ஞாயிறு, 30 அக்டோபர், 2022

ம.பியில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. 3 குற்றவாளிகளின் வீடுகளை இடித்தது மாவட்ட நிர்வாகம்!

tamil.oneindia.com  - Halley Karthik  :  போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் வீடுகளை மாவட்ட நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளியுள்ளது.
ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டு பாலியல் பலாத்காரம்
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்(அக்.28) இந்த சிறுமி 7 பேரால் கடத்தப்பட்டுள்ளார். பின்னர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசப்பட்டுள்ளார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.
கைது
இதனையடுத்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சிறுமி கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு சிறார்களும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 5 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்னர் அவருக்கு போதை பொருளை கொடுத்துள்ளனர்.

இதனால் சிறுமி சுயநினைவை இழந்துள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவரின் வீடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருந்தால் அவை இடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மறுபுறம் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தையும், மாநில பாஜக அரசையும் கண்டித்து சாலை மறியல் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

போராட்டம்
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்த மூன்று பேரின் வீடுகளையும் மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளியுள்ளது. வழக்கு தொடர்பாக மேலும் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அதேபோல வழக்கில் வேகமாக செயல்படாமல் அலட்சியமாக இருந்ததாக சச்சோடா காவல்துறை ஆய்வாளர் ரவி குப்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பரவலாக பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் குணா மாவட்டத்தில் சச்சோடா பகுதியில் பள்ளி மாணவிகள் பள்ளி முடித்து பாதுகாப்ப வீடு திரும்ப முடியவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: