்த் துறை, பொதுப்பணி துறை, அதிகாரிகளிடமும் புகார் கொடுத்திருக்கிறார் வேலுசாமி.

ஆனால் இந்த புகார் மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டும் வேலுசாமி, தனது குடும்பத்துடன் கடந்த மாதம் இறுதி முதல் ஜூன் 8ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் அமர்ந்தார்.

தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் விவசாய நிலத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து 8 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், நேற்று 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதால், அதற்கு முந்தைய தினம் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் ஆற்று நீர் மட்டுமின்றி கிணற்று நீரும் மாசடைகிறது என்றும் அந்த நீரை அருந்தும் மாடுகளின் உடல் உறுப்புகள்  பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார் வேலுசாமி.

உயிரிழந்த மாடுகளை மருத்துவர்கள் பரிசோதித்து மஞ்சள்காமாலை, நிமோனியா, மூச்சுத் திணறல், சுவாச கோளாறு ஆகிய காரணங்களால் உயிரிழக்கின்றன என கூறுவதாகவும், ஆனால் இறந்த மாடுகளின் உடற்கூறாய்வு அறிக்கைகள் இதுவரை தரப்படவில்லை என்றும் கூறுகிறார் வேலுசாமி.

இதுகுறித்து வேலுசாமியும், அவரது மனைவி ஜாஸ்மினும் நம்மிடம் பேசுகையில், “இந்த பகுதியில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக 12 ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த ஒரு சில தினங்களாக பெய்த மழையால் நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.

எங்கள் விவசாய நிலத்துக்கு 200 மீ தொலைவில் சாயப்பட்டறை இயங்கி வருகிறது. இங்கு வெளியேற்றப்படும் கழிவு நீர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ராஜவாய்க்காலில் விடுகின்றனர்.

பாசனத்துக்காக வரும் இந்த வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதால் இந்த பகுதி மண், நீர் எல்லாம் மாசுபடுகிறது. அந்த சாயப்பட்டறையை நடத்தி வரும் நாச்சிமுத்து மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாவட்ட ஆட்சியர், தாசில்தார், பொதுப்பணித் துறை அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் என பலரிடமும் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை.

ஏறத்தாழ 30 ஆண்டுகளாக இயங்கும் இந்த சாயப்பட்டறையால் நீர் மாசடைந்து வருகிறது.

எங்கள் பகுதியில் இருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் அமராவதி ஆறு இருக்கிறது. இந்நிலையில் அருகம்பாளை நீரேற்று பாசன சங்கம் என்ற ஒரு சங்கத்தை உருவாக்கி அதன்மூலம் அமராவதி ஆற்றில் இருந்து இந்த சாயப்பட்டறைக்கு நீரை எடுத்துச்செல்கிறனர்.

வட்டக்கிணறு ஒன்று அமைத்து, நீரை சேமித்து சாயப்பட்டறைக்கு அனுப்புகின்றனர். விவசாய பணி என்ற பெயரில் இதெல்லாம் சட்டவிரோதமாக நடக்கிறது.

இந்த வாய்க்கால்களில் வெளியேற்றப்படும் சாயக்கழிவுகளோடு, மழை பெய்யும் போது அந்த தண்ணீர் விவசாய நிலங்களிலும் புகுவதால் எங்கள் நிலமும் மாசடைகிறது.

மழைக்காலங்களில் இந்த சாயப்பட்டறை சுற்றியுள்ள 50 ஏக்கர் விவசாய நிலங்களில் ஒரு அடி அளவுக்கு சாயக் கழிவுகளுடன் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த சாயப்பட்டறையை, அமராவதி ஆற்றில் இருந்து அரைகிலோ மீட்டர் தூரத்திலும், இருபோக நஞ்சை பூமிக்கு அருகிலும், ராஜ வாய்க்காலுக்கு அருகிலும் அமைக்க யார் அனுமதி கொடுத்தது என தெரியவில்லை.

நீர், மண் மாசுபடுவது தொடர்பாகவும், அந்த சாயப்பட்டறை மீது நடவடிக்கை எடுக்க கேட்டும் மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்க்கும் நாளான்று தொடர்ந்து புகார் கொடுத்து வருகிறோம். தொடர்ந்து புகார்கள் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

இந்த ஆண்டு மட்டுமல்ல 2018, 2019,2020 ஆகிய ஆண்டுகளில் 4 மாடுகள் இறந்தன.

ஆனால் இப்போது தொடர்ந்து அடுத்தடுத்து 9 மாடுகள் உயிரிழந்துவிட்டன. இன்று கூட இரண்டு மாடுகளுக்கு உடற்கூறாய்வு நடந்தது.

இறந்த மாடுகளை உடற்கூறாய்வு செய்வதற்கு வரும் மருத்துவர்கள் மாதிரிகளை எடுத்துச் செல்கின்றனரே தவிர அதன் அறிக்கையும் கொடுப்பதில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் வந்து நீரை ஆய்வு செய்து நச்சுத்தன்மை இருக்கிறது என்கிறார்கள்.

காவல்துறையிடம் கேட்டால், வருவாய்த் துறை, மாசுக்கப்பாட்டு வாரியம் எங்களுக்கு கடிதம் கொடுத்தால் நடவடிக்கை என்கிறோம் என்கிறது.

ஆனால் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மே 20, 21 பசுபதிபாளையம் காவல்துறையிடம் கொடுத்த புகாரில் இரண்டுக்கு மட்டும் சி.எஸ்.ஆர். நகர் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

நாங்கள் மாடுகளை இழந்து வாழ்வாதாரத்தையே இழந்து வருகிறோம். எங்களுக்கு தீர்வு வேண்டும்” என்கின்றனர் வேலுசாமி -ஜாஸ்மின் தம்பதியினர்.

சாயப்பட்டறை தொழில் தேவைதான். ஆனால் மாடுகளின் உயிர்களைக் குடித்து, மனிதர்களின் பிழைப்பைக் கெடுத்து தேவையா?

கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?   பிரியா

கருத்துகள் இல்லை: