புதன், 10 ஏப்ரல், 2024

சேலம்: செல்வகணபதியின் பாசவலையில் அதிமுகவினர்... எடப்பாடி ஷாக்! மாம்பழத்தின் நிலை என்ன?

மின்னம்பலம் -Kavi : தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 15ஆவது மக்களவைத் தொகுதி சேலம்.
சேலம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மாம்பழம். மாம்பழ நகரம் என அழைக்கப்படும் சேலம், இரும்பு ஆலை, மின் உற்பத்தி ஆகியவற்றுக்கும் புகழ்பெற்றது.
சேலத்தில் அதிகளவில் கொலுசு   உறுபத்தியும் செய்யப்படுகிறது.
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு,  டெல்டாவையே ஊட்டி வளர்க்கும் மேட்டூர் அணை, கோட்டை மாரியம்மன் கோயில், சங்ககிரி கோட்டை, கிள்ளியூர் அருவி என ஏராளமான  சுற்றுலா இடங்கள் உள்ளன. கடந்த மார்ச் 29ஆம் தேதி சேலத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கோட்டை மாரியம்மனை வணங்கி உரையை தொடங்குவதாக கூறினார்.

நெல், கரும்பு, வாழை, மஞ்சள், சிறு தானியங்கள் மரவள்ளிக் கிழங்கும் ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

சேலத்தை பொறுத்தவரை ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

8,23,336 ஆண் வாக்காளர்கள், 8,25,354 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 16,48,911 வாக்காளர்கள் உள்ளன.

காங்கிரஸிடம் இருந்து திராவிடக் கட்சிகளிடம் வந்த சேலம்

1984 முதல் 89, 91 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸும், 1996 இல் தமாகா, 98 இல் சுயேச்சையாகவே வென்ற  வாழப்பாடி ராமமூர்த்தி என்று காங்கிரஸ் பாரம்பரியமும், அபிமானமும் நிறைந்த பகுதியாகவே இருந்தது சேலம். இதை 1999ல் உடைத்து  வாழப்பாடி ராமமூர்த்தியையே தோற்கடித்தார் அதிமுக வேட்பாளராக அப்போது களமிறங்கிய செல்வகணபதி.  2004 இல் காங்கிரஸ்  சார்பில் கே.வி. தங்கபாலு வென்றார். அதன் பின் காங்கிரஸிடம் இருந்து அதிமுகவுக்கும் பின் 2019 இல் திமுகவின் எஸ்.ஆர். பார்த்திபனுக்கும் சேலம் கிடைத்தது.

2019 தேர்தலில் எஸ்.ஆர்.பார்த்திபன் 6,06,302 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் 4,59,376 வாக்குகள் பெற்றி தோல்வி அடைந்தார்.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து போட்டியிட்ட பிரபு மணிகண்டன் 58,662 வாக்குகளையும் அமமுக வேட்பாளர் செல்வம் 52,332 , நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா அம்மையப்பன் 33,890 வாக்குகளையும் பெற்று தோல்வியுற்றனர்.

அதிமுகவின் கோட்டை

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை சேலத்தில் அதிமுக தான் அதிக இடங்களை பிடித்துள்ளது அதிமுகவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் சேலம் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளரை காட்டிலும் 23ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வீரபாண்டியில் அதிமுகவைச் சேர்ந்த ராஜமுத்து 11ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓமலூரில் அதிமுகவைச் சேர்ந்த மணி 30 ஆயிரம் வாக்குவித்தியாசத்தில் பெற்றி பெற்றார். சேலம் மேற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பா.ம.க.வை சேர்ந்த அருள் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இந்த 6 சட்டமன்ற தொகுதிகளில் திமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

அந்தவகையில் சேலம் மக்களவைத் தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருக்கிறது.

சேலத்தின்  சமுதாய மேப்!

சேலத்தில் உள்ள வாக்காளர்களில் வன்னியர் சமூகத்தினர் 38 – 40 சதவிகிதம் உள்ளனர். ஆதிதிராவிடர் 18- 20 சதவிகிதம் உள்ளனர்.  கொங்கு வேளாள கவுண்டர், செட்டியார், முதலியார், முஸ்லீம்கிறிஸ்தவர், நாடார், சோழிய வேளாளர், நாயுடு, செம்படவர், உடையார் உள்ளிட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் ஒற்றை இலக்க சதவிகிதத்தில் உள்ளனர்

இந்நிலையில் 2019ல் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக, பாமக, அதிமுக என அனைத்து கட்சிகளும் வன்னியர் சமூதாயத்தில் இருந்தே களமிறக்கியுள்ளது.

செல்வகணபதிக்கு எதிராக சின்னப் பையன் ஏன்?

அ.தி.மு.க. சார்பில் ஓமலூரை சேர்ந்த  31 வயது இளைஞர் விக்னேஷ், புதுமுகமாக களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். எடப்பாடிக்கு மிக நெருக்கமான ஒப்பந்ததாரரான பரமசிவத்தின் மகன். கடந்த ஜனவரி மாதம் ஓமலூரில் சுமார் 45 லட்சம் ரூபாய் செலவில் எடப்பாடி பழனிசாமியை வைத்து மாஸ் ஆன பொங்கல் கொண்டாட்டங்களை நடத்தியவர் பரமசிவன்.  அதற்கு பரிசாகத்தான் இப்போது அவரது மகன் வேட்பாளர் ஆக்கப்பட்டிருக்கிறார்.

தனது சொந்தத் தொகுதியாக சேலத்தில் இளங்கோவன் உள்ளிட்ட தனக்கு நெருக்கமானவர்கள் பலர் இருக்கும் நிலையில் எடப்பாடி எதற்காக இந்த சின்னப் பையனை தேர்ந்தெடுத்தார்?

‘எதிரே திமுகவில் நிற்பது செல்வகணபதி.  30 ஆண்டுகளுக்கும் மேலாக சேலத்தில் வலிமையாக  அரசியல் செய்பவர். அவரை எதிர்த்து இப்படி ஒரு வேட்பாளரை அதிமுகவிலேயே யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த சின்ன பையனை எடப்பாடி வேட்பாளராக்கியதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. ஒரு வேளை அதிமுக ஜெயித்துவிட்டால், ‘செல்வகணபதியை ஒரு சின்ன பையனை வைத்து தோற்கடித்துவிட்டோம்’ என்று சொல்லிக் கொள்ளலாம். தோற்றுப் போனாலும் செல்வகணபதி என்னும் சீனியரிடம்தானே தோற்றார் என்று அப்படியே மாற்றிவிடலாம். இதுதான் எடப்பாடியின் கணக்கு.

அதிமுக வேட்பாளர்  விக்னேஷுக்கு கூட செல்பவர்கள்தான் மைக் பிடித்து பேசுகிறார்களே தவிர, அவர் பெரும்பாலும் பேசுவதே இல்லை.  மாவட்டச் செயலாளரும் எடப்பாடியின் வலது கரமுமான இளங்கோவன் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கிறார். பாமக தனியாக நின்று பிரிக்கும் ஓட்டுகள் கவலையளிப்பதால், ஆங்காங்கே பாமக நிர்வாகிகளோடு அதிமுகவினர் தனிப்பட்ட முறையில் பேசி வருகின்றனர்.  இரட்டை இலையை நம்பி களத்தில் இருக்கிறார் விக்னேஷ்.

செல்வகணபதியின் போன்! 

திமுக வேட்பாளராக  சேலம் மேற்கு மாசெ.வான  செல்வகணபதி போட்டியிடுகிறார்.  இவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.  போட்டியிடும் வேட்பாளர்களிலேயே அதிக அறிமுகமும் அனுபவமும் கொண்டவர்.  திமுக, அதிமுக, பாமக என சகல கட்சிகளிலும் இவருக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இரவானால் செல்வகணபதிக்கு பக்கத்தில் இருப்பவர்களின் போனில் இருந்து, அவரது பழைய அதிமுக நண்பர்களுக்கு அழைப்பு போகிறது. ‘என்னய்யா…’ என்று உரிமையோடு தனது இருபதாண்டு கால அதிமுக நண்பர்களிடமெல்லாம் பேசுகிறார் செல்வகணபதி.  இவரது போன் கால்கள் சென்றதையடுத்து பல இடங்களில் அதிமுகவினர் ஆஃப் ஆகிக்  கொண்டிருப்பதாக எடப்பாடிக்கு தகவல் சென்றதையடுத்து,  சமீபத்தில் நடந்த சேலம் நிர்வாகிகள் கூட்டத்தில், ‘செல்வகணபதிக்கிட்டேர்ந்து போன் வந்தா யாரும் பேசாதீங்க’ என்று எச்ச்சரிக்கையே விட்டிருக்கிறார் எடப்பாடி.

இப்படி தனது ஸ்மார்ட் ஒர்க்கால் ஒவ்வொரு நாளும் ஆதரவு வட்டத்தை விரிவாக்கிக் கொண்டே போகிறார் செல்வகணபதி. அமைச்சர் நேருவின் பொறுப்பு மாவட்டம் என்பதால்  அவரும் தினந்தோறும் கண்காணித்து வருகிறார். தேர்தல்  வேலைகள் நேருவின் ஒருங்கிணைப்பில் வேகவேகமாக நடந்து வருகின்றன.

ஏப்ரல் 9ஆம் தேதி அமைச்சர் உதயநிதியின் பிரச்சாரத்திற்கு பிறகு, சேலத்தில் திமுகவினரின் உற்சாகம் கூடியிருக்கிறது.

போராடும் மாம்பழம்!

பாமகவை பொறுத்தவரை அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான அண்ணாதுரை போட்டியிடுகிறார். 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிட்டார் அந்த தேர்தலில் தேர்தலில் 57,650 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதன் பின்னர் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்நிலையில் அண்ணாதுரை சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பக்கத்து தொகுதியான தர்மபுரியில்  பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதனால் சேலம் தொகுதி பாமக நிர்வாகிகள் பலரும் சவுமியாவின் வெற்றிக்காக தருமபுரிக்கு பிரச்சாரத்துக்கு சென்றுவிட்டனர்.  பாமக வேட்பாளர் தங்களை மதிக்கவில்லை, தங்களது கொடிகளை கூட அவர் வாகனத்தில் கட்டவில்லை என்று தமாகா, ஐஜேகே கட்சியினர் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

நாம் தமிழர் மருத்துவர்

May be an image of 3 people

சேலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மனோஜ் குமாரும் களத்தில் உள்ளார். வீரபாண்டி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர். 2017 முதல் நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். முதல்முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

இப்போதைய நிலவரப்படி  திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி. அதிலும் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேகம், அமைச்சர் நேருவின் அதிரடிகள் இவற்றின் முன்னால் அதிமுக அறிமுக வேட்பாளர் விக்னேஷ் சற்று பின்னால்தான் இருக்கிறார். அவருக்கு இரட்டை இலை மட்டுமே பலம். செல்வகணபதிக்கு உதயசூரியனோடு, இரட்டை இலையில் இருந்தும் கொஞ்சம்  பழைய பாசம் பலமாகக் கூடிக் கொண்டிருக்கிறது.வேந்தன், பிரியா

கருத்துகள் இல்லை: