ஞாயிறு, 30 அக்டோபர், 2022

சோமாலியா இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் பலி - 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

தினத்தந்தி  :  இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
மொகாடிஷு(சோமாலியா),
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது.
அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், தலைநகர் மொகாடிஷுவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன.
இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதனை சோமாலியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் உறுதிபடுத்தினார்.

இதற்கு முன்னர் தலைநகர் மொகாடிஷுவில் 2017இல் நடந்த லாரி வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்திற்கு பின் நடைபெறும் மிகக்கொடூர குண்டுவெடிப்பு சம்பவமாக இது அமைந்துள்ளது.

இந்த கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: