செவ்வாய், 9 ஏப்ரல், 2024

மகாராஷ்டிராவில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!

 நக்கீரன் : மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொடர்பான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

அதன்படி சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே அணி) 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான அலசல் கட்டுரைகள்

“சீட் தரவில்லை” - காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதே வேளையில்,  மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்த நிலையில், தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்பமொய்லி அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து வீரப்பமொய்லி இன்று (08-04-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட நான் சீட் கேட்டிருந்தேன். ஆனால், கட்சி மேலிடம் இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு என்னிடம் கூறியது.

கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்று நான் போட்டியில் இருந்து விலகிக் கொண்டேன். நான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எங்கள் கட்சி வேட்பாளர் ரஷா ராமையாவை ஆதரிக்கிறேன். அவரை ஆதரிக்குமாறு எனது ஆதரவாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை கர்நாடகா முதல்வராக வீரப்பமொய்லி பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவான அலசல் கட்டுரைகள்
“டீ செலவுக்கு கூட காசு இல்லை” - செல்வப்பெருந்தகை!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதே வேளையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை கடந்த 5ஆம் தேதி காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது.

இந்த நிலையில், இந்த தேர்தல் அறிக்கைக்கான தமிழாக்கத்தை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (08-04-24) வெளியிட்டார். அதன் பின்னர், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும், கொடுக்காத வாக்குறுதிகளையும் கொடையாக அர்ப்பணித்துள்ள ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு முன்பு பா.ஜ.க வேட்பாளருக்கான கொண்டு சென்ற ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுவே ஒரு எதிர்க்கட்சி அல்லது மாநில கட்சி வேட்பாளரிடம் இருந்து எடுத்து இருந்தால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ சும்மா இருந்திருப்பார்களா?. மோடியும், நிர்மலா சீதாராமனும் இதுவரை வாய் திறக்கவில்லை. பா.ஜ.கவிடம் கோடி கோடியாக பணம் உள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்களிடம் டீ செலவுக்கு கூட காசு இல்லாமல், வெறும் தண்ணீரை குடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: