வியாழன், 16 மார்ச், 2023

ஈவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை: மருத்துவர் பேட்டி!

 minnambalam.com - Kavi  : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மார்ச் 16) சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், டெல்லி சென்று கட்சித் தலைவர்களைச் சந்தித்துவிட்டு நேற்று மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இன்று காலை அவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து, விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். மருத்துவர்களிடம் இளங்கோவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாகக் கேட்டறிந்தார். பின்னர் அவரும், மருத்துவர் மூர்த்தியும் பேட்டி அளித்தனர்.

அபோது மருத்துவர் பேசுகையில், “2 நாட்கள் மருத்துவமனையிலிருந்து விட்டு வீடு திரும்புவார். அமைச்சரும் அவரை பார்த்தார். அவருக்கு இருமல் அதிகமாக இருந்தது. 2,3 நாட்களில் அது சரியாகிவிடும். ஆன்டிபாடி மருந்துகள் கொடுத்திருக்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு இன்று மாலை மாற்றப்படுவார்” என்றார்.

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “நேற்று மாலை லேசான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வைட்டல்ஸ் (உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், சுவாசம், நாடி துடிப்பு உள்ளிட்ட முக்கிய அறிகுறிகள்) எல்லாம் சரியாக இருக்கிறது. குணமடைந்து வருகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

கருத்துகள் இல்லை: