திங்கள், 8 ஏப்ரல், 2024

கேரளா மாணவர் தற்கொலை ..29 மணிநேரம் சி பி எம் மாணவர்கள் ராக்கிங்

 tamil.oneindia.com - Vigneshkumar :  திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதியில் 20 வயது கால்நடை மருத்துவ மாணவர் உயிரிழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வழக்கு விசாரணை இப்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
ராகிங் என்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். பல கல்லூரிகளில் ராங்கிங்கை தடுக்கவும் மாணவர்கள் நலனைக் காக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், அதையும் தாண்டி ராகிங் கொடுமையால் சில மோசமான சம்பவங்கள் நடந்துவிடும்.
அப்படியொரு ஷாக் சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிப். மதம் நடந்தது.
கொடூரம்: அங்கே வயநாடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தவர் சித்தார்த்தன்.



இவர் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி விடுதி பாத்ரூமில் சடலமாகக் கண்டறியப்பட்டார். மற்ற மாணவர்கள் ராகிங் செய்தே மரணத்திற்குக் காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக சிபிஎம் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர்களின் கூட்டமைப்பு சேர்ந்த சிலர் ராகிங் செய்ததாகச் சித்தார்த்தனின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இதற்கிடையே இந்த மரணம் தொடர்பாக சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சீனியர்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் இணைந்து சுமார் 29 மணிநேரம் சித்தார்த்தனை தொடர்ந்து தாக்கியதாகக் கேரள போலீசார் சிபிஐக்கு அளித்த கோப்புகளில் கூறப்பட்டுள்ளதாகப் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

டார்ச்சர்: சித்தார்த்தனை சீனியர்களும் உடன் படிக்கும் மாணவர்களும் உடல் ரீதியாகவும் மனரீதியாகச் சித்திரவதை செய்துள்ளதாகவும் அதுவே அவரை தற்கொலைக்குத் தூண்டியுள்ளதாகவும் கேரள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கேரள போலீசார் தங்கள் விசாரணை ஆவணத்தில், “பிப்ரவரி 16ஆம் தேதி காலை 9 மணி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி மதியம் 2 மணி வரை சித்தார்த்தனை அவர்கள் கைகளாலும் பெல்ட்டாலும் தொடர்ந்து தாக்கி கொடூரமாக ராகிங் செய்துள்ளனர்.

தொடர்ந்து இங்கே தங்கிப் படிக்கவும் முடியாது வீட்டிற்குச் செல்லவும் முடியாது என்ற அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளான அவர், தற்கொலையைத் தவிர வேறு வழியில்லை என நினைத்து 12.30 மணிக்குள் ஆண்கள் விடுதியின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிப்ரவரி 18 அன்று 1.45 மணிக்குச் சித்தார்த்தன் தற்கொலை செய்துள்ளார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு: இந்தச் சம்பவம் தொடர்பாக இப்போது 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இப்போது சிபிஐ வசம் மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சிபிஎம் மாணவர் அமைப்பினர் தொடர்பு இருப்பதால் அது மிக பெரிய அரசியல் சர்ச்சையாக அங்கே வெடித்தது.

புகார்: இதன் காரணமாகவே இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த மார்ச் 9ஆம் தேதி உறுதியளித்தார்.

இருப்பினும், மாநில அரசு சில முக்கிய கோப்புகளை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக குற்றம் சாட்டின. சிபிஐ விசாரணையை வேண்டுமென்றே காலதாமதம் செய்யவும் ஆதாரங்களை அழிக்கவும் மாநில அரசு முயல்வதாகவும் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினரும் குற்றம்சாட்டினர்.

கருத்துகள் இல்லை: