வியாழன், 9 மார்ச், 2023

நடிகை கஸ்தூரி சர்ச்சை ட்வீட்.! : திமுக எம்பி அப்துல்லா ஒரு பெண்ணா.?-

 tamil.samayam.com  : போனமுறை கலைஞரை இழிவுபடுத்திய நடிகை கஸ்தூரி, இம்முறை திமுக எம்பி அப்துல்லாவிற்கு மகளிர் வாழ்த்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய ட்வீட்களுக்கு பெயர் பெற்றவர் நடிகை கஸ்தூரி.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி, நாடு முழுவதும் பேசு பொருளானது.
குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவதாகவும், எரிக்கப்படுவதாகவும் வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமிழக அதிகாரிகளுடன் இது குறித்து பேசினார்.
தொடர்ந்து பீகார் அதிகாரிகள் குழு தமிழகம் வந்தது.


ஆனால் இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்பியது பாஜகவினரே என கண்டுபிடிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக நபர் பிரசாந்த் உம்ராவ் மீது பிணையில் வரமுடியாத வகையில் தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோல் பொய் செய்திகளை பரப்பியதாக கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு நபர்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தசூழலில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து, பாஜக ஆதரவாளரான நடிகை கஸ்தூரி ட்வீட் செய்தது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ‘‘வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை' என அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகை கஸ்தூரின் கருத்துக்கு திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள் கடும் எதிர்வினை தெரிவித்தனர். இத்தகைய சூழலில் உலகம் முழுவதும் இன்று மகளிர் தின்ம் கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு சம உரிமை, குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை கோரி அமெரிக்க சோசலிச பெண்கள் இயக்கம் நடத்திய பேரணியின் விளைவாக, பெண்களின் அர்ப்பணிப்பு, தியாகத்தை போற்றும் வகையில் சம உரிமையை உறுதி செய்ய ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை கஸ்தூரியின் டிவிட்டர் பதிவு தற்போது பேசு பொருளாகியுள்ளது. புதுக்கோட்டை திமுக நாடாளுமன்ற எம்பி அப்துல்லாவிற்கு நடிகை கஸ்தூரி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது.

அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள எம்பி அப்துல்லா, ‘‘நான் ஒரு பெண்ணாம்! அதனால் எனக்கு பெண்கள் தின வாழ்த்து சொல்கிறாராம்!! பெண் என்றால் கேவலம் என்று நினைப்பவன் நான் அல்ல.. அதனால் உங்கள் வாழ்த்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கும் உங்கள் அம்மா பாட்டி அனைவருக்கும் எனது இனிய பெண்கள் தின வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார். நடிகை கஸ்தூரியின் ஆவணப்போக்கை கண்டித்து வரும் நெட்டிசன்கள், எம்பி அப்துல்லாவின் பண்பை பாராட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: