மாலை மலர் : சென்னை அரசு பள்ளி மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சிறார் திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் திரையிடப்படுகிறது.
அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியை நாடகமாக நடித்தல், திரைப்படங்களுக்கு சுவரொட்டி வரைதல், விமர்சனம் தெரிவித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் சிறந்த 3,163 மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். அதில் வென்ற 152 மாணவர்கள் மாநில அளவில் நடந்த திரைப்பட விழாவுக்கு அழைக்கப்பட்டனர். இந்த விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள 152 மாணவர்களில் சிறந்த குறும்படங்களை தயாரிக்கும் 25 மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். குழந்தைகளுக்கான கற்பனைத்திறனை அதிகரிப்பதற்கான திட்டமாக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இதை செய்திருக்கிறோம்.
எந்த காலகட்டத்திலும் நுழைவுத்தேர்வு என்ற வார்த்தையே அரசு பள்ளிகளில் இருக்காது. 8-ம் வகுப்பு வரை குழந்தைகளின் கற்றல் குறித்த ஆய்வு மேற்கொள்வதற்காகதான் கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. சிறந்த மாணவர்களை 9-ம் வகுப்பில் இருந்து மாதிரி பள்ளிகளில் சேர்க்கும்போது, சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்படாத மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த முடியும். இதன்மூலம் மீண்டும் அவர்களையும் மாதிரி பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்குதான் அந்த அறிவிப்பு இருக்கிறது.
எந்த மாணவர்களையும் கைவிடுவது அரசின் நோக்கம் அல்ல. இதில் அதிக கவனம் செலுத்துகிறோம். இது நல்ல முடிவை தரும் என்று நம்புகிறோம். எனவே அந்த அறிக்கையில் வந்த வார்த்தையை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
அடுத்த கல்வியாண்டுக்குள் மாநில கல்விக் கொள்கை அறிக்கை சமர்ப்பித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஆசிரியர்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்பான நல்ல அறிவிப்புகள் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இருக்க வாய்ப்பு உள்ளது.
தர்மபுரியில் அரசு பள்ளி மாணவர்கள் செய்முறைத்தேர்வு முடித்ததும், பள்ளி அறையை சூறையாடிய வீடியோவை பார்த்தேன். இது ரொம்ப தவறான செயல். முன்பெல்லாம் மாணவர்கள் தேர்வை எழுதி முடிக்கும்போது கடைசி நாளில் பேனா மை தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இப்போது மேஜை, நாற்காலிகளை உடைப்பது என்பது கஷ்டமாக இருக்கிறது.
சம்பந்தப்பட்ட வீடியோவில் இருந்த மாணவர்களின் பெற்றோரை அழைத்து விளக்க கடிதம் எழுதி தர சொல்லி இருக்கிறோம். மாணவர்களை திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை எடுத்தால், நடவடிக்கை மட்டும் எடுக்கிறீர்களே என்ற விமர்சனமும் வந்துவிடுகிறது.
எனவே அவர்களுக்கு அறிவுரை வழங்கலாமா? அல்லது மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா? என்பதை ஓரிரு நாட்களில் தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக