மாலை மலர் : சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜேஷ் (38). இவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.
ஆசிரியர் பணி செய்து வந்த ராஜேசுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை சைதாப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
முதலுதவி அங்கு செய்யப்பட்டபிறகு ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போதே இதயத் துடிப்பு முற்றிலும் நின்று போய்விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது இதயத்துடிப்பு சீர் இல்லாத நிலையில் இருந்தது.
கிட்டத்தட்ட 7 முறை அவருக்கு சி.பி.ஆர். மற்றும் `ஷாக்' கொடுக்கப் பட்டது. அதன்பிறகு இதயத் துடிப்பு சீரானது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ராஜேசின் இதய ரத்த குழாயில் அடைப்பு மோசமான நிலையில் இருந்ததை இதயவியல் நிபுணர்கள் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டனர். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி ரத்தக்குழாயின் அடைப்பை சீர் செய்ய `ஸ்டெண்ட்' அமைக்கப்பட்டது. ஆஞ்சியோ பிளாஸ்டு சிகிச்சை முடிந்த வுடன் அவரது இதயத்துடிப்பு சீராகும் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் மீண்டும் ராஜேசுக்கு இதயத்துடிப்பு நின்று போனது. அதையடுத்து 30 நிமிடங்களுக்கு சி.பி.ஆர். செய்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசத்தில் இருந்த அவர் படிப்படியாக மீண்டு வந்தார். பின்னர் செயற்கை சுவாசம் இல்லாமல் சுயமாக மூச்சு விடவும், பேசவும் தொடங்கினார்.
இதையடுத்து செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு நடக்கவும், சாப்பிடவும் ஆரம்பித்தார்.
இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணி ராஜன் கூறியதாவது:-
ஆசிரியர் ராஜேசுக்கு 6 முறை இதயத்துடிப்பு நின்றுவிட்டது. ஒருமணிநேரத்தில் 5 முறை இதயத்துடிப்பு இல்லாமல் போனது. பின்னர் அதனை மருத்துவர் கள் சீராக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு ஒரு முறை இதயத்துடிப்பு நின்று விட்டது.
ஆனாலும் மருத்துவர்கள் தொடர்ந்து போராடினார்கள். அதிகபட்ச மருத்துவ முயற்சி எடுத்தனர். இதயத் துடிப்பு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நின்றுவிட்டால் மரணம் ஏற்பட்டுவிடும். ஆனால் இறுதிக்கட்டம் வரை மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
அவரது இதயத்துடிப்பு படிப்படியாக சீராகி முன்னேற்றம் ஏற்பட்டது மருத்துவத்துறையில் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்று நிகழ்வது அரிதாகும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக