tamil.oneindia.com - Vigneshkumar : திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. திருமாவளவனும் சில நாட்களுக்கு முன்பு, பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இப்போது திமுக தலைமையிலான கூட்டணி வலுவாகவே உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் உருவான இந்தக் கூட்டணி அதன் பிறகு பல்வேறு தேர்தல்களை இணைந்தே சந்தித்து வருகிறது.
இந்தக் கூட்டணியில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலேயே இருந்து வருகிறது. இதற்கிடையே சில நாட்களாகவே இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்படக் கூடும் என்று சிலர் கூறி வரும் நிலையில், நேற்று முக்கிய சம்பவம் நடந்துள்ளது.
மோடி ஜி சிறப்பாக ஆட்சி செய்கிறார்..இப்படி ஒரு பிரதமரை பார்த்தது இல்லை..செல்லூர் ராஜூ சொல்றதை பாருங்கமோடி ஜி சிறப்பாக ஆட்சி செய்கிறார்..இப்படி ஒரு பிரதமரை பார்த்தது இல்லை..செல்லூர் ராஜூ சொல்றதை பாருங்க
கூட்டணி
தமிழ்நாட்டில் எப்போதுமே திராவிட கட்சிகளின் கூட்டணி தான் பிரதானமாக இருக்கும். இப்போதும் கூட திமுக மற்றும் அதிமுக தலைமையிலேயே கூட்டணி உள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, அதன் பிறகு கூட்டணியில் இருந்து விலகியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட தனித்தே களமிறங்கியது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக கூட்டணிக்குள் பாமகவைக் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் திரைமறைவில் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
திருமா பேச்சு
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவிற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் சில பரபர கருத்துகளைத் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், "பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும்.. நிச்சயம் அந்த கூட்டணியில் விசிக இருக்காது. அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் அதில் இருக்க மாட்டோம். இந்தியாவில் யாருக்காவது இப்படிச் சொல்லும் தைரியம் இருக்கிறதா?
பாஜகவுக்கு சவால்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கு இடையிலான யுத்தம். கருத்தியல் ரீதியாக நான் சவால் விடுகிறேன். கருத்தியல் ரீதியாக எங்களுடன் மோதத் தயாரா? கருத்தியல் ரீதியாகச் சண்டை போடுவீர்களா? கருத்தியல் ரீதியாகச் சண்டைக்கு வந்தால்.. ஓட ஓட விரட்டி அடிப்போம்" என்று அவர் பரபர கருத்துகளைத் தெரிவித்தார். திமுக மற்றும் பாமக இடையே நெருக்கம் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், திருமாவளவனின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெற்றது.
வாழ்த்து சொன்ன திருமா
அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது என்ற போதிலும், திருமாவின் பேச்சு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. அதேபோல அதற்கு சில நாட்களுக்கு முன்பு தான், பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்றதற்கு திருமா வாழ்த்து தெரிவித்தார். அதிமுக கூட்டணி தலைவர்களே, இந்த விவகாரத்தில் எடப்பாடிக்கு எதுவும் சொல்லாத நிலையில், திருமாவளவனின் வாழ்த்து செய்தியும் பேசுபொருளானது. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் என்றும் சிலர் தெரிவித்தனர்.
அதிமுக பாஜக கூட்டணி
அதேபோல அந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக- பாஜக கூட்டணி குறித்தும் திருமா பேசியிருந்தார். அதாவது அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்து வெற்றிபெற பாஜக முயல்கிறது என்று குறிப்பிட்ட அவர், அதிமுக இல்லாமல் தனித்துப் போட்டியிட பாஜகவிற்குத் தைரியம் இல்லை என்றும் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் கூறியிருந்தார். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே கடுமையான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
செல்லூர் ராஜூ
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிவிட்ட நிலையில், பாஜகவும் வெளியேறும்பட்சத்தில் விசிக அந்த கூட்டணிக்கு செல்லலாம் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ விசிக உடனான கூட்டணி குறித்து வெளிப்படையாகவே கருத்து கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "அதிமுகவுக்கு யாராலும் நெருக்கடி தர முடியாது. ஆண்டவனே நினைத்தாலும் எந்தவொரு நெருக்கடியும் தர முடியாது. அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம். திருமாவளவன் எப்போதும் எங்கள் சகோதரர் போன்றவர். எனவே, அவர் கூட்டணிக்குள் வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வோம்" என்று அவர் தெரிவித்தார்.
முக்கியம்
ஏற்கனவே, திமுக கூட்டணியில் பாமக வருவதாகவும் இதனால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறலாம் என்று கூறப்படும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்தப் பேச்சு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலக வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்றே கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் பல மாதம் இருக்கும் நிலையில், கூட்டணி எப்படி அமையும் என்பதை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்கவே வேண்டும்.
Sellur Raju says ADMK will accepts VCK if it come into the alliance: VCK might break away alliance with DMK and form new alliance with ADMK.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக