tamil.oneindia.com -Vignesh Selvaraj : சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது, ஏ.ஆர்.ரஹ்மான் போல அவர் ஒப்பந்தம் செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம் வைத்துள்ளது.
பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது. சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் வாதங்களை அடுக்கியுள்ளது.
பாடல்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்துவிட்டதால் அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும் எக்கோ நிறுவனம் வாதம் வைத்தது.
அதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர், இசையமைப்பு என்பது க்ரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது என கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படி என்றால் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து வழக்கு விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என வாதம் வைத்தார்.
பாடல் யாருக்கு சொந்தம்? இளையராஜா செய்வது சரியா? விடாமல் வாதாடிய விஜய் ஆண்டனிபாடல் யாருக்கு சொந்தம்? இளையராஜா செய்வது சரியா? விடாமல் வாதாடிய விஜய் ஆண்டனி
பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது. சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளர் ஆகிறார் என எக்கோ நிறுவனம் வாதம் வைத்துள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால், இளையராஜா படத் தயாரிப்பாளர்களுடன் பதிப்புரிமையை வழங்கிவிட்டார். உரிமையை தன் வசம் வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஒப்பந்தம் போடாத நிலையில் பாடலுக்கு உரிமை கோர முடியாது என வாதிட்டுள்ளது எக்கோ நிறுவனம்.
மேலும், இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும்தான் தார்மீக உரிமை வரும். பாடலுக்கு இசை அமைக்க சம்பளம் பெற்ற பிறகு, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என எக்கோ நிறுவனம் வாதம் வைத்துள்ளது. இதையடுத்து, இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக