வியாழன், 9 மார்ச், 2023

வானதி சீனிவாசன் : அண்ணாமலையின் தைரியமான பேச்சும் வேகமான செயல்பாடுகளும் எப்பொழுதும் என்னை ஈர்ப்பவை

 நக்கீரன் : “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றோரின் நீண்ட நெடிய அனுபவம் என்பது ஒவ்வொரு கட்சியில் இருப்பவர்களையும் ஈர்க்கக் கூடியதுதான்” என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை சித்தாபுதூரில் பாஜக மகளிரணி சார்பில் 25 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “அண்ணாமலையின் தைரியமான பேச்சும் வேகமான செயல்பாடுகளும் எப்பொழுதும் என்னை ஈர்ப்பவை. அவர் நேற்று பேசியது ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் தலைவர்களைப் போல் இந்த கட்சிக்கும் நான் தலைவன் என்ற அர்த்தத்தில் தான் சொன்னார்.
அந்த பேட்டியை நீங்கள் முழுவதுமாக பாருங்கள். எனக்கும் நேற்று அண்ணாமலையின் பேட்டியை பார்த்தபோது என்ன இந்த பேட்டி இப்படி இருக்கிறதே என நினைத்தேன்.


ஆனால் உள்ளே சென்று பார்த்தபோது தான் புரிந்தது. அவர் கட்சியின் தலைவர். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட உதாரணம்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றோரின் நீண்ட நெடிய அனுபவம் என்பது ஒவ்வொரு கட்சியில் இருப்பவர்களையும் ஈர்க்கக்கூடியது தான். கொள்கை பிடிக்கவில்லை என்பது போல நிறைய இருந்தாலும் கண் முன்னால் இருக்கும் தலைமை எப்பொழுதும் உத்வேகமாக இருக்கும். அப்படி அவர் சொன்ன உதாரணம் தான் அது” எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: