சனி, 5 நவம்பர், 2022

குடியுரிமைச் சட்டம்: “இலங்கை அண்டை நாடு இல்லையா? ஈழ தமிழர்களை பாஜக இந்துவாக நினைக்கவில்லையா?” - முரசொலி!

கலைஞர் செய்திகள்  : நாட்டுக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் குடியுரிமைச் சட்டத்தை மீண்டும் கையில் எடுக்காதீர் என முரசொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் குடியுரிமைச் சட்டத்தை மீண்டும் கையில் எடுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இது விபரீத விளைவுகளையே நாட்டுக்கும் ஏற்படுத்தும். இந்தியாவை ஆளும் பா.ஜ.க.வுக்கும் ஏற்படுத்தும். இந்த பின்விளைவுகளைக் கவனத்தில் கொண்டு குடியுரிமைச் சட்டத்தை அப்படியே கிடப்பில் போடுவதே நல்லது.‘‘அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்த பிறகே குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது” என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சொல்லி இருக்கிறது.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள் (தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) சார்பில் உச்சநீதிமன்றத்தில் 232 மனுக்கள் போடப்பட்டுள்ளன.
இம்மனுக்களின் மீது அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒன்றிய அரசின் சார்பில் 1,217 பக்கங்களுக்கு பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள்.‘‘கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம், குடிமக்களுக்கு ஏற்கனவே உள்ள உரிமைகளை பாதிக்கவில்லை. குடியேற்றக் கொள்கை, குடியுரிமை, குடியுரிமை விலக்கு ஆகியவை நாடாளுமன்ற அதிகார வரம்புக்குள் வருவதால் இவை தொடர்பாக பொதுநல மனுக்கள் மூலமாக கேள்விக்கு உட்படுத்த முடியாது. வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, குடியுரிமை போன்ற விவகாரங்கள் தொடர்பாக சட்டங்கள் இயற்றும் பரப்பு எல்லையை நாடாளுமன்றத்துக்கு உச்சநீதி மன்றம் வழங்கி உள்ளது. அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்த பிறகே, நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டம்: “இலங்கை அண்டை நாடு இல்லையா? ஈழ தமிழர்களை பாஜக இந்துவாக நினைக்கவில்லையா?” - முரசொலி!

‘அனைத்து விவகாரங்களையும்’ என்று பா.ஜ.க. அரசு சொல்வதே தவறானது என்பதை தி.மு.க. சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அந்த இடத்திலேயே எடுத்துரைத்து பதில் அளித்து விட்டார்.‘‘குடியுரிமைச் சட்டத் திருத்தம் என்பதே அசாம், திரிபுரா மாநிலங்கள் தொடர்புடையதாக மட்டுமே ஒன்றிய அரசு கருதுகிறது. அதனால்தான் அந்த மாநிலங்கள் தொடர்பாக மட்டும் தனித்தனி பதில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்கள். 1983 ஆம் ஆண்டு தொடங்கி அகதிகளாக தமிழ்நாட்டில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களையும் உள்ளடக்கியதுதான் இந்த விவகாரம். அத்தகைய இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்த பதில் மனுவில் எதுவும் இல்லை” என்று வாதிட்டுள்ளார் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்.

‘அனைத்து விவகாரங்களையும்’ பரிசீலித்திருந்தால் இவ்வளவு பிரச்சினையே வந்திருக்காதே. 232 ரிட் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய என்ன காரணம்? யாரையும் கலந்தாலோசனை செய்யாமல், யாரிடமும் கருத்துக் கேட்காமல் இத்தகைய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர முயற்சித்ததுதானே காரணம்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட்டதா? அனைத்து உறுப்பினர்கள் கேள்விகளுக்கும் முறையாகப் பதில் தரப்பட்டதா? மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டதா? மாநில அரசுகளின் கருத்துக்கள் எழுத்துப் பூர்வமாகக் கேட்கப்பட்டதா?
குடியுரிமைச் சட்டம்: “இலங்கை அண்டை நாடு இல்லையா? ஈழ தமிழர்களை பாஜக இந்துவாக நினைக்கவில்லையா?” - முரசொலி!

கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பெற்று அனுப்பியதே தி.மு.க.? அவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்களா? நாடு முழுவதும் சிறுபான்மையின மக்கள் போராடினார்களே! அவர்கள் கருத்து கேட்கப்பட்டதா? ஜனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள் அழைக்கப்பட்டு அவர்களது எண்ணங்கள் பதிவு செய்யப்பட்டதா? எதுவுமில்லை. பிறகு எப்படி அனைத்து விவகாரங்களையும் அறிந்திருக்க முடியும் பா.ஜ.க. அரசால்?

இந்திய நாடாளுமன்றத்தில் 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில்தான் இன்றைய பா.ஜ.க. அரசு திருத்தம் செய்கிறது. அனைவருக்கும் குடியுரிமை என்று சொல்லி இருந்தால் அதனை நாம் எதிர்க்கப் போவது இல்லை. சிறுபான்மையினரான இசுலாமியரைப் புறக்கணிக்கும் வகையில் குடியுரிமைச் சட்டத்தையே ஓரவஞ்சனை கொண்ட சட்டமாக மத்திய பா.ஜ.க. அரசு மாற்றிவிட்டது. இந்தியாவுக்குள் யார் எல்லாம் வரலாம், வந்தால் யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும் என்று இந்தச் சட்டம் வரையறுக்கிறது.
குடியுரிமைச் சட்டம்: “இலங்கை அண்டை நாடு இல்லையா? ஈழ தமிழர்களை பாஜக இந்துவாக நினைக்கவில்லையா?” - முரசொலி!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். அந்த நாட்டைச் சேர்ந்த இசுலாமியர்கள் நீங்கலாக மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். இசுலாமிய சிறுபான்மையினரை எதற்காகப் புறக்கணிக்க வேண்டும்? பாகிஸ்தானில் இருந்து, வங்க தேசத்தில் இருந்து, ஆப்கானிஸ்தானத்தில் இருந்து இசுலாமியர் நீங்கலான மற்ற மதத்தவர்கள் வரலாம் என்றால், அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்குத் தடை விதித்தது ஏன்? இதுதான் ஈழத்தமிழர்க்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். இதனால்தான் இந்தக் குடியுரிமைச் சட்டத்தை தமிழர்கள் அனைவரும் எதிர்த்தாக வேண்டும் என்று சொல்கிறோம். அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்றால் இலங்கை அண்டை நாடு இல்லையா?

இலங்கையைப் புறக்கணித்தது ஏன்? மற்ற அண்டை நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் வரலாம் என்றால், ஈழத்தில் இருக்கும் தமிழர்களை இந்துக்களாக இந்த பா.ஜ.க. அரசு நினைக்கவில்லையா?

தமிழகத்தில் சுமார் 70 ஆயிரம் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1983ஆம் ஆண்டு வந்தவர்கள் முதல் 2002ஆம் ஆண்டு வந்தவர்கள் வரை இதில் இருக்கிறார்கள். இவர்களால் மீண்டும் இலங்கைக்குச் செல்ல முடியாது. அவர்களுக்கு தாய்த்தமிழகம் தானே அடைக்கலம் தர முடியும்? அவர்களைப் புறக்கணிக்கும் இந்தச் சட்டத் திருத்தம் புறக்கணிக்கத் தக்கதே! பிறநாடுகளில் இருந்து வரும் இசுலாமியர்களையும் இந்தச் சட்டம் புறம்தள்ளுகிறது. இலங்கையில் இருந்து வரும் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும் புறம் தள்ளுகிறது. இதுதான் ‘அனைவருக்கும்’ பொதுவான சட்டமா என்பது தான் நமது கேள்வி. இந்தச் சட்டத் திருத்தம் உள்நோக்கம் கொண்டது. எனவே, இதனை மீண்டும் கையில் எடுக்காமல் இருப்பதே சரியானது.

கருத்துகள் இல்லை: