செவ்வாய், 14 மார்ச், 2023

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்னவெனில்...'' - ரகசியத்தை உடைத்த உதயநிதி ஸ்டாலின்

 Hindu Tamil  : ''நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்னவெனில்...'' - ரகசியத்தை உடைத்த உதயநிதி ஸ்டாலின்
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியினை வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அரியலூர்: அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்துக்கு அனிதா பெயர் சூட்டப்படுவதால் கல்வி பயில வரும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு இருந்த எதிர்ப்பு குறித்து அறிந்து கொள்வார்கள் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவை தொடக்க நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (மார்ச் 14) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் தலைமையுரையாற்றினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிதம்பரம் எம்பி தொல்.திருமாவளவன் முன்னிலை உரையாற்றினார். மருத்துவ கல்வி இயக்குநர் சாந்தி மலர், எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், ம.பிரபாகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: "அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்துக்கு மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படுவதால், மருத்துவக்கல்வி பயில வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்புகள் குறித்து தெரிந்து கொள்வார்கள். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான ரகசியம் என்னிடம் உள்ளது என கூறி வந்தது என்னவெனில், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என்பதே.

நான் மோடியை சந்தித்தபோது கூட நீட் தேர்வு ரத்து செய்யும் வரை, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்தேன். தமிழகத்தில் அரசின் திட்டங்களான மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தில் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். அதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் என பல்வேறு திட்டங்களினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர் என அமைச்சர் உதயநிதி கூறினார்.

முன்னதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மக்களுக்கான மருத்துவ சேவையை குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி, தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மாணவி அனிதா பெயர் சூட்டப்பட்டவுள்ள கலையரங்கரத்தை பார்வையிட்டார்.

கருத்துகள் இல்லை: