வியாழன், 16 மார்ச், 2023

திருச்சி சம்பவங்கள் ... பஹ்ரைன் நாட்டிலுருந்து திரும்பிய திருச்சி சிவா பேட்டி

மாலைமலர் : திருச்சி: பக்ரைன் நாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பிய திருச்சி சிவா எம்.பி. இன்று எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற குழு அனுப்பிய 178 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக பக்ரைன் நாட்டிற்கு சென்று விட்டு இன்று திரும்பி இருக்கிறேன். நடந்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போதைக்கு நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை. நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன்.
தனி நபரை விட கட்சி தான் முக்கியம். ஆகவே பலவற்றை நான் பெரிது படுத்தியது இல்லை. யாரிடமும் புகார் சொன்னதும் இல்லை. தனி மனிதனை விட இயக்கம்தான் முக்கியம் என வளர்ந்தவன், இருப்பவன்.



நடந்த சம்பவங்கள் மிகுந்த மன வேதனை அளிக்கிறது. நான் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் என் வீட்டிலிருந்த வயதானவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் பேச வேண்டி இருக்கிறது.
மீண்டும் உங்களிடம் பேசுகிறேன். களைப்பில் இருக்கிறேன். மனச்சோர்வில் இருக்கிறேன். நான் எப்போதும் மனச்சோர்வு என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை. வயதானவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும்போது சொல்லத் தோன்றுகிறது. மாலையில் விரிவாக பேசுகிறேன். வேறு எந்த கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க விரும்பவில்லை. தயவுசெய்து எனது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வீட்டிற்குள் சென்ற அவர் போர்டிகோவில் நின்றிருந்த கார் சேதப்படுத்தப்பட்டதையும், காம்பவுண்டு சுவர் முகப்பு விளக்குகள் உடைந்து கிடப்பதையும் பார்த்தார்.
 

கருத்துகள் இல்லை: