செவ்வாய், 9 ஏப்ரல், 2024

:ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்தது இந்தியாதான்! -முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

 வீரகேசரி :ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்தது இந்தியா தான் என்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த மாதம் அவர் திடீரென ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யாரென தனக்குத் தெரியும் எனக் கூறினார்.
அதனை பகிரங்கப்படுத்தினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், உரிய பாதுகாப்பு வழங்கினால் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் அளிக்கத் தயார் என்றும் குறிப்பிட்டார்.
அதையடுத்து அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்தரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு, நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது.



இதையடுத்து, அவரை நீதிமன்றம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைத்தது. ஆனால், ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்தாயிற்று என்று அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், இந்தியாவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி என மைத்திரி வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்திய இராஜதந்திரி ஒருவரே அதனைத் தமக்கு கூறினார் என்றும், இந்தியாவுக்கு முதலீட்டுத் திட்டங்களை வழங்க இலங்கை அரசாங்கம் மறுத்து வந்ததால் தான்,

அதனை வழிக்குக் கொண்டு வருவதற்காக அந்த தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டதாக அவர் கூறினார் என்றும், மைத்திரி வாக்குமூலம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த விடயத்தில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன.

முதலாவது – இதனை வெளிப்படுத்திய மைத்திரிபால சிறிசேன ஒரு நம்பகமான அரசியல் தலைவராக, அரசியல்வாதியாக நடந்து கொண்டவர் அல்ல. அவர் அவ்வப்போது முரண்பாடாக நடந்திருக்கிறார். கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

அவர் ஆட்சியில் இருந்த போது, தன்னைக் கொல்வதற்கு இந்திய புலனாய்வுப் பிரிவான ‘றோ’ சதி செய்வதாக அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருந்தார்.

இதுபோன்று அவர் அவ்வப்போது பரபரப்புகளை ஏற்படுத்துவதில் கில்லாடி.
இரண்டாவது குண்டுவெடிப்புடன் இந்தியாவை தொடர்புபடுத்தும் போது, அதற்குச் சாதகமாகவும் பாதகமாகவும் பல்வேறு காரணிகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

மூன்றாவது- இந்தக் குற்றச்சாட்டு வந்தவுடன்,அடிப்படையிலேயே அதனை தூர வீசிவிடச் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன.
இந்த மூன்று விடயங்களும், இந்த விவகாரத்தில் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றன. அல்லது சர்ச்சைகள், பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இடையூறாக இருக்கின்றன.

மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்ட பிரதான சூத்திரதாரி, இந்தியாவாக இருக்குமா? அதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
எதையும் நிச்சயமாக மறுக்க முடியாது. அதற்காக இந்திய அரசாங்கத்தின் மீது வெளிப்படையாக- நேரடியாக இலங்கையினால் குற்றம்சாட்டவும் முடியாது.

ஏனென்றால், உலகின் பல நாடுகள் தங்களின் அரசியல், பாதுகாப்பு, தேசிய நலன்களுக்காக பல்வேறு இரகசிய செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றன.

இந்தியப் புலனாய்வு அமைப்புகளும் அவற்றுக்கு விதிவிலக்கானவை அல்ல.

இந்தியப் புலனாய்வு அமைப்புகள் தங்களின் நாட்டில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதாகவும், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை தங்களின் நாட்டுக்கு எதிராக தூண்டி விடுவதாகவும் அவற்றுக்கு உதவி வருவதாகவும் பாகிஸ்தான் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், இந்தியாவின் பகை நாடு என்பதால் இவ்வாறான குற்றச்சாட்டுகளை பலரும் கண்டுகொள்வதில்லை.
ஆனால், இலங்கை இந்தியாவின் பகை நாடு அல்ல. உடனடி அண்டை நாடாகவும் நட்பு நாடாகவும் இருக்கிறது.

இவ்வாறான இலங்கையுடன் இந்தியா இந்த ஆபத்தான விளையாட்டை ஆடியிருக்குமா என்பதே பலருக்கும் உள்ள சந்தேகம்.
இதனால் தான், மைத்திரியின் குற்றச்சாட்டு வந்தவுடன், அதனை பலரும் ஆரம்பத்திலேயே நிராகரித்தனர். அல்லது கேள்விக்குட்படுத்தினர்.

இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும், இருதரப்பு நலன்களை பாதிக்கும் என்றெல்லாம், எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையும் இது தான்.

ஆனால், இது சரியானதல்ல. விசாரணை என்று வந்து விட்டால், எல்லோரையும் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கும். விசாரிக்க வேண்டியிருக்கும். விசாரணை முடிவு அதற்கு இணங்குவதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஈஸ்டர் குண்டு தாக்குதலை இந்தியா நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்று, 100 வீதம் உறுதியாக கூறமுடியாது.
நட்பு நாடு என்ற காரணத்தை வைத்துக் கொண்டு, அந்த நம்பிக்கையில் அசட்டுத்தனமாக இருந்து விட முடியாது.

ஏனென்றால், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தேச நலன் இருக்கும். தேசிய நலன் இருக்கும். அந்த தேச நலனை பாதுகாப்பதற்கு, அல்லது அதனை அடைவதற்கு சில உபாயங்கள் கையாளப்படும்.

அது இன்னொரு நாட்டின் இறையாண்மையை மதித்து எடுக்கப்படும் முடிவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. அத்துடன், அது சொந்த நாட்டின் கொள்கைகளுக்கு அமைவான தீர்மானமாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரட்டைக் கோபுரத் தாக்குலுக்குப் பின்னர் அமெரிக்கா, பின்லேடனை இலக்கு வைத்து ஆப்கானிஸ்தானில் தொடங்கிய போர் அவ்வாறான ஒன்று தான்.
1971இல் கிழக்கு பாகிஸ்தானை பிரித்து- பங்களாதேசை தனிநாடாக உருவாக்கும் போரில், இந்தியா பங்கெடுத்ததும், அவ்வாறான ஒரு நோக்கத்தில் தான்.

அதிகம் ஏன், 1980களின் தொடக்கத்தில், தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு, தமது நாட்டு இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு இந்தியா பயிற்சிகளை அளித்ததும், ஆயுதங்களைக் கொடுத்ததும், இவ்வாறான நோக்கத்தில் தான்.

இலங்கையில் தனது நலன்களை உறுதி செய்வதற்கு, கொழும்புக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது. அதற்காக தமிழ்ப் போராளி இயக்கங்களை இந்தியா பயன்படுத்தியது.

இந்த உதாரணங்களில் இருந்து நோக்கினால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, இந்தியா மீது முன்வைக்கப்படும் சந்தேகத்தை நியாயமற்றதென்று நிராகரிக்க முடியாது.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது, ஒரு நாட்டின் அரசியல் தலைமை அதனை அறிந்திருக்க வேண்டும் என்ற நியதியும் கிடையாது. சில சுயாதீனமாகச் செயற்படும் புலனாய்வு அமைப்புகள், அரசியல் தலைமைகளுடன் கலந்தாலோசிக்காமல் கூட முடிவுகளை எடுத்து நிறைவேற்றுவதுண்டு.

பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பு, அந்த நாட்டு அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை. அதற்கு தனியானதொரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது.

உள்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் முடிவுகளைக் கூட அது எடுத்திருக்கிறது.

இவ்வாறான நிலையில், இந்தியா தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு, உடனடியாக நிராகரிக்கப்பட வேண்டியதோ, விசாரணையின்றி ஒதுக்கப்பட வேண்டியதோ அல்ல.

அதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முதல் நாளும், அன்று காலையும், இந்திய புலனாய்வு அமைப்பிடம் இருந்து இலங்கை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை இரண்டு பக்கங்களில் இருந்தும் உறுதி செய்யும் தகவல்கள் விசாரணையின் போது வெளிப்பட்டன.

இந்தியா தானே திட்டமிட்ட ஒரு தாக்குதல் தொடர்பாக, முன்னெச்சரிக்கை வழங்கியிருக்குமா?

பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகின்ற தந்திரமாகவும் அது இருக்கலாம். தன் மீது பழி வராமல் தற்காத்துக் கொள்ளும் உத்தியாகவும் இருக்கலாம்.

அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னரே, அது தடுக்கப்பட்டாலும், அது அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும். அதுவே போதும் என்று கருதியிருக்கவும் கூடும்.

அதேவேளை, இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனப்படும் சஹ்ரான் அடிக்கடி இந்தியா சென்று வந்தவர். அவருக்கு இந்தியாவில் அதிகளவில் தொடர்புகள் இருந்தன.

குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகின்ற போதும் அதுபற்றிய முறையான விசாரணைகளோ, தெளிவான முடிவுகளோ கிடையாது.

இப்படி இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இவற்றை வைத்துக் கொண்டு, இந்தியாவே இதற்குப் பின்னணியில் இருந்தது என்று எழுந்தமானமாக முடிவுக்கு வர முடியாது.

மைத்திரியின் குணவியல்புகளை வைத்துக் கொண்டு அவரது குற்றச்சாட்டுகளை நிராகரிக்கவும் முடியாது.

அதேவேளை, இந்தியாவின் மீதான நம்பிக்கையை வைத்துக் கொண்டு, இந்தக் குற்றச்சாட்டுகளை தூக்கி எறிந்து விடவும் முடியாது.

குற்றச்சாட்டு என்று வந்து விட்டால் அது யாராக இருந்தாலும், முழுமையான விசாரணைகளை நடத்தி முடித்து விடுவது தான் சரியானது. இல்லையேல் காலத்துக்கும் இது தொண்டையில் சிக்கிய முள் போலக் குத்திக் கொண்டிருக்கும்.

அதேவேளை, இந்த விசாரணைகள் இந்தியா தொடர்பான சந்தேகங்களை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தால், அது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு விரிசல்களை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
– சுபத்ரா-

கருத்துகள் இல்லை: