வெள்ளி, 10 மார்ச், 2023

சீமானை ஏன் கைது செய்யவில்லை? பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி!

 மின்னம்பலம் - christopher :  சீமானை ஏன் கைது செய்யவில்லை? பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி!
வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழ்நாடு அரசுக்கு பிரஷாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடஇந்திய தொழிலாளர்கள் இந்தியில் பேசியதற்காக தூக்கிலிடப்பட்டதாகவும், கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கடந்த வாரம் இணையத்தில் பரப்பப்பட்ட போலி வீடியோக்கள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இருமாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் உயரதிகாரிகள் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.


பின்னர் அந்த வீடியோக்கள் அனைத்தும் போலி என்று தெரிய வந்த நிலையில், அவற்றை சமூகவலைத்தளங்களில் பரப்பியவர்களை கைது செய்து வருகிறது தமிழ்நாடு காவல்துறை.

எனினும் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் குறித்த செய்திகள் குறைபாடில்லை. இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் வியூகம் வகுத்தவரும் முன்னாள் ஐபேக் நிறுவனத்தின் தலைவருமான பிரஷாந்த் கிஷோர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை குறிவைத்து வெளியிட்ட ட்விட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்கூட்டம் ஒன்றில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக சீமான் பேசிய வீடியோவை இந்தி சப்டைட்டிலுடன் இன்று (மார்ச் 10) பதிவிட்டுள்ள பிரஷாந்த் கிஷோர், ”வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களை பரப்பிய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில், “கஞ்சா வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை ஒரு ஆயிரம் வட இந்திய தொழிலாளர்கள் மீது பதிந்து சிறையில் தள்ளினால் போதும். ஒருவாரத்திற்குள் அனைவரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று விடுவர்” என்று சீமான் பேசுகிறார்.

இந்திய அரசியல் களத்தில் பிரபலமாக உள்ள இந்த பிரஷாந்த் கிஷோரின் இந்த ட்வீட் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

நாம் தமிழர் ஆதரவாளர்களோ, “சீமானின் இந்த தமிழ்ப் பேச்சை பிரசாந்த் கிஷோருக்கு மொழிபெயர்த்து சொன்னது யார்? இந்த வீடியோவை பிரசாந்த் கிஷோருக்கு அனுப்பி வைத்து வெளியிடச் சொன்னது யார்? சீமானை இங்கே இருந்து எதிர்க்க முடியாதவர்கள் பீகாரில் இருந்து எதிர்க்க வைக்கிறார்கள்” என்று அவர்களே இதைப் பரப்பியும் வருகிறார்கள்.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: