வியாழன், 8 பிப்ரவரி, 2024

திமுக கூட்டணி 39/39, அதிமுக 0 - தேர்தல் கள ஆய்வு!

மின்னம்பலம் -Kavi : தமிழ்நாட்டில் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி தான் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே சர்வேயில் தெரியவந்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அனைத்துக்கட்சிகளும்  தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மோடி ஹாட்ரிக் சாதனை படைப்பாரா அல்லது மோடிக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள 27 கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் இந்தியா டுடே ஊடகம், ‘மூட் ஆப் தி நேஷன் 2024′ என்ற தலைப்பில் சர்வே எடுத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை மொத்தம் 35,801 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

மாநில வாரியாக எடுத்த சர்வேயில் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் 47 சதவிகித வாக்குகளும், பாஜக தலைமையிலான கூட்டணி 15 சதவிகித வாக்குகளும் பெறும் என்று கணித்துள்ளது.

இருந்தாலும் வாக்கு சதவிகிதம் என்பது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 2019ல் 12 சதவிகிதமாக இருந்த வாக்கு எண்ணிக்கை 2024 தேர்தலில் 15 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும்,

இந்தியா கூட்டணிக்கு 2019ல் 53 சதவிகிதமாக இருந்த வாக்கு எண்ணிக்கை இந்த தேர்தலில் 6 சதவிகிதம் குறைந்து 47 சதவிகிதமாக இருக்கும் என்றும் மற்ற கட்சிகளின் வாக்கு சதவிகிதம் 35ல் இருந்து 38ஆக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

2019 தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்த தேர்தலில் 39/39 இடங்களில் வெற்றி பெறும் என்ற இந்த சர்வே அக்கட்சிகளுக்கிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுபோன்று அதிமுக ஒரு இடத்தில் கூட வராது என்பது இந்த சர்வே மூலம் தெரியவந்துள்ளது. இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா

கருத்துகள் இல்லை: