வெள்ளி, 4 நவம்பர், 2022

சுப்பிரமணியம் சுவாமி உயிராபத்தில்? மோடி- அமித் ஷா மீது சுவாமி பகீர் புகார் பின்னணி!

minnambalam.com -    Aara  :  “ஹரேன் பாண்டியா மாதிரி என் மீது பிரதமர் மோடியும் அமித் ஷாவும் திட்டமிடவில்லை என்று நம்புகிறேன். இது உண்மையென்றால் என் நண் பர்களை நான் எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கும். எனக்கு என்ன செய்கிறீர்களோ அதையே திருப்பிச் செய்வேன் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த இரட்டையர்கள் ஆர்.எஸ்.எஸ்.சின் உயர் நிலையில் இருப்பவர்களையும் அவமானப்படுத்தியுள்ளனர்”
இப்படியாக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு பாஜகவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டது பாஜகவின் டாப் வட்டாரங்களிலும், ஆர்.எஸ்.எஸ்.சின் டாப் வட்டாரங்களிலும் அதிர்வை ஏற்படுத்தியது.

    I hope Modi & Shah are not planning a Haren Pandeya on me. If so I may have to alert my friends. Remember I give as good as I get. The duo have even bluffed those in the highest authority in RSS.
    — Subramanian Swamy (@Swamy39) October 31, 2022
இந்த ட்விட்டர் பதிவிட்ட சில நிமிடங்களில் சுதிர்தா மிஸ்ரா என்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு மாணவர், “அப்படியென்றால் ஹரேன் பாண்டியா கொலையில் நீங்கள் இரட்டையரை குற்றம் சாட்டுகிறீர்களா?” என்று சுவாமியிடம் கேள்வி கேட்கிறார்.அதற்கு உடனடியாக பதிலளித்த சுவாமி, “ஹரேன் பாண்டியா பாஜகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்” என்று மட்டும் பதிலளித்துள்ளார்.

யார் இந்த ஹரேன் பாண்டியா?

ஹரேன் பாண்டியா குஜராத் மாநில பாஜகவில் மோடியை விட சீனியர். மோடிக்கு முன்னர் குஜராத் முதல்வராக இருந்த கேஷுபாய் பட்டேலின் தீவிர ஆதரவாளர். இளவயதில் இருந்தே ஆர்.எஸ்,எஸ்.சில் பணியாற்றியவர்.

1998 முதல் 2001 வரை குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர். அரசியல் மாற்றங்களால் மோடி குஜராத் முதலமைச்சரான பிறகு ஹரேன் பாண்டியா உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு வருவாய்த் துறை அமைச்சரானார்.
Plan to kill me Swami complains against Modi and Amit Shah

2002 இல் மோடி ஆட்சியில் நடந்த குஜராத் கலவரத்தின்போது இரு எதிர் தரப்புகளையும் உட்காரவைத்து அமைதிப் பேச்சு நடத்தியவர் ஹரேன் பாண்டியா மட்டுமே. இதை குஜராத்தின் மற்ற அமைச்சர்கள் எதிர்த்தனர் என்று அப்போது ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மேலும் 2002 பிப்ரவரி 27 ஆம் தேதி அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி தனது வீட்டில் மாநில அரசு அதிகாரிகளை அழைத்து, இந்து மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அதற்கு தடையாக இருக்காதீர்கள் என்று அறிவுறுத்தினார் என நரேன் பாண்டியாதான் பத்திரிகைகளுக்கு தகவல் அனுப்பினார் என்று 2007 இல் அவுட் லுக் செய்தி வெளியிட்டது.

இதற்கிடையே 2003 மார்ச் 26 ஆம் தேதி காலையில் வாக்கிங் சென்ற ஹரேன் பாண்டியா அகமதாபாத் லா கார்டனில் தனது கார் அருகே ஐந்து துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

2007 ஆம் ஆண்டில், சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அஸ்கர் அலி உள்ளிட்ட 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்து ஆயுள் தண்டனை மற்றும் பத்தாண்டு சிறை தண்டனை வழங்கியது.

குற்றவாளிகள் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் சென்றபோது, 29 ஆகஸ்ட் 2011 அன்று, பாண்டியாவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் குஜராத் உயர் நீதிமன்றத்தால் கொலைக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஜூலை 2019 இல், உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றியது. ஹரேன் பாண்டியா கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதுதான் ஹரேன் பாண்டியா கொலை வழக்கின் பின்னணி.

இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி இப்போது தானும் ஹரேன் பாண்டியா போல கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக மோடி அமித் ஷா பெயர்களை பகிரங்கமாக குறிப்பிட்டுக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: